கதை சொல்லும் குறள்- 15: தீச்செயல் புரிந்து

""அப்பா, நான் காலேஜுக்குக் கிளம்பறேன், கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோங்கோ'' சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் தெருவில் இறங்கி நடந்தாள் பிரியா.
கதை சொல்லும் குறள்- 15: தீச்செயல் புரிந்து

""அப்பா, நான் காலேஜுக்குக் கிளம்பறேன், கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கோங்கோ'' சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் தெருவில் இறங்கி நடந்தாள் பிரியா.

செய்தித்தாளில் முகம் புதைத்து இருந்த ராகவன், தலையை உயர்த்தி எதிரே இருந்த சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்க, அது காலை நேரம் எட்டு என்று காட்டியது.

""ஏய் குமுதா'', என்று உள்நோக்கிக் குரல் கொடுத்தார்.
""என்னங்க'', என்று ஈரக் கைகளைப் புடவையின் தலைப்பில் துடைத்தபடி வந்தாள் குமுதா.
""கதவைத் தாழ்ப்பாள் போடு''.
""இதற்காக, சமையல் பண்ணிக்கிட்டு இருந்தவளைக் கூப்பிட்டிங்களாக்கும். ஏன் நீங்க போய்க் கதவை மூடுறதுக்கு என்ன?'' கடுப்போடு கேட்டாள் குமுதா.
""நான் பேப்பர் படிக்கறேன் இல்ல''.
""ஆமா, நாட்டு நடப்பைத் தெரிஞ்சுகிட்டு அதை ஆளப்போறா மாதிரிதான். காலையிலே எழுந்தவுடன் காபி, பிறகு பேப்பர், அப்புறம் ஆபீஸூக்கு நேரமாகுதுன்னு, கால்லே சுடுதண்ணியை ஊத்திக்கிட்டாப்போல ஓடவேண்டியது. வீட்டுக்குன்னு ஒரு வேலை செய்யறது இல்லை, எல்லாம் என் தலையில்''.
""சரி சரி, வாயை மூடிக்கோ''. சலித்தபடி எழுந்து கதவை மூடப்போனவர் ஷாக் அடிச்சாப்போல அப்படியே அசையாமல் நிற்கிறார்.
சிற்பி செதுக்கின சிலையாட்டம், ஓர் இளம்பெண், எதிர் போர்ஷனின் வெளியே நின்று கொண்டிருந்தாள்.
வீட்டின் உள்ளே இருந்து ""மம்மி'', என்று கூவிக்கொண்டு ஒரு ஏழு வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் ஓடிவர, அம்மாடி, இவ்வளவு பெரிய பையனுக்கு அம்மாவா இவள் என்று வாய்ப்பிளந்து நின்றார் ராகவன்.
""என்னது, கதவைச் சாத்தாமல்  இடிச்ச புளியாட்டம் நிக்கறீங்க'' என்று கேட்டபடி குமுதா வர, குரல் கேட்டுத் திரும்பிய அந்தப் பெண் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தாள்.
""அங்கிள், ஆண்ட்டி வணக்கம். நாங்க இங்க புதியதாக வந்திருக்கிற குடித்தனக்காரங்க. இது என் மகன் நிகில். என் கணவர் ஆகாஷ் வண்டியிலிருந்து கீழே, இறக்கப்படும் பொருள்களைச் சரிபார்த்துக் கொண்டிருக்கிறார்'' என்றாள்.
""ரொம்ப சந்தோஷம்மா, புதுசா வந்திருக்கீங்க, வீட்டை ஒழுங்குபடுத்தவே நேரம் சரியாக இருக்கும். நான் ஏதாவது சமைச்சுத் தரனே'' என்றாள் குமுதா.
""ஐயோ, அதெல்லாம் வேண்டாம் ஆண்ட்டி. ஸ்விகியிலே ஆர்டர் கொடுத்துட்டோம். நீங்க இப்படி உதவ முன்வந்ததே, எனக்குப் புது இடம் என்கிற பயத்தைப் போக்கி, புதுத்தெம்பைக் கொடுத்திருக்கிறது'' என்றாள்.
தீபா குடிவந்த பிறகு, ஒரு வாரம் என்பது ராகவனுக்கு, ஒரு நொடியாக ஓடி மறைந்துபோனது. ராகவன் நடுவயதைத் தாண்டிய நாற்பத்து எட்டு வயதுக்காரன்தான். ஆனால் அழகன். வாய்த்த மனைவி குமுதாவோ கருப்பு, குள்ளம், முகக்களை என்பது சிறிதும் கிடையாது, போதாக்குறைக்கு இரட்டை நாடி சரீரம் வேறு. தனக்கு இணையாக அழகான மனைவி அமையாததில் ராகவனுக்கு மிகுந்த மனக்குறை உண்டு.
