நேதாஜியின் லிட்டில் லட்சுமி -ஐ.என்.ஏ. போராளி லட்சுமி கிருஷ்ணன்!

சும்மாவா வந்தது சுதந்திரம் இல்லை; பலரின் தியாகத்தால் வந்தது. அமைதி வழி,  பலன் தராது என பிரிட்டிஷாரை  எதிர்த்து ராணுவப்படை ஒன்றை நிறுவினார் நேதாஜி. அதற்கு "இந்திய தேசிய ராணுவம்' என்று பெயரிட்டார்.
நேதாஜியின் லிட்டில் லட்சுமி -ஐ.என்.ஏ. போராளி லட்சுமி கிருஷ்ணன்!

சும்மாவா வந்தது சுதந்திரம் இல்லை; பலரின் தியாகத்தால் வந்தது. அமைதி வழி, பலன் தராது என பிரிட்டிஷாரை எதிர்த்து ராணுவப்படை ஒன்றை நிறுவினார் நேதாஜி. அதற்கு "இந்திய தேசிய ராணுவம்' என்று பெயரிட்டார்.

நேதாஜியை நம்பி தியாகம், தேச விடுதலை ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு அவரது இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்தவர் லட்சுமி கிருஷ்ணன். நேதாஜியிடம் பெற்ற பயிற்சியும் ஊக்கமும் இன்றளவும் 93 வயதிலும் அவரை சிங்கப்பெண்ணாக கம்பீரத்துடன் வாழச் செய்திருக்கிறது. எத்தனையோ களம் கண்ட அனுபவம் அவரது கண்களில் தெரிகிறது.

முதுமையின் அழகு எளிய தோற்றம் வலிமையான சிந்தனைகள் என்று இன்றும் நேதாஜியின் குணங்களைக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றிருக்கிறார் லட்சுமி கிருஷ்ணன். அயராத உழைப்பும் தளராத உறுதியும் கொண்டு அவர் கடந்து வந்த பாதையை, அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

கோவையில் பிறந்த நீங்கள் நேதாஜியை எப்படி சந்தித்தீர்கள்?

பிழைப்புக்கு வழி தேடி பர்மாவுக்கு என் தகப்பனார் சென்றார். ஆபத்தோ, சுகமோ எப்படியிருந்தாலும் சேர்ந்தே எதிர் கொள்வோம் என்று அம்மா எங்களையும் அழைத்துக் கொண்டு அப்பாவுடன் புறப்பட்டார். போர் துவங்கியதையடுத்து எல்லாரும் சொந்த ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் பர்மாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். யாரை நம்பிப் போயிருந்தோமோ அவர்களோ சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். அப்பா ஒரு சர்க்கரை ஆலையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். போர் தீவிரமாகிக் கொண்டே வந்தது. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் பர்மாவில் அழுத்தமாகக் காலூன்றியிருந்தது. அப்பா அதனைக் கேள்விப்பட்ட பொழுது என்னைப் பெண்கள் பிரிவுக்கு அனுப்ப எண்ணம் கொண்டார். அதனை நானும் ஏற்றுக்கொண்டு நேதாஜியின் ராணுவத்திற்குச் சென்றேன். அப்போது எனக்குப் பதினைந்து வயது. "இளம் கன்று பயமறியாது' என்பார்களே அந்த வயதில் எதையும் நினைக்கவில்லை. இருக்கும் கடின நிலை மாற வேண்டும். உயிர்தியாகம் செய்தாலும் சுதந்திரம் தேசத்திற்கு கிடைத்துவிட்டால் போதும் வேறு சிந்தனையே இல்லை. நேதாஜி எங்களை அப்படி உருவாக்கி இருந்தார்.

நேதாஜி எப்படி இருப்பார் எப்படிப் பேசுவார்?

