கிராமிய சமையல்!

அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் உளுந்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாயை வறுத்தெடுத்து, அதனுடன் புளி, உப்பு, பச்சை கறிவேப்பிலைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கிராமிய சமையல்!

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை:

புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் - 5
உளுந்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
பெருங்காயம் - சிறு துண்டு
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

செய்முறை:

அடுப்பில் மண்சட்டியை வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் உளுந்தம்பருப்பு, பெருங்காயம், மிளகாயை வறுத்தெடுத்து, அதனுடன் புளி, உப்பு, பச்சை கறிவேப்பிலைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதே மண் சட்டியில் விழுதைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்க விடவும். பச்சை வாசனைப் போக நன்கு கொதித்தவுடன் கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.
 

மோர் ரசம்

தேவையானவை:

லேசாக புளித்த மோர்- முக்கால் ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 2
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

மோரில் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, கறிவேப்பிலைப் போட்டு கலந்து வைக்கவும். வெறும் வாணலியைக் காயவைத்து வெந்தயத்தை வாசனை வரும் வரை வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும். மிள காய் வற்றலை வறுத்துத் தனியாகப் பொடி செய்து கொள்ளவும். இரண்டையும் மோரில் சேர்த்து இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்து, கடுகு தாளித்துக் கொட்டி இறக்கினால், வித்தியாசமான மோர் ரசம் சுவையாக இருக்கும்.
 

பரங்கிக்காய் பால் கூட்டு

தேவையானவை:

பரங்கிக்காய் - 1 துண்டு
பால் - அரை கரண்டி
வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

பரங்கிக்காயை துண்டுகளாக்கி, 1 டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்தபிறகு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் நன்கு கரைந்து பச்சை வாசனைப் போன பிறகு தேங்காய்த் துருவலைக் கொட்டிப் பாலில் அரை தேக்கரண்டி அரிசி மாவைக் கரைத்து ஊற்றி இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு மிளகாய்வற்றல், உளுந்தம் பருப்பை நெய்யில் சிவக்க வறுத்து, தாளித்துக் கொட்டி இறக்கியப் பிறகு, இரண்டு முந்திரி
பருப்பை பொடித்து நெய்யில் வறுத்து, கூட்டில் கொட்டினால் பரங்கிக்காய்ப் பால் கூட்டு தயார்.
 

தக்காளி துவையல்
 

தேவையானவை


துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயம் - சிறிது
பெரிய தக்காளி - 2
உப்பு - தேவையானவை

செய்முறை:

வெறும் வாணொலியில் துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தை வறுத்து எடுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளியை நறுக்கி, வதக்கி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்தால், தக்காளி துவையல் தயார்.

புளி உப்புமா

தேவையானவை:


அரிசி மாவு - முக்கால் ஆழாக்கு
புளிக் கரைசல் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

அரிசி மாவில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்
கரண்டி எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் கடுகு, மிளகாய்வற்றல், உளுந்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுத்து கரைத்த மாவில் கொட்டி, அடுப்பில் வைத்து கிண்டவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கினால் புளி உப்புமா தயார்.

கருணைக்கிழங்கு தொக்கு

தேவையானவை:


கருணைக் கிழங்கு - 250 கிராம்
மிளகாய் வற்றல் - 4
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறிதளவு
தேங்காய் - 1 சிறிய மூடி
உளுந்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
தனியா - 1மேசைக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி - 1 ஈர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

கருணைக்கிழங்கைத் தோல் சீவிப்பொடியாக நறுக்கி மிளகாய், புளி, வெல்லம் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். தேங்காய்த் துருவ வேண்டும். தனியாவை வறுத்து, தேங்காயுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். பின்னர், கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பைத் தாளித்து அதில் வேக வைத்த கருணைக்கிழங்கைச் சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com