அம்மா - மகளின் அரிய படைப்பு!

அம்மா - மகளின் அரிய படைப்பு!

சி.கே.கரியாலி. காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர்; தில்லியில் பிறந்து வளர்ந்தவர். தில்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் முதுகலைப் பட்டமும்,

சி.கே.கரியாலி. காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்டவர்; தில்லியில் பிறந்து வளர்ந்தவர். தில்லி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் முதுகலைப் பட்டமும், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மகளிர் குறித்த ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். தமிழகத்தின் கூடுதல்  தலைமை செயலாளராகவும் பணியாற்றியவர்.  ஓய்வு பெற்ற பிறகும் சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 

குறிப்பாக திருநங்கையர்களின் மேம்பாட்டில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சாதனை புரிந்த திருநங்கையர்கள் குறித்து அவர் தன் மகள் பிரியதர்ஷினியுடன் இணைந்து எழுதிய  "டிரான்ஸ்ஜெண்டர்ஸ் இன் இந்தியா- அச்சீவர்ஸ் அண்ட் சர்வைவர்ஸ்" என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியானது. தற்போது ஆஸ்திரேலியா சென்றிருக்கும் சி.கே.கரியாலி மகளிர் மணிக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் தொகுப்பு:

திருநங்கையர் மீது கரிசனம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?"

நான் சிறு வயதில் தில்லியின் பழைய தில்லி பகுதியில் உள்ள துருக்மான்கேட் என்ற ஏரியாவில் வசித்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் ஆபா ஹாசன் என்ற திருநங்கை வசித்து வந்தார். அவர், அந்தப் பகுதியில் வசித்த அனைவரிடமும் நட்புடன் பழகுவார்; தேவையான உதவிகளை செய்வார். 1957-இல் அவர் பாகிஸ்தானுக்குச் சென்று விட்டார். 2000-ஆம் ஆண்டில் அவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டபோது மனசு மிகவும் கனத்தது.  காஷ்மீரில் லட்சுமி என்ற எனது உறவினர் ஒருவரின் உடலில் ஆண்களுக்குரிய மாற்றங்கள் ஏற்பட, அவர் மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு லட்சுமிகாந்த் ஆக மாறிவிட்டார். 

சின்ன வயசில், ஆபாவின் பாசத்தால் ஈர்க்கப்பட்ட என்னால், லட்சுமி காந்த் ஆன லட்சுமியின் கதையைக் அறிந்த என்னால், பிற்காலத்தில் திருநங்கையர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் மீது எனக்கு பச்சாதாபம் ஏற்பட்டு, அவர்களுக்கு என்னால் எந்த வழிகளில் எல்லாம் உதவ முடியுமோ அப்படியெல்லாம் உதவ ஆரம்பித்தேன்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, இரு திருநங்கையரை பணியில் அமர்த்தியது பரபரப்பினை ஏற்படுத்தியதே?

ஆமாம்! நான் 2001 முதல் 2004 வரை மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, ஒரு நாள் இரண்டு திருநங்கையர் என்னை சந்தித்தனர். "நாங்கள் இரண்டு பேரும் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பெண்களாகி இருக்கிறோம். ஆனால்,  எங்களை பலரும் பெண்களாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எங்களுக்கென்று ஒரு அங்கீகாரம் வேண்டும்" என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களின் நிலைமையைப் பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த சமயத்தில் மகளிர் மேம்பாட்டுக் கழகத்தில் கடைநிலை ஊழியர்களுக்கான இரண்டு பணி இடங்கள் காலியாக இருந்தன. எனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை அந்த வேலைக்கு தற்காலிகமாக அமர்த்தினேன். அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. உற்சாகமாக தங்கள் வேலையைப் பார்த்தார்கள். 

ஒரு கட்டத்தில் நான் வேறு பொறுப்புக்கு மாற்றப்பட்டேன். அதன் பின் சுனாமி தாக்குதலை அடுத்து, சுனாமி நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்ய அனுப்பப்பட்டேன். சில வருடங்களுக்குப் பின் அந்த திருநங்கையர்கள் பற்றி விசாரித்தபோது, நான் பணிமாற்றம் செய்யப்பட்ட உடனேயே, அவர்களை தற்காலிக வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக அறிந்து  வேதனைப் பட்டேன். அதன் பின் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியாது போய்விட்டது. 

