முகம் பொலிவாக வேண்டுமா?

முகம் பொலிவாக வேண்டுமா?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது நம்முடைய வாழ்ந்த காலங்கள், அனுபவங்கள் பொறுத்து நம்முடைய முகத்தில் மாற்றத்தை பார்க்க முடியும். முகத்தின் தன்மையும் மாறுபடும். வயதாகும் போது அனைவருக்கும் முகத்தில் தோல் சுருக்கம் உண்டாகும். தசைகள் தொய்வு ஏற்படும். எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருப்பதற்கு நாம் ஒன்றும் பெஞ்சமின் பட்டன் கிடையாது. என்றாவது ஒரு நாள் இறப்பு நம்மை நெருங்கத்தான் போகிறது. ஆனால் இளமையோடு இருப்பதற்காக பலர் பல விதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக போட்டக்ஸ் ஊசி, முகத்தை சீரமைக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கிறார்கள். இவை மிகுந்த பின்விளைவுகள் கொண்டவை. இது போன்ற செயற்கையான விஷயங்களை மறந்து விட்டு இயற்கையான தோற்றத்தை பெற நாம் என்ன செய்ய வேண்டும்.

எப்போதும் இளமையான தோற்றத்துடன் நம் முகத்தை வைத்துக்கொள்ள உதவுவது தான் முக யோகா என்கிறார் மான்சி குலாட்டி. இவர் முக யோகா பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டவர். முக யோகா பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பிரத்யேகமாக பெண்களுக்கு முக யோகா சொல்லி தருகிறார்.

""முகத்திற்கென யோகா செய்வதால் முகத்தில் உள்ள தசைகள் தளர்ச்சியடையாமல் உறுதியாக இருப்பதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் நல்ல தோற்றத்தையும் தருகிறது. முகத்தில் உள்ள தசைகள் சீராக இயங்கவும் உதவுகிறது. நம்முடைய தன்னம்பிக்கையின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக தாடையிலுள்ள சதைகள், வாய்ப்பகுதி, கண் பகுதியிலுள்ள தேவையற்ற சதைகள் குறைந்து இளமையோடு இருக்க உதவுகிறது'' என்கிறார். இனி முக யோகா பற்றிய சில பயிற்சிகளைப் பார்ப்போம்:

அவசியமான குறிப்பு

நேரம் கிடைக்கும் போதெல்லாம் முகத்தை 10 விநாடிகளுக்கு இரு கைகளால் மசாஜ் செய்யுங்கள். மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். மன அழுத்தமும், வேலைப்பளுவும் உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளை பாதிக்கலாம். அதலிருந்து விடுபட இந்த மசாஜ் பயிற்சி உதவும். இதனை அனைத்து தரப்பு பெண்களும் செய்யலாம். பயிற்சியை செய்து முடிந்த பின் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.


முகம் அழகாக...

செய்முறை

முதலில் நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் பார்வை நேராக இருக்க வேண்டும். வலது கை, இடது கை ஆள்காட்டி விரலால் மூக்கிலிருந்து 2 இஞ்ச் இடைவெளி விட்டு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவும். இந்தப் பயிற்சியின் போது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விடவும். இந்தப் பயிற்சியை ஆரம்பத்தில் 15 விநாடிகள் செய்யலாம். தொடர்ந்து பயிற்சி நேரத்தை அதிகப்படுத்துங்கள்.

பயன்கள்

இந்த பயிற்சியின் மூலம் முகத்தில் உள்ள தசைகள் வலுப்பெறும். தோல்சுருக்கம் குறையும். முகம் பொலிவாகும்.

