பாட்டும் வாசிப்பும் !

சென்னை நங்கநல்லூரில் உள்ள ஹிந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில்  பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியான ஏ.ரேவதி.
பாட்டும் வாசிப்பும் !

சென்னை நங்கநல்லூரில் உள்ள ஹிந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியான ஏ.ரேவதி. பாடிக்கொண்டே மிருதங்கம் வாசித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் விருதினைப் பெற்று சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

""எனக்கு 13 வயதாகும்போது, எங்கள் பள்ளியில் "ஐக்கிய வணக்கம்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

ஓராண்டு நடைபெற்ற அந்த நிகழ்வின்மூலம் நான் சில கர்நாடக இசைப் பாடல்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு பாட்டுக் கற்றுக் கொடுத்த ஆசிரியர். ""உன் குரல் வளம் நன்றாக இருக்கிறது. நீ தொடர்ந்து பாட்டு கற்றுக் கொள்''என்றார்.

அதைத்தொடர்ந்து, கர்நாடக இசையை முறைப்படி கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். இசைப்பள்ளிக்குச் செல்லும்போது, அங்கே சில மாணவர்கள் மிருதங்கம் வாசிப்பதை பார்த்து, மிருதங்கத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் பள்ளியின் இசை ஆசிரியரான குருவாயூரப்பன் குருவிடம் மிருதங்கமும் வாசிக்க கற்றுக் கொள்ளத் தொடங்கினேன்.

அதைத்தொடர்ந்து, என் குடும்பத்தினர் ஊக்குவித்ததில், நிறைய ஆன்மிகப் பாடல்கள் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் தற்போது 80- க்கும் மேற்பட்ட தெய்வ வழிபாட்டு பாடல்களை சரளமாக பாடுவேன்.

இந்நிலையில், பாடிக் கொண்டே மிருதங்கம் வாசிக்க எனக்கு ஆசை ஏற்பட்டது. அந்த சமயத்தில் கரோனா வந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால், கிடைத்த நேரத்தையெல்லாம் வீணடிக்காமல், பாடிக் கொண்டேமிருதங்கம் வாசிக்க முயற்சி செய்தேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும், விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தேன். இப்போது, பாட்டும் - வாசிப்பும் ஒரு சேர கைவரப்பெற்றிருக்கிறேன்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பலரும் மிருதங்கம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது சாதாரண விஷயமல்ல என்று பாராட்டினார்கள். அப்போதுதான் என் அம்மாவுக்கு இந்த முயற்சியை சாதனையாக்கினால் நன்றாக இருக்குமே என்று தோன்ற, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்ள அணுகினார்கள்.

அவர்களும், வீட்டிலிருந்தபடியே ஆன் லைன் மூலம் எனக்கு சாதனைக்கான நேரத்தை ஒதுக்கினார்கள். குறிப்பிட்ட தேதியில் அனுமதியும் தந்தார்கள். அதில் நான், ஏ.ஆர்.ரகுமான் இசைத்திருந்த "வந்தே மாதரம்' பாடலை நான் என் தீமாக எடுத்துக் கொண்டு, அதை மிருதங்கம் வாசித்துக் கொண்டே 4 நிமிடம் 22 விநாடிகளில் பாடி முடித்தேன். அதற்காகத்தான் எனக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டின் சாதனையாளர் விருது கிடைத்திருக்கிறது.

அதே உத்வேகத்தில், மேலும் கந்தசஷ்டி கவசம், திருப்புகழ், கணபதி தாளம் போன்ற கடினமான பாடல்களையும் கற்றுக் கொண்டேன்.

மேலும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளிலும் பாடல்களை சரளமாக பாடுவேன். வருங்காலத்தில், தமிழ்க் கடவுள்களின் பாடல்களை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்பதே எனது ஆசை'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com