சின்னத்திரை மின்னல்கள்!
By - ஸ்ரீ | Published On : 22nd December 2021 12:00 AM | Last Updated : 22nd December 2021 12:00 AM | அ+அ அ- |

மீண்டும் வெண்பா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் ஃபரினா ஆசாத். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமான இவர், பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான "தறி' தொடர் மூலம் நடிகையானார். தற்போது வில்லியாக மிரட்டி வருகிறார்.
ஃபரினா கர்ப்பமாக இருந்த நிலையிலும் தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். பிரசவ காலத்தின் இறுதி நாட்களில் அவரால் நடிக்க முடியாது என்பதால் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது போன்று காட்டப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் ஃபரினா ஆசாத்துக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்து தானும் மகனும் நலமாக இருப்பதாகவும், தனக்கு சுகப்பிரசவம் தான் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன பரீனா தற்போது பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கில் கலந்துகொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களையும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் விரைவில் வெண்பாவை காணும் ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.
புதிய துளசி!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் "வானத்தைப்போல' தொடரும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அண்ணன்தங்கையின் பாசத்தை மையமாகக்கொண்ட இத்தொடரில், அண்ணன் சின்ராசுவாக நடிகர் தமன்குமாரும், தங்கை துளசியாக நடிகை ஸ்வேதா கெல்கேவும் நடித்து வருகின்றனர்.
"வானத்தைப்போல' தொடர் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்வேதா. திடீரென, "சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் தொடரில் இருந்து விலகுவதாகவும் இதுவரை, தன்னை துளசியாக ஏற்றுக்கொண்டதற்கு நன்றி' என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு பதில், துளசியாக நடிகை "மான்யா' நடிக்கிறார். இவர், ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல தொடரான "பாக்யரேகா' தொடரில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து, நடிகை மான்யா தனது இன்ஸ்டா பக்கத்தில், ""எனது முதல் தமிழ் சீரியலைப் பாருங்கள்.
எனது புதிய பயணத்திற்கு உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் தாருங்கள்'' எனபதிவிட்டிருக்கிறார்.