நைரோபியில் தமிழ்!

உகாண்டாவில் 9 வருடங்களும் கென்யாவில் 10ஆண்டுகளாகவும் வசிப்பவர் சாந்தி சத்யா.
நைரோபியில் தமிழ்!


உகாண்டாவில் 9 வருடங்களும் கென்யாவில் 10 ஆண்டுகளாகவும் வசிப்பவர் சாந்தி சத்யா. இவர் அங்குள்ள தமிழ் பண்பாட்டு மையத்தில் செயலாளராகவும் புகழ்பெற்ற முருகன் கோயிலில் நான்கு வருடங்களாக இணைச்செயலாரகவும் இருந்தவர். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறார். நைரோபியில் வசிக்கும் தமிழ்ப் பெண்களை ஒன்று சேர்க்கும் வகையில் "பூவையர் பூங்கா' என்ற ஒரு கட்செவி அஞ்சல் குழுவை தொடங்கி அதன் மூலமாக முதியோர் இல்லம், எளியவர்களுக்கு உதவி செய்தல், கலாசாரம் தொடர்பான போட்டிகள் போன்றவற்றை நடத்தி வருகிறார். தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

நைரோபியில் தமிழ் மொழி கற்பிப்பது சுலபமா?

நைரோபியில் ஐயப்பா சேவா சங்கத்தினரால் தமிழ் வகுப்புகள் 2015-இல் தொடங்கபட்டது. அப்போது என்னை அணுகினார்கள். நானும் காயத்திரி கணேஷ் என்பவரும், தமிழகத்திலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் புவனேஸ்வரியின் வழிகாட்டுதலோடு கற்பிக்க தொடங்கினோம். குழந்தைகள் வேறு வேறு நிலையில் இருந்ததால் மூன்றாகப் பிரிப்பதற்கு முடிவு செய்தோம். வெற்றியும் கிடைத்தது. அதன் பின்னர் தமிழ் இணையக்கல்வி வாயிலாக குழந்தைகள் அடிப்படை நிலை தேர்வுகள் எழுதி தேர்ச்சிப் பெற்றனர். இந்தத் தேர்வுகள் வாய் மொழித் தேர்வு, எழுத்துத் தேர்வு, காட்சித் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடைபெற்றது.

இதற்கிடையில் ஐயப்பன் கோயிலில் நடைபெற்று வந்த தமிழ் வகுப்புகள் அங்கு நடைபெற்ற கட்டட வேலைகளால் தொடர முடியாமல் போனது. முருகன் கோயிலை அணுகியபோது மகிழ்ச்சியுடன் அனுமதித்தனர்.

அதிலிருந்து 2020-ஆம் ஆண்டு ஜனவரி வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் இந்நாட்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்றாலும் எங்கள் ஆசிரியர்கள் இணைய வழியில் தான் குழந்தைகளுக்கு கல்விக் கற்பித்தனர். வகுப்புகள் தொடர்ந்து நடத்துவதில் சவால்கள் இருக்கத் தான் செய்கிறது. அதையும் தாண்டி வெற்றி பெற வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

தமிழ்ப் பண்பாட்டு மையம் மூலமாக செய்யும் பணிகள்?

கென்யாவில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் தொழில் முனைவோர்களாகவும் பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளிலும் உள்ளனர். இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர், ஒரு லட்சத்திற்கும் மேல் இருப்பதால் இந்தியர்களுக்கு தேவையான எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றது.

தமிழ்ப் பண்பாட்டு மன்றங்கள் கென்யாவின் தலைநகர் நைரோபியிலும். இன்னொரு முக்கியமான நகரமான மொம்பாசாவிலும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதில் பண்பாட்டு மன்றத்தின் உறுப்பினர்கள் திறம்பட இயங்குகின்றனர். அடிக்கடி உள்ளுர் மற்றும் தமிழகத்திலிருந்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தற்போது வரை குழந்தைகள் பங்கேற்கும் பல கலை நிகழ்ச்சிகளை எழுதி இயக்கியுள்ளேன். பாரதியார், கம்பராமாயணம், ஆழ்வார்கள், ஆறுபடை வீடு தொடர்பான நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பண்பாட்டு மன்றத்தின் சார்பில் நைரோபி ஆலயங்களில் குழந்தைகள் பங்கேற்றனர். சென்ற ஆண்டு கூட நடந்த இணையவழிப் பேச்சுப்போட்டியில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"பூவையர் பூங்கா' குழுமம் எப்படி உருவானது?

தமிழ்ப் பெண்களை இணைப்பதற்காகவும் சமூக சேவைக்காக மட்டுமே தொடங்கப்பட்டது தான் பூவையர் பூங்கா கட்செவி அஞ்சல் குழுமம். பெற்றோரை இழந்த மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளியின் விடுதியிலுள்ள மாணவர்களுக்கு ஆடை, புத்தகம், நோட், விளையாட்டுப் பொருள், மளிகை சாமான்கள், அதைப் போல் முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கு பாய், போர்வை, சேலை, வேட்டி போன்ற உதவிகளை உறுப்பினர்களோடு சேர்ந்து செய்து வருகிறோம். தோழிகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைத்ததால் நான் கொடுத்த விதவிதமான தலைப்புகளில் தங்கள் படைப்புகளையும் கருத்துகளையும் பகிர்ந்தார்கள். இதை இங்குள்ள ஒரு தொலைக்காட்சி தொகுத்து வெளியிட்டனர். அண்மையில் நவராத்திரி போட்டி நடத்தினோம். இப்போது மார்கழி ரங்கோலி போட்டி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com