முக யோகா செய்வதால் ஏற்படும் பயன்கள்

இளமையான பொலிவான தோற்ற பொலிவை ஏற்படுத்த ஏராளமான அழகு சாதன பொருள்களை தற்போது விற்பனை செய்கிறார்கள். பெண்கள் தங்களுடைய தோலின் தன்மைக்கு எந்த பொருள் சரியாக இருக்கும் என்பதை தீர்மானிப்பதில்லை. போதிய விழிப்புணர்வு இல்லை. ஆனால், பேஷியல் யோகா என்பது இயற்கையானது. தொடர்ந்து பயிற்சி செய்யும் போது முக தோற்றத்தில் சிறப்பான மாறுதல்களை ஏற்படுத்தும்.

தோல் சுருக்கம் என்பது வயதால் ஏற்படும் பிரச்னை. ஆனால் இப்போதைய அவசர உலகில் மன அழுத்தம் என்பது வேலைக்கு செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பு பெண்களையும் பாதிக்கிறது. விளைவு சிறுவயிதிலேயே பலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு தோற்றத்தில் வயது மூப்பை ஏற்படுத்துகிறது.

பேஷியல் யோகா செய்யும் போது 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தோல் சுருக்கம் விரைவில் காணாமல் போகிறது.

பொதுவாகவே பெண்களின் கன்னப்பகுதியில் கொழுப்பு அதிகமாக தேங்கும். அதனால் முகம் சற்று குண்டாக தெரியலாம். தொடர் உடற்பயிற்சி மற்றும் பேஷியல் யோகா செய்வதால் கொழுப்பு கரைவதுடன், உறுதியாக தசைகள் உருவாகின்றன.


கன்னங்கள் குண்டாக

இதனைத் தொடர்ச்சியாக செய்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும்.

செய்முறை

உதட்டை இறுக்கமாக மூடிக்கொள்ளவும்.
முகத்தை 45 டிகிரி மேல் நோக்கி பார்த்து உதட்டை முத்தமிடுவது போன்று குவித்து 10 விநாடிகள் வைக்க வேண்டும்.
ஐந்து முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


கண் பார்வை மேம்பட "வி' போஸ்

இந்தப் பயிற்சி செய்வதால் கண் பார்வை மேம்படுகிறது. ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணம் தரும்.

செய்முறை

வலது கை, இடது கையிலுள்ள முதல் இரண்டு விரல்களை கொண்டு வலது கண் மற்றும் இடது கண் தொடக்க பகுதி, முடிவு பகுதி வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
10 முதல் 15 விநாடிகள் இதனை செய்யலாம்.

மென்மையான புருவம் பெற..

இது அக்குபஞ்சர் சிகிச்சை போன்றது. உங்கள் மன அழுத்தத்தைப் போக்கும். தொடர்ந்து பயிற்சி செய்யும் போது நெற்றியிலுள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.

செய்முறை

இரண்டு கைகளில் உள்ள விரல்கள் அனைத்தையும் ஒன்றாக குவித்து புருவத்திற்கு மேல் உள்ள நெற்றி பகுதியில் மெது மெதுவாக அழுத்த வேண்டும்.
இதனை நான்கு முறை செய்ய வேண்டும்.

தாடை நீட்சி பயிற்சி

தாடைக்கான சிறப்பு பயிற்சி இது. இதனை செய்வதால் தாடையிலுள்ள தசைகள் வலுப்பெறும் கொழுப்பு குறையும். தாடை கீழ் இருக்கும் தேவையான சதைகள் காணாமல் போய் சீர் பெறும். கழுத்து பகுதியிலுள்ள கோடுகள் மறையும்.

செய்முறை

முகத்தை 45 டிகிரி மேல் நோக்கிப் பார்க்க வேண்டும். 3 விநாடிகள் இந்த நிலை தொட வேண்டும். தொடர்ந்து கீழ் நோக்கி பார்க்க வேண்டும்.
அப்போது உங்கள் கழுத்து பகுதியில் உள்ள சதைகளில் ஏற்படும் மாற்றத்தை உணர்வீர்கள்.
மேலும் உங்கள் வாய் பகுதியிலும் அசைவு ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com