சுறுசுறுப்பு, வேகம், கம்பீரம் என்பதற்கு உருவம் கொடுத்தால் அது நேதாஜியின் வடிவம் தான். சீருடையில் நிமிர்ந்து நின்றால் அவருடைய முகத்தில் காணும் தேஜஸ் எதிரில் இருப்பவரை அடிபணியச் செய்து அவரை தெய்வமாகக் கொண்டாடத் தூண்டும். விரோதிக்கும் அவரை வணங்கத் தோன்றும். அனைவர் நடுவிலும் உரையாற்றும்போது அவரின் வேகமும் வீரமும் கேட்போர் மனங்களிலும் அதே உணர்வை ஏற்படுத்தும். நமக்குள்ளும் அந்த வீரம் புது உத்வேகத்தைத் தரும். அதே நேரத்தில் தனித்து உரையாடும் போது இனிமையாக கனிவான பேச்சு இருக்கும். அன்பான மனம் கொண்டவர். அவரது அக்கறை நம்மைக் கட்டிப்போடும். ஆண்- பெண் பேதமற்ற பார்வை கொண்டவர். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது என்ற சிந்தனையும் அதற்கே உரிய செயல்பாடும் கொண்டவர்.

நேதாஜியோடு உங்கள் முதல் அனுபவம் பற்றி...

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பெண்கள் பெரும் உற்சாகத்துடன் குடும்ப உறவுகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருந்தார்கள். ஜான்சிராணி ரெஜிமென்டில் நான் சேர்ந்த போது எங்கள் முகாமுக்கு வந்து பேசினார். "இப்படிப் பெண்கள் சுதந்திரத்துக்காக ராணுவத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. தேச நன்மைக்காகப் பாடுபட வேண்டும். நம்முடைய ஜான்சிராணி தன் பதினெட்டு வயதில் பிரிட்டிஷ் காரர்களை எதிர்த்துத் தன் பிஞ்சுக் குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டு தேசத்தைக் காக்க ராணுவத்தையும் அதன் எதேச்சதிகாரத்தை எதிர்த்து வீரப் போரிட்டார் என்றால் உங்களைப் போல ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி எத்தனை பிரிட்டிஷாரை மண்ணில் சாய்க்க முடியும் எண்ணிப் பாருங்கள்' என்றார். அது, நாமும் ஜான்சிராணி போல தேசத்துக்காக உயிரையும் பொருட்படுத்தாது பாடுபட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஆழ விதைத்து விட்டது.

இந்திய தேசிய ராணுவத்தில் உங்கள் பயிற்சி பற்றி...

ராணுவத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான பயிற்சி தான். பாகுபாடு ஒன்றும் கிடையாது. முதலில் இரு மாதங்கள் ஜியாவடி என்ற இடத்தில் பயிற்சி. யார் முன்னணியில் வர விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். உடனே நான் ஒப்புக் கொண்டு முன்னணிக்கு வந்தேன். அதற்காக மேமியோ என்ற பகுதிக்கு வந்தோம். அங்கே ஆண்களுக்கும் பெண்களுக்கும் 303 ரைபிள் கொண்டு துப்பாக்கிப் பயிற்சி கொடுத்தார்கள். பதினைந்து வயதில் எனக்கு அந்தத் துப்பாக்கி தோளுக்கு மேல் உயரமாக இருக்கும். நல்ல கனமான துப்பாக்கி ஆனால், அந்த நாளில் கனம் உயரம் எதுவும் தெரியவில்லை. பயிற்சியை முடிக்க வேண்டும். களம் காண வேண்டும். பிரிட்டிஷாரை மண்ணில் சாய்க்க வேண்டும். நம் தேசத்தை மீட்க வேண்டும். இந்த சிந்தனை தவிர வேறு எதுவும் எங்களது மனதில் இல்லாத துடிப்பு ராணுவத்தில் சேர்ந்த உடன் வந்து விடும். ராணுவம் என்பது ஒரு வேலையல்ல. அது உயிரை களத்தில் வைத்து லட்சியத்துக்காக நிற்பது.