திருநங்கையர் பற்றிய புத்தகம் குறித்து?

அந்த இரண்டு திருநகையர்க்கு இழைக்கப்பட்ட அநீதி என்னை மிகவும் உறுத்தியது. அரசாங்கமும் சரி, சமூகமும் சரி திருநங்கையர்களிடம் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய அழுத்தமான கருத்து. எனவே, திருநங்கையர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, அவர்களிடம் பரிவுடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்த விரும்பினேன். அத்துடன் பல்வேறுவிதமான தடைகளைத் தாண்டி சாதனை படைத்த திருநங்கைகளின் வெற்றிக் கதைகளையும் பதிவு செய்ய ஆர்வம் கொண்டேன்.
இந்த வெற்றிக் கதைகள், மக்கள் மனதில் அவர்களைப் பற்றிய பாசிடிவான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைத்தேன். அதற்காக திருநங்கையர் பலரை சந்தித்துப் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். அவற்றின் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதினேன். என் மகள் பிரியதர்ஷினி நுண்கலையில் பட்டம் பெற்ற பின், ஆஸ்திரேலியா சென்று நிர்வாகவியல் படித்தவர். அவருக்கும் சமூகப் பணிகள் செய்வதில் ஆர்வம் அதிகம். அவருடன் சேர்ந்துதான் நான் இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறேன். நாங்கள் நடத்திவரும் அறக்கட்டளை மூலமாகவே இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. புத்தக விற்பனை மூலமாகக் கிடைக்கும் பணம் கூட சமூகப் பணிகளுக்காகவே செலவிடப்படும்.

யாருடைய வெற்றிக் கதைகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன?

பத்மஸ்ரீ பட்டம் பெற்ற பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ், ஆஸ்திரேலியாவிலும், லண்டனிலும் இதழியல் படித்து, பணியாற்றிய  மீடியாவிலும், அரசியலிலும் பிரபலமாக விளங்கும் அப்சரா ரெட்டி,  பல்வேறு தடைகளையும் வெற்றிகரமாக சமாளித்து, தமிழ் நாடு காவல்துறையில் சேர்ந்து சப்-இன்ஸ்பெகடராகப் பணியாற்றும் பிரித்திகா யாஷினி, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்தியஸ்ரீ சர்மிளா, முதல் திருநங்கை இஞ்ஜினியரான கிரேஸ் பானு,  மதப் பிரச்சாகராக இருக்கும் திருநங்கை எஸ்தர் பாரதி, தன்னார்வத் தொண்டு நிறுவனம் துவக்கி, சக திருநங்கையர் நலனுக்காகப் பாடுபட்டுவரும் நூரி அம்மா, சுதா  மற்றும் ஓல்கா பரோன், சமூக செயற்பாட்டாளரான ஸ்வேதா சுதாகர், திரைப்படத் துறையில் பணியாற்றிவரும் ஜீவா சுப்ரமணியன், மாடலிங் துறையில் பிரபலமாக விளங்கும் நமிதா அம்மு என பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்திருக்கும் திருநங்கையர்களைப் பற்றியும், அவர்கள் சந்தித்த சவால்கள், சங்கடங்கள் பற்றியும், அவற்றை அவர்கள் எப்படி ஜெயித்தார்கள் என்றும் விரிவாகச் சொல்லி இருக்கிறேன். 

இவற்றைத் தவிர, திருநங்கையர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்கள் பற்றிய விவரங்கள், வரலாறு படைத்த திருநங்கையர்களுக்கு சாதகமாக கூறப்பட்ட உயர் நீதி மன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், மன்னராட்சி காலகட்டத்தில் அரசாங்கத்தில் திருநகையர்களின் பங்களிப்பு, கூவாகம் திருவிழா என்று அவர்கள் தொடர்பான பல முக்கிய விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com