கதை சொல்லும் குறள் - 59: தியாகம்!

புதுதில்லியின் மையப்பகுதியில் அமைந்திருந்தது "சாம்ராட்' என்கின்ற அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல். மறுநாள் புதிய வருடம் பிறக்க இருந்தது.
கதை சொல்லும் குறள் - 59: தியாகம்!

புதுதில்லியின் மையப்பகுதியில் அமைந்திருந்தது "சாம்ராட்' என்கின்ற அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல். மறுநாள் புதிய வருடம் பிறக்க இருந்தது. அதனால் ஹோட்டல் மின்சார சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவையும் தாண்டிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன.

மணி இரவு பத்தை நெருங்கத் தொடங்கியிருந்த பொழுது, வரிசை வரிசையாக கார்கள் வரத் தொடங்கின. நகரத்தின் அதிமுக்கியத்துவப் பிரமுகர்கள் காரைவிட்டு இறங்கி ஹோட்டலுக்குள் பரபரப்பாகச் சென்றனர்.

பிரபல கஜல் வித்வான் முகமதுகானின் பாட்டு உலகப் பிரசித்திப் பெற்றது. பெருங்கூட்டத்தின் கரவொலி அவ்வப்பொழுது எழுந்து கூரை பெயர்ந்து விழுந்துவிடுமோ என்ற மயக்கத்தை ஏற்படுத்தியது.

முகமதுகானின் கூடவே ஓர் இளைஞன் பின்பாட்டு பாடிக் கொண்டிருந்தான். வெகு நேர்த்தியான குரல், ஆளும் பார்ப்பதற்கு அழகனாக இருந்தான்.

அந்தக் கூட்டத்தின் நடுவே இரு கண்கள் அந்த இளைஞனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. கஜல் கச்சேரி முடிந்தபொழுது மணி நடு ஜாமத்தைத் தாண்டி இருந்தது.

""யூசூப்'' என்று தன்னை மெல்லிய குரலில் யாரோ அழைப்பதை உணர்ந்து அந்த இளைஞன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

""இப்படி வா'' என்று அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் அவனை அழைத்துக் கொண்டு போனார்.

""இந்தா இந்த விசிட்டிங் கார்டைப் பிடி, நாளைக்கு காலை பதினொரு மணிக்கு என்னை இந்த விலாசத்தில் வந்து பார். ஒரு உன்னதமான பொறுப்பு உன்னிடம் வந்து சேரப் போகிறது'' என்றார் அந்த மனிதர்.

அண்டை நாட்டில் அமைந்திருக்கும் மிலிட்டரி அகாதெமியில், ராணுவ அதிகாரி ஆவதற்கான பயிற்சி படிப்பில் ஆசிம் ஈடுபட்டிருந்தான். யார் இந்த ஆசிம்? வேறு யாருமில்லை இளைஞன் யூசூப்தான் இப்படிப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தான். எதற்காக என்றால் ஒற்றனாக, தன்னுடைய தாய்நாட்டுக்கு அண்டைநாட்டில் நடைபெறும் சதித் திட்டங்களை, அரங்கேற்றம் செய்யத் தீட்டப்படும் கலவரங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து சொல்வதற்காகத்தான். 

அன்று யூசூப்பை வந்து சந்திக்கச் சொன்னார் அதிகாரி குணால்.

""யூசூப், உன்னை ஏன் அழைத்தேன் தெரியுமா?''

""தெரியாது சொல்லுங்க ஐயா''

""நேற்று உன்னுடைய உருது மொழியின் உச்சரிப்பைக் கவனித்தேன். அவ்வளவு கனகச்சிதமாக அண்டை நாட்டில் பேசுவது போலவே இருந்தது. அதைத் தவிர நீ இளைஞன், இந்தப் பணிக்கு ஏற்றவன் என்பதைக் கணித்தேன்.

""எந்தப் பணிக்கு ஐயா?''
""ஒற்றர் பணிக்கு''
""ஐயா..''
""ஏன் யூசூப் அதிர்ச்சியாக இருக்கிறதா? ஒற்றர் பணி ஒரு உன்னதமான பணி. தாய்நாட்டை, பகைவர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணி. நாட்டு மக்களுக்கு நேர இருக்கும் அபாயத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் பணி.

என் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா'' என்று தெரியவில்லை.

""அவர்களிடம் பேசி நான் சம்மதிக்க வைக்கிறேன்''. 

மட மடவென்று காரியங்கள் அரங்கேறின. முதலில் யூசூப்பின் பெற்றோர் ஒத்துழைப்பைத் தர மறுத்துவிட்டனர். பிறகு பல வகைகளில் பேசி குணால் அவர்களைச் சம்மதிக்க வைத்தார். இடைப்பட்ட காலத்தில் யூசூப்புக்குத் திருமணத்தை நடத்தி வைத்தனர். ஒரு வருடத்தில் அவனுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

இந்தியப் புலனாய்வுத் துறையில் சேர்ந்து யூசூப் பயிற்சி பெற்றான். அவனுடைய பெயர் ஆசிம் அலிகான் என்று மாற்றம் செய்யப்பட்டது. அந்நியநாட்டில் ஏற்கெனவே ஐம்பது வருடங்களாக வசித்துவரும் இந்திய ஒற்றனான பஷீரின், தங்கை மகன் என்று பதிவு செய்யப்பட்டு ஆசிம் எதிரிநாட்டுக்குச் சென்று ககூல் மிலிட்டரி அகாதெமியில் சேர்ந்தான். யூசூபின் மனைவிக்குக்கூட அவன் ஒற்றனாகச் சென்றது அண்டைநாட்டுக்குச் சென்றது தெரியாது. துபாயில் ஒரு பெரிய வேலையில் இருக்கிறான் என்றே அறிந்திருந்தாள்.