ரங்கூன் பகுதா பகுதிகளில் இந்தியாவை நோக்கி வருவதற்கான பயிற்சிகள், அதாவது எவ்வளவு வேகமாக நம்மால் தளவாடங்களோடு நடக்க முடியும் என்பதற்கானது. ஒரு நாளில் எவ்வளவு நடக்கிறோமோ அதை விட அதிகமாக மறுநாள் நடக்க வேணும். அதற்கு பல தேசபக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடப்போம். அலுப்போ களைப்போ இல்லாமல் உற்சாகமாக நடந்து கொண்டே இருப்போம்.

மேமியோவில் பயிற்சி முடித்து பின் இன்னும் முன்னணிக்கு வர யார் விரும்புகிறீர்கள் என்ற போது நானும் வந்தேன். அதன்பின் இரவு நேரத் தாக்குதலுக்கான பயிற்சி தந்தார்கள். துப்பாக்கியே உயரமாக இருக்கும். அதற்கும் மேல் ஒரு கருவியைப் பொருத்த வேண்டும். அதையும் தூக்கிக் கொண்டு "சார்ஜ்'என்று சொன்னவுடன் ஒரே தாவில் தாவிச் சென்று சுட வேண்டும். நம்மால் எவ்வளவு அதிக தூரம் தாண்ட முடியும் என்பது தான் பயிற்சி.

லிட்டில் லட்சுமி என்று பெயர் வந்தது எப்படி?

ஒருமுறை பயிற்சியில் இருந்தபோது நேதாஜி முகாமுக்குள் திடீரென வந்துவிட்டார். பயிற்சி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். என்னுடைய முறை வரும்போது துப்பாக்கியோடு நான் தாவிக் குதிப்பதைப் பார்த்து என் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்த நேதாஜி என்னைப் பற்றி விசாரித்தார். லட்சுமி என்றவுடன் என்னை "லிட்டில் லட்சுமி' என்று அழைத்திருக்கிறார். ஏன் இந்தப்பெயர் தெரியுமா? எங்களது கேப்டன் பெயரும் அதுதான். லட்சுமி சேகல். அதனால் என் பெயருக்கு முன் லிட்டில் சேர்ந்து விட்டது. அன்றிலிருந்து என்னை அனைவருமே "லிட்டில் லட்சுமி' என்றே அழைப்பார்கள். அதுவே இந்திய தேசிய ராணுவத்தில் என்னுடைய அடையாளம். நேதாஜி எனக்கு வழங்கிய கெளரவமாகவே இன்றளவும் எண்ணிப் பெருமைகொள்கிறேன்.

நேதாஜியோடு உங்கள் நினைவுகளைச் சொல்லுங்களேன் ஒருமுறை நேதாஜி என்னை அழைப்பதாகக் கூறினார்கள். இத்தனை பேருக்கு நடுவில் என்னை மட்டும் அவர் அழைப்பானேன் என்று பயம் ஒருபுறம், நேதாஜி என்னை அழைக்கிறார் என்ற பெருமிதம் ஒருபுறம். போய் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தி விட்டு நின்றேன். "லட்சுமி உன் தகப்பனாரைப் பார்த்தேன். உன்னிடம் ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா?' என்று கேட்டேன். அவரோ, "தேசத்தின் சேவைக்கு உங்களிடம் அவளை ஒப்படைத்து விட்டேன். அவளிடம் சொல்வதற்கு எனக்கு வேறென்ன இருக்கிறது' என்று கேட்டு விட்டார். எத்தனை உயர்ந்த மனம் அவருக்கு? தன் குழந்தையை தேச சேவைக்கே முழுமையாக அர்ப்பணித்து விட்ட தியாகி உன் தந்தை என்றெண்ணும் பொழுது பெருமையாக இருக்கிறது' என்று சொன்னார். அதை விட என் வாழ்வின் சிறந்த தருணம் வேறென்ன இருந்து விட முடியும்?

மறக்க முடியாத அனுபவங்கள்...

