யோகா முறையில் கற்பித்தல்!

கற்பித்தல் பணியில் புதிய முறைகளை கையாள்வதிலும், சமூக சேவைகளிலும்  முனைப்புகாட்டும் பள்ளி ஆசிரியர் வசந்தா, இப்போது வாய்ப்பாடு, செய்யுள் பகுதிகளை மாணவர்களிடம் யோகா வடிவில் கற்பிப்பதில் அசத்தி வருகிறார்.
யோகா முறையில் கற்பித்தல்!


கற்பித்தல் பணியில் புதிய முறைகளை கையாள்வதிலும், சமூக சேவைகளிலும்  முனைப்புகாட்டும் பள்ளி ஆசிரியர் வசந்தா, இப்போது வாய்ப்பாடு, செய்யுள் பகுதிகளை மாணவர்களிடம் யோகா வடிவில் கற்பிப்பதில் அசத்தி வருகிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். வசந்தா (53). இவர், அண்டர்காடு சுந்தரேச விலாஸ் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 1992 முதல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் பணியின் தொடக்கநிலை முதல், பாடங்களை கற்பிக்கும் போது  மாணவர்களின் உளவியலுக்கு ஏற்ப ஏதாவது ஒரு புதிய முறையை கையாள்வதில் நாட்டமுடையவர்.

எளிதாகக் கிடைக்கும் காகிதங்கள், பொம்மைகள், ஊரகப் பகுதியில் சிறுவர்கள் விளையாடும் மிதிவண்டிவளையம், பனங்காய் வண்டி, சக்கர வண்டி, பனை ஓலை, தாவரங்கள், நாட்டுப்புற கலை வடிவங்கள் போன்றவற்றை கற்பித்தலுக்கு லாகவமாக பயன்படுத்திக் கொள்வதில் மற்ற ஆசிரியர்களிடம் இருந்து மாறுபட்டவர்.

வகுப்பறை கல்விப் பணியைத் தாண்டி, சமூக கல்விக்காகவும், நலிவடைந்தோர், ஆதரவற்றோருக்கு உதவுவதிலும் ஈடுபாடு கொண்டவர் வசந்தா. வேதாரண்யம் பகுதியில் 2018-இல் கரையைக் கடந்த கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரும் பங்காற்றியவர். 

இந்தப் பகுதியில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மாணவர்களின் வருகை பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு சுற்றுப் பகுதியில் அமைந்துள்ள 20 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு வண்ண வண்ண குடைகளை தனது சொந்த செலவில் வாங்கி அளித்து மகிழ்ந்தவர்.

கரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு, 2020 மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய இந்த ஆசிரியை, இன்றுவரை  நாடோடிகள், ஆதரவற்றோர் என நாள்தோறும் 200 பேருக்கு தனது வீட்டில், தானே உணவு தயாரித்து குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் வழங்கி வருகிறார்.

கரோனா பாதிப்புக்கு உதவும் வகையில், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தனது சொந்த நிதியில் இருந்து 2020 -ஆம் ஆண்டில் ரூ. 50 ஆயிரம், 2021- இல் ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், தூய்மைப் பணியாளர்களை பாராட்டும் வகையில், நகராட்சிப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு,  அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்.

கரோனா காலத்தில் கரோனா தடுப்புக்கான பொருள்களை பல இடங்களில் ஆளில்லா கடைகள் நடத்தி விநியோகித்ததோடு, இதுவரை சுமார் 10 லட்சம் இலவச முகக் கவசங்களையும், சோப்பு, மஞ்சள்தூள் உள்ளிட்ட 1.5 லட்சம் கிப்டுகளையும் வழங்கியுள்ளார். பள்ளியில் சிறப்பிடம் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்த, பரிசுத்தொகை வழங்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இவரின் கல்விப் பணியை பாராட்டும் வகையில், தமிழக அரசு கடந்த 2017- இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இதுதவிர, ஆசிரியர் வசந்தாவின் கல்விப் பணி, சமூகப் பணிகளை பாராட்டி பத்திரிகை, ஊடகத்துறை என பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட 52 
விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழகத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் "இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்' மாநில கருத்தாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்வதில் ஏற்பட்ட இடைவெளியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் திறனை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், யோகா வடிவத்திலான புதிய கற்பித்தல் முறையை கையாள்வதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இது கரோனா காலத்தில் மாணவர்களின் உளவியலில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டை சீராக்கவும், உடல்பயிற்சி, நினைவாற்றல் போன்ற திறன்களை மேம்படுத்தவும்  உதவியாக அமைந்துள்ளது.

3 முதல் 5 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 முதல் 16 வரையுள்ள வாய்ப்பாடுகளை கற்றுக்கொள்ள ஏதுவாக, அதற்கு ஏற்ப யோகா வடிவ செயல்பயிற்சியுடன், மனப்பாடத்தையும் கற்பிக்கிறார் ஆசிரியை வசந்தா.

இதேபோல, பாடப் புத்தகங்களில் உள்ள செய்யுள் பகுதிகளை மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளவும் இந்த யோகா முறையைப் பயன்படுத்துகிறார்.

பாடல்களுடன் வரும் யோகா நடனம், சொற்களஞ்சியத்தை மேம்படுத்தி, மனதில் நிறுத்துவதுடன், உடற்பயிற்சி, சொல்லாற்றல், நினைவாற்றல், மனப்பாடத் திறனை வளப்படுத்த உதவுகிறது.

முதல் இரண்டு வகுப்பு சிறார்களுக்கு கற்பித்தல் பணியின் இடையே கதைகள் சொல்வது, ஆடலுடன் பாடுவது, காந்த தூண்டில்கள் மூலம் காகித மீன்பிடிப்பது, பலூன் விளையாட்டு, கும்மி கோலாட்டம் போன்ற வடிவங்களை நிகழ்த்திக்காட்டுவதிலும் ஆர்வம் காட்டுகிறார் இந்த ஆசிரியை.

இது குறித்து ஆசிரியை எம். வசந்தா சித்திரவேலு கூறியது:

""மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்த பணம் தேவையில்லை, மனசு இருந்தால் போதும். சிறார்களுக்கு விலை உயர்ந்த கிரீடங் களைவிட, காகிதத்தில் செய்த கிரீடங்களை பரிசளிப்பதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

மாணவர்களுடன் ஆசிரியர்களும் குழந்தைகளைப் போல பழக கற்றுக்கொண்டால் கற்பித்தல் பணி மிக எளிதானது. நான் தயாரித்து செய்து காட்டும் கற்றல் உபகரணங்களை மற்ற பள்ளி ஆசிரியர்கள் வியப்பாக பார்க்கின்றனர். இப்போது மற்ற ஆசிரியர்கள் இதை மாதிரியாக எடுத்துக்கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
எனது கணவர் சித்திரவேலு, வேறு ஒரு பள்ளியின் தலைமையாசிரியர். எங்களுக்கு 2  பெண் பிள்ளைகள். இருவரும் சிறப்பு மருத்துவர்கள். இவர்களின் பொருளாதார உதவி, ஒத்துழைப்போடுதான் இந்த சேவைகளை செய்ய முடிகிறது.

மக்கள் சேவையை தொடர தற்போது அறக்கட்டளை ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளோம். இயலாதவர்களுக்கு உதவுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் கிடைப்பதில்லை. இயன்றதை செய்வதையே இலக்காக கொண்டுள்ளோம்'' என்றார் ஆசிரியை வசந்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com