ரசமென்று லேசாக எண்ணாதீர்கள்...

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையுடன்,  "கருப்புத் தங்கமாகத்' திகழ்ந்த மிளகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, மிளகுத் தண்ணீர் என்ற வார்த்தையே மொளுவுத் தண்ணீர் என்று மருவி, பிரிட்டிஷார் காலத்தில்
ரசமென்று லேசாக எண்ணாதீர்கள்...

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையுடன்,  "கருப்புத் தங்கமாகத்' திகழ்ந்த மிளகைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, மிளகுத் தண்ணீர் என்ற வார்த்தையே மொளுவுத் தண்ணீர் என்று மருவி, பிரிட்டிஷார் காலத்தில், தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் "முளிகாடவ்னி' (Mulligatawny)  என்றழைக்கப் பெற்று பிரபலமடைந்தது. 

அயல