மேமியோ பகுதியில் முகாமிட்டிருந்த போது ஒருநாள் முகாமிலேயே குண்டு விழுந்துவிட்டது. மேலறையில் லட்சுமி சேகல் மற்றும் சிலர் இருந்தார்கள். நாங்கள் கீழ் அறையில் இருந்தோம். விமானம் எங்கள் முகாமைச் சுற்றி வருவதைப் பார்த்தோம். குண்டுகள் விழுந்து எல்லாம் பற்றி எரிகிறது. பெட்ரோல் பரவி தீயும் கொழுந்து விட்டு எரிகிறது. நினைக்கும் நேரத்திற்குள் சைரன் ஒலி கேட்டவுடன் அங்கே அதுவரை யாரும் பயன்படுத்தாத பதுங்குகுழி இருந்தது. அதற்குள் இறங்கிவிட்டோம். முகாமின் மீதே குண்டு விழுந்ததால் கட்டடம் தகர்ந்து மண்ணுக்குள் இறங்கிவிட்டது. பலகைகளால் தான் பெரும்பாலும் கட்டடங்கள் அமைத்திருப்பார்கள். பலகை, மண் என்று எல்லாம் விழுந்து நாங்கள் இருந்த பதுங்குகுழியை மூடிவிட்டது. பிழைத்தவர்கள் எங்களைத் தேடி வந்து பதுங்குகுழியில் இருந்த மண்ணை அகற்றி விட்டு மேலே தூக்கினார்கள். உயிர் பலி ஒன்றுமில்லை.

செய்தி கிடைத்தவுடன் நேதாஜியும் அங்கே வந்துவிட்டார். "எப்படியிருக்கிறீர்கள்? என்னவாயிற்று' என்று கேட்டார். "உடுத்திய துணி தவிர அனைத்தும் போய்விட்டது' என்றோம்.

அன்றிரவு ஒரு பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் படுத்திருந்தோம். முகாம் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால் வேறு இடத்திற்கு மறுநாள் காலையில் புறப்பட்டோம். திறந்த லாரியில் பயணம். அப்போது லாரியின் சத்தத்தில் சைரன் சத்தம் கேட்கவில்லை. ஒரு ஜப்பான்காரர் வண்டியை கைகாட்டி நிறுத்தி சைரன் வந்திருப்பத்தைச் சொன்னார். உடனே வண்டியிலிருந்து இறங்கி சாலையோரம் தண்ணீர் இல்லாமல் காய்ந்திருந்த வாய்க்காலில் எல்லாரும் குப்புறப் படுத்துக்கொண்டோம். மேலே பிரிட்டிஷ் விமானம் அதிலே இருப்பவன் கீழே குறிவைத்துக் கொண்டு பார்க்கிறான். நல்லவேளையாக பக்கத்தில் இருந்த ரயில் நிலையத்தில் அவன் கவனம் போய்விட்டது. எங்களை கவனிக்காமல் போய் விட்டான்.

விமானம் எங்களை விட்டு நகர்ந்த சில நிமிடங்களில் டாங்குகளில் மெஷின்கன் பிரயோகம் தொடங்கி விட்டது. வாய்க்காலில் குப்புறப்படுத்திருக்கும் எங்கள் முதுகுக்கு மேலே மெஷின்கன்னிலிருந்து வரும் தோட்டாக்கள் சரமாரியாகப் போவதை உணர முடிகிறது. லேசாகத் தலையைத் தூக்கினாலும் தலையை துண்டித்துக் கொண்டு போய்விடும். உடல் அசைந்தால் உயிர் தொலைந்தது. இந்த நிலையில் படுத்திருக்கும் எங்களுக்கு இன்றோடு நம் வாழ்க்கை முடிந்தது. பிரிட்டிஷ்காரனின் குண்டுக்குப் பலியாகப் போகிறோம் என்றே தோன்றிவிட்டது. அவரவர் குலதெய்வத்தை கும்பிட்டுக் கொண்டு அதிலிருந்தும் அசையாமல் கட்டை போலக் கிடந்து உயிர் தப்பித்துவிட்டோம். அப்போதும் எங்களை நேதாஜி வந்து பார்த்து. நன்றாக கவனித்துக் கொண்டார். நேரடியாக வீரர்களை வந்து கவனிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது.