எல்லாம் அவனுடைய அம்மா மீனாட்சியால் வந்த வினை. தன்னுடைய அண்ணனின் மகளைத் தன் ஒரே மகனுக்குக் கட்டி வைத்தால், தன்னைத் தன் மகனிடம் இருந்து பிரித்துவிட மாட்டாள் என்று ஒற்றைக்காலில் நின்று, அழுது ஆர்ப்பாட்டம் செய்து குமுதாவை, ராகவனுக்கு மணம் முடித்து வைத்தாள்.
சிறுவயதிலேயே, கணவனை இழந்து, தன்னையே தன் எதிர்காலமாகக் கருதி வளர்த்த அன்புத் தாயின் கட்டளையை மீற   முடியாமல் ராகவன் வேண்டா வெறுப்பாகக் குமுதாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டான். எப்படியோ பிரியாவும் பிறந்து, இதோ பதினெட்டு வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. அவள் கல்லூரிக்கும் போகத் தொடங்கிவிட்டாள்.
குமுதா அழகில்லாதவள்தான், ஆனால் குணத்தில் சிறந்து விளங்கினாள். ராகவனின் அம்மா மீனாட்சியின் கணிப்பு வீண்போகவில்லை. கடைசிக் காலத்தில் மீனாட்சி பாரிசவாய்வு வந்து படுத்தபடுக்கையான
போது, குமுதா அவளைத் தன் கண்களுக்குள் வைத்துப் பாதுகாத்தாள். அவளின் கடைசி மூச்சுப் பிரியும்வரை, நல்லதொரு செவிலி போல வேளா வேளைக்கு உணவு, மருந்துகள் கொடுப்பது என்று பார்த்துப் பார்த்து செய்தாள்.
ராகவனுக்கு, அழகான பெண்களைப் பார்க்கும்பொழுது எல்லாம் மனம் தடுமாறும். அவர்களைத் தன் பக்கத்தில் இருத்தி மகிழ்வான். மனதளவில் இது நடைபெற்றாலும், அது தவறு என்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. பல சமயங்களில் அவன் மனசாட்சி அவனை எச்சரிக்கும்.  அதை அவன் அலட்சியப்படுத்தி விடுவான். அழகான பெண்கள் மீது உரச நேர்ந்தாலோ, அவர்களுடைய கைகள் எதேச்சையாக அவன் மேல் பட்டுவிட்டாலோ, மெய்சிலிர்த்துப் போவான். பல சமயங்களில் வேண்டும் என்றே முகத்தை அப்பாவிபோல வைத்துக்கொண்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான். இதில் அவனுக்கு ஒரு அற்ப சந்தோஷம் ஏற்படும்.
தீபா, உப்புச் சப்பற்ற தன் வாழ்வில் தீபம் ஏற்ற வந்தவளாக, ராகவனின் மனது அவளைக் கொண்டாடியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை குமுதா குளித்துக் கொண்டிருந்தாள். தீபாவின் கணவன் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, எதிர் போர்ஷனுக்குச் சென்று காலிங் பெல்லை அழுத்தினான்.
நிகில் ஓடிவந்து கதவைத் திறக்க, இவன் வேறு நந்தியாட்டம் என்று ராகவனின் மனம் முணுமுணுத்தது.
""அம்மா, எதிர்வீட்டு அங்கிள் வந்திருக்காங்க'' என்று சத்தம் போட்டான் நிகில்.
""வாங்க அங்கிள்'', என்று சிரித்தபடி வந்தாள் தீபா.
""தீபா, உனக்கு ஏதாவது உதவித் தேவைப்பட்டால், தயங்காமல் என்னைக் கேள்; எதுவானாலும் செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன்''.
""நீங்களும், ஆண்ட்டியும் இந்த ஒரு மாதத்தில் எவ்வளவோ உதவிகளைச் செஞ்சுட்டீங்க; இதுக்கு மேலையுமா-! இருங்க குடிக்க ஜூஸ் கொண்டு வரேன்''.
சிறிது நேரம் கழித்து, தீபா நீட்டிய ஜூஸ் டம்பளரை வாங்கும்பொழுது எதேச்சையாகப் படுவதுபோல், அவளுடைய விரல்களை டம்பளரோடு சேர்த்துப் பிடித்தான். 
பட்டுப்போன்ற அவளின் விரல்கள் அவன் இதய வீணையை மீட்டி, அவனை மோக வலையில் விழச்செய்தது.
பாவம் தீபாவுக்கு அவனுடைய தீய எண்ணம் புரியவில்லை, விரல்களை விடுவித்துக்கொண்டு, சோபாவில் அவன் எதிரே உட்கார்ந்து பேசத் தொடங்கினாள்.
தீபா, எதிர் போர்ஷனுக்குக் குடிவந்து, இரண்டு வருடங்கள் ஆன நிலையில், அங்கிள் என்ற உரிமையோடு, அவள் முதுகில் தட்டுவது, கைகளை வேடிக்கையாகக் கிள்ளுவது போன்ற செயல்களைச் செய்து அதில் அற்ப இன்பம் கண்டுவந்தான் ராகவன்.