கைதேர்ந்த ஒற்றன் ஒருவனுக்கு சாம, தான, தண்ட, பேத கலைகளில் வல்லவனாக இருப்பது அவசியமாகிறது. தன்னுடைய அர்த்த சாஸ்த்திரத்தில், சாணக்கியர், அரசர் சந்திரகுப்த மவுரியாவிடம் ஒரு நல்ல ஒற்றனுக்கு வேண்டிய திறமைகளைப் பற்றிக் கூறியதை இப்படி எழுதியிருக்கிறார்.

சாம என்றால் முதலில் பகைவனோடு சமரசமாகப் பழகி உண்மைகளை அறிவது, தான என்பது பகைவனோடு நெருங்கிப் பழகி அவனுக்குப் பரிசுப் பொருட்கள், பணம் முதலியவற்றைக் கொடுத்து மகிழ வைத்து சதித் திட்டங்களைத் தெரிந்து கொள்வது. தண்ட என்றால் தன் பலத்தைக் காட்டி, தண்டித்து உண்மையை அறிவது, பேதம் என்று வரும்பொழுது பிரிவினையை உண்டாக்கி விஷயத்தைக் கரப்பது என்ற எல்லா வகைகளிலும் தேர்ந்தவனாக ஒரு ஒற்றன் இருக்க வேண்டும்.

பகைவர்களின் கையில் அகப்பட்டுக் கொண்டால் எவ்வளவு துன்புறுத்தினாலும் உண்மையைச் சொல்லக்கூடாது; அதுமட்டும் அல்ல, தன்னுடைய இன்னுயிரை எந்த நேரத்திலும் இழக்க அஞ்சக்கூடாது. இப்படிப்பட்ட எல்லா விஷயங்களிலும் ஆசிம் தலைசிறந்து விளங்கினான்.

இன்று ஆசிம் எதிரிநாட்டின்  உயர் பதவிக்கு உயர்ந்து விட்டான். தன் குடும்பத்தினரோடு கடிதப் போக்குவரத்துக்குக் கூட அவனால் வைத்துக் கொள்ள முடியவில்லை.

ஆசிம் தனக்குப் பாதுகாவலராக இருந்த ஒற்றர் மூலமாக அவனுடைய பெண் கல்லூரியில் படிப்பதை அறிந்து கொண்டான்.

ராணுவ அதிகாரிகளுக்குச் சந்தேகம் வராதபடி மற்றொரு மேஜர் ஜெனரலின் மகளை ஆசிம் மணந்து கொண்டான். அவளின் மூலம் அவனுக்கு  ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

தன் தாய்நாட்டுக்குத் தேவையானத் தகவல்களை ஆசிம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அவனால் பல அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. எல்லைப் பகுதியில் நடக்க இருந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன. தீவிரவாதிகளின் பின்னணிகள் அறியப்பட்டு, அவர்களைப் பிடித்தனர், சிறையில் அடைக்கப்பட்டனர்.

காலம் நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருந்தது, இந்திய ராணுவம் மற்றொரு ஒற்றனை எதிரிநாட்டுக்கு  அனுப்ப! வந்த அந்தப் புதிய ஒற்றன் அந்நாட்டு ராணுவத்திடம் மாட்டிக் கொண்டான்.

""டேய் உண்மையைச் சொல்லிவிடு, உன்னைச் சேர்ந்தவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள்?''

""சார், எனக்குத் தெரியாது''

""ஐயோ!'' வலியில் அலறினான் அந்தப் புதிய ஒற்றன்.

அவனுடைய நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. நிர்வாணமாக ஐஸ்கட்டியின் மீது படுக்க வைக்கப்பட்டான். இதைத் தவிர எலெக்ட்ரிக் ஷாக் வேறு கொடுக்கப்பட்டன.

எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் உண்மையைச் சொல்லக்கூடாத அந்தப் புதிய ஒற்றன் வாயிலிருந்து உதிர்ந்த பெயர் ஆசிமாக இருந்தது.

மொத்த அந்நியநாட்டு  அதிகாரிகளும் அதிர்ந்துப் போயினர்.

""என்னது ஆசிமா?'' உடனே அவரைப் பிடிக்க ராணுவம் விரைந்தது.

ஆசிமின் அறைக் கதவைத் திறந்து அவரைப் பிடிக்கப் பாய்ந்தபொழுது...

தன்னைத்தானே சுட்டுக்கொண்டு ஆசிம் இறந்துக் கிடந்தான்.

தன்னுடைய வாழ்க்கையைத் தன் தேசத்திற்காகவே, தன்னுடைய தேசத்தின் மக்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணிக்கும் ஆசிமைப் போன்ற ஒற்றர்களாலேயேதான் நம் தேசம் தழைத்து ஓங்கி நிற்கிறது.

ராணுவ வீரர்களுக்காவது போர் நிகழ்ந்தால் மட்டுமே உயிருக்கு ஆபத்து, ஆனால் ஒற்றர்களுக்கோ ஒவ்வொரு விநாடியும் போராட்டம் நிறைந்ததுதான்.
வாழ்க ஒற்றர்கள், அவர்களின் ஒப்பற்ற பணி.


ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்த தில்.

(குறள் எண்: 583)

பொருள்:  நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com