மேமியோவில் ஒருமுறையும் மண்டலேவில் ஒருமுறையும் நேதாஜியின் அழைப்பை ஏற்று அவரோடு உணவருத்தப் போயிருக்கிறோம். அப்போது நலம் விசாரிப்பார். தேசபக்திப் பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பார். இயல்பாய் தன் சகோதரர்களுடன் இருப்பதைப் போல நடந்துகொள்வார்.

நேதாஜிக்கு நேர்ந்த விபத்தைக் கேட்டபோது அவர் இனி இல்லை என்பதை எப்படி உணர்ந்தீர்கள்?

நேதாஜி விபத்தில் இறந்து விட்டதாக உலகம் நம்பியது. ஆனால், இந்திய தேசிய ராணுவத்தில் ஒருவர் கூட நம்பவில்லை. நேதாஜியின் இயல்புகளை அவரின் சாகசங்களை அறிந்தவர்களுக்கே அது புரியும். என்னைப் பொறுத்தவரை ராணுவத்திலிருந்து வருவதற்கே விருப்பமில்லை. நேதாஜி வெளிப்பட்டு வருவார் என்றே நம்பினேன். நேதாஜி இந்தியா திரும்பியவுடன் தேசப்பணிக்கு எங்களை அழைப்பார் என்று சில காலம் காத்திருந்தேன். சுதந்திரம் அடைந்த பிறகும் நேதாஜி ஏன் இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை? என்ற கேள்வி பல ஆண்டுகளாக எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.

பர்மாவிலிருந்து எப்படி இந்தியா வந்து சேர்ந்தீர்கள்?

1946-இல் போர் கெடுபிடிகளுக்கு மத்தியில் எப்படியோ கூட்டத்தோடு நெரிசல் மிகுந்த கப்பலில் இடம்பிடித்து இந்தியா புறப்பட்டுவிட்டோம். உடமைகள் என்று எதுவும் இல்லை. உயிர் ஒன்று தான் இருந்தது. கப்பலில் வரும் போது வேறு கப்பல் வெளிச்சத்தைப் பார்த்து விட்டால் ஜனங்கள் யாருடைய கப்பலோ? குண்டு வீசிவிடுவார்களோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி மூன்று நாள் பயணம் செய்து இந்தியா வந்து சேர்ந்தோம்.

சுதந்திர இந்தியாவில் உங்கள் எண்ணம் எப்படிஇருந்தது?

எனக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு மகனும் இருந்தார்கள். குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கணவர் காலமாகிவிட்டார். குழந்தைகளை வளர்க்கவேண்டிய பொறுப்பு வந்து விட்டது. கோயிலுக்குப் போவதைப் போல புனித இடமாகக் கருதி நேதாஜி பிறந்த இடத்தை வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டுமென விரும்பினேன். என் மகன் அழைத்துப் போய் காட்டினான்.

சுதந்திரம் கிடைத்த பின் சமூகத்திற்கு நம்மால் எந்தப் பங்களிப்பையும் தர முடியவில்லையே என்ற ஆதங்கம். நேதாஜியின் நினைவுகளும் அவர் இருந்திருந்தால் தேசம் எப்படியெல்லாம் முன்னேற்றம் கண்டிருக்கும் என்றும் ஆதங்கப்பட்டுக் கொள்வேன்.

இன்றைக்கு நேதாஜியின் நினைவுகள் எப்படி இருக்கின்றன?

தொண்ணூறு வயதைக் கடந்து விட்டேன். இன்றைக்கு நினைத்தாலும் அந்த ராணுவ வாழ்க்கையும் அதிலே கற்றுக் கொண்ட பாடங்களும் பெற்ற அனுபவமும் பூரிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த நினைவே என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

படம் : அகிலா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com