அன்றைய தினம் தீபாவளி. வீட்டில் தயாரித்த பட்சணங்களை தீபாவுக்குக் கொடுக்கச் சொல்லி பிரியாவை அனுப்பினாள் குமுதா.

""ஆண்ட்டி'' என்று பிரியா குரல் கொடுக்க, ""வா பிரியா'' என்று அவளை அணைத்துக் கொண்டாள் தீபா. சிறிது நேரம் பேசி விட்டுப் பிரியா சென்று விட்டாள். தீபா தன் பங்கிற்குத் தன் வீட்டுப் பட்சணங்களை எடுத்துக்கொண்டு 
ராகவன் வீட்டிற்குச் சென்றாள்.

குமுதா, தன் பெண்ணோடு வெளியே சென்றிருந்தாள். ராகவன் மட்டுமே வீட்டில் இருந்தான்.

""அங்கிள், ஆண்ட்டி இல்லையா'' என்றாள் தீபா.

""அதனால் என்ன வா தீபா, நான் இருக்கிறேன் இல்ல. அம்மாடி இன்றைக்கு அழகு தெய்வமே உரு எடுத்து வந்தாற்போல ஜொலிக்கிறியே'' என்றான் ராகவன்.

""போங்க அங்கிள், உங்களுக்கு எப்பவுமே கேலிதான், சரி பட்சணத் தட்டை டைனிங் டேபிள் மீது வைக்கிறேன்'' என்று உள்ளே சென்று தீபா தட்டை வைத்தபொழுது, கழுத்தில் சூடாகக் காற்றுப்பட திடுக்கிட்டுத் திரும்பினாள்.

அங்கே அவளுக்கு வெகு அருகில் ராகவன் நின்றிருந்தான், அவனின் கைகள் அவள் இடுப்பைத் தழுவி இருந்தன.

""அடச் சீ'', என்று அவன் கைகளைத் தட்டிவிட்டு ஓடிச்சென்று மறைந்துவிட்டாள் தீபா.

தன்நிலை உணர்ந்தான் ராகவன், வெட்கித் தலை குனிந்தான். என்ன காரியம் செய்துவிட்டேன். காமம் என் கண்களை மறைத்து விட்டதே. பிரியாவை விட ஒரு ஏழு வயதுதானே தீபாவுக்கு அதிகம். என் பெண் போன்றவளிடம் இப்படி நடந்து விட்டேனே. மனம் துடித்தது. தீபா தன் கணவனிடம் சொல்லிவிடுவாளா என்று மறுகினான். குமுதாவுக்கும், பிரியாவுக்கும் தெரிந்தால் என்னைச் செல்லாக் காசைவிடக் கேவலமாக மதிப்பார்களே என்று நினைக்க, நினைக்க அவன் உடம்பில் வியர்வை ஆறாக ஓடியது, மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்தான்.

ராகவன், கண்விழித்துப் பார்த்தபொழுது நாள்கள் இரண்டு கழிந்திருந்தன.

அங்கே, குமுதாவுடன் தீபாவும் நின்றுகொண்டிருந்தாள்.

மருந்தின் நெடி, அவன் மருத்துவமனையில் இருப்பதை உணர்த்தியது. 

""ஆண்ட்டி, நீங்க வீட்டிற்குப் போய், குளிச்சுட்டு வாங்க நான் அங்கிளைப் பார்த்துக்கறேன்'' என்றாள் தீபா. அவள் கண்களில் தெரிந்த கருணை, அவள் எதையும் யாரிடமும் சொல்லவில்லை என்பதை உணர்த்தியது.

தீபா என்ற தேவதை அவனை மன்னித்துவிட்டாள், ஆனால் குற்ற உணர்ச்சியில் உயிர்ப் பிழைத்தும், பிணமாகக் கிடந்தான் ராகவன்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகுவார்.

குறள் எண்: 143

பொருள்:

நம்பிப் பழகியவர் வீட்டில் அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com