அனுபவங்களே வெற்றிக்கான விதை!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.  அகாதெமியில் 14-ஆண்டுகளாக கல்வி ஆலோசனை மற்றும் நிர்வாக பணியில் அனுபவம் பெற்றவர்  உலகம்மாள்.
அனுபவங்களே வெற்றிக்கான விதை!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.  அகாதெமியில் 14-ஆண்டுகளாக கல்வி ஆலோசனை மற்றும் நிர்வாக பணியில் அனுபவம் பெற்றவர்  உலகம்மாள்.

மாற்றுத்திறனாளியான இவர், பட்டயங்கள் முடித்தும் கல்வியின் தொடர்பை துண்டித்துக் கொள்ள விருப்பமில்லாமல் மாணவர்கள் சமூகத்திற்காக உழைக்க வேண்டும் என்று நினைத்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று 25ஆயிரம் மாணவர்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கியுள்ளார். பெண்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கி வருகிறார். தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு முதன்மை பயிற்சியாளர். இவர், தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:  

மாணவர்கள்- மற்றும் பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் குறித்து? 

கரோனா ஊரடங்குக்கு பின்பு சமூகத்தின் சிந்தனையே மாறியுள்ள கட்டத்தில் இருக்கிறோம். அதாவது பயம், பதட்டம், மன அழுத்தம், மனச்சோர்வு என பலவிதமான உளவியல் சிக்கலுக்கு ஆளாகி விட்டோம். 

இந்த விடுமுறை காலங் களில் அதிகமான குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் மூழ்கிவிட்டனர். ஓரளவு தொழில்நுட்பம் தெரிந்த பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்துகிறார்களா? என்று அறிந்து கொள்ள முடியும். 

தொழில்நுட்பங்கள் தெரியாத பெற்றோர் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவும் முடியாது.  குழந்தைகள் பாலியல் குறித்து ஏதாவது சந்தேகம் கேட்கும் போதும். இணையத்தில் ஏதாவது பார்க்கிறார்கள் என்று அறியும்போது அவர்களை திட்டாமல், விளைவுகளைப் பற்றி பொறுமையாக எடுத்துக் கூற வேண்டும். அவர்களது சந்தேகங்களைத் தெளிவுப்படுத்துதலும் அவசியம். 

மாணவர்களுக்கு நான் சொல்வது உன் வாழ்க்கையில் திட்டமிடுவதோடு, நேர மேலாண்மையையும் கடைப்பிடிக்க வேண்டும். மதிப்பெண்களோடு கூடிய ஆளுமைத் திறனையும் வளர்ப்பது இன்றியமையாதது. 

தலைமைப் பண்பு அனைவரிடமும் உள்ளது. ஆனால் வெளிப்படுத்தும் விதத்திலேயே நம்முடைய ஆளுமையை மற்றவர்கள் அறிய முடியும் என்று மாணவர்கள் புரிந்து கொள்வது முக்கியம். 

பெற்றோர், ஆசிரியர்களுக்கு நான் சொல்ல நினைப்பது  குழந்தைகளுக்கு பிரச்னைகளை கலந்து ஆலோசனை செய்வது? எவ்வாறு எதிர் கொள்வது? வந்த பின் எப்படி கடந்து செல்வது போன்ற விஷயங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். தோல்வியை எதிர்கொள்ளும் போது, வெற்றிக்கான வித்தையை அனுபவங்கள் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்ளலாம் என்று ஊக்கப்படுத்துவதும் அவசியம். அறநெறி என்பது ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் மிக முக்கியம். அதனைக் கடைப்பிடித்தாலே, ஒரு தனி மனிதனாக நான் யார்? என்ன செய்ய வேண்டும்? எதற்குச் செய்ய வேண்டும்? குடும்பத்திற்கான பொறுப்புகள் என்று அனைத்தையும் அறிந்து ஆற்ற வேண்டிய கடமைகளை அறநெறியுடன் ஆற்ற முடியும் என்று குழந்தைகளை புரிய வைப்பது அவசியம். 

போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் (யுபிஎஸ்சி), டி.என்.பி.சி மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ஆர்.ஆர்.பி போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முதலில் போட்டித் தேர்வுகள் குறித்த யதார்த்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பயிற்சியைத் தொடங்கும் முன்பே, பாடத்திட்டம், 

பரீட்சைக்குத் தேவையான கால அவகாசம் மற்றும் செலவுகள் குறித்தும் முழுமையாக தெரிந்து ஈடுபட்டால் உளவியல் சிக்கல்கள் ஏற்படாது. பொதுவாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது ஏற்படும் நிதிச் சிக்கலோடு, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் மிகவும் முக்கியமானது. தேர்வில் வெற்றி பெற எடுத்துக் கொள்ளும் கால அவகாசமும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் போட்டித் தேர்வாளர்களுக்கும், தேவைப்பட்டால் அவர்களது பெற்றோருக்கும் வழிகாட்டுவதோடு, ஆலோசனையும் வழங்குகிறேன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு; சொல்ல நினைப்பது? 

மாற்றுத்திறனாளிகள் என்ற எண்ணத்தை நம்முடைய மனதிலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும். உடல் அளவிலும் மனதளவிலும் நிறைய கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதைத்தாண்டி எப்படி வெளியே வருவது என்று யோசித்து பார்க்க வேண்டும். நிறைய இடங்களில் பணம் இருந்தால் தான் எதுவும் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு நாம் வெளியே வந்து பேசும் போதும், நமது திறமைகளை வெளிப்படுத்தும் போதும் நமக்கு உதவுவதற்கு சிலர் தயாராக இருக்கின்றனர். அப்படி உதவி செய்பவர்களை அடையாளம் காண்பது தான் கஷ்டம்; கண்டுப்பிடித்துவிட்டால் நம் வாழ்க்கை அடுத்த நிலையை நோக்கி பயணிக்கும். நாம் செய்யும் செயல்களுக்கு உடனடியாக அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அது தவறு நாம் தொடக்கம் முதல் நல்ல விதமாக செயல்பட்டுக் கொண்டிருந்தால் தானாகவே அங்கீகாரம் தேடி வரும். மாற்றுத்திறனாளிகள் என்றால் மாற்றும் திறனாளிகள் அந்த வார்த்தையை ஒரு மேடை விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்தினேன் இப்போது அந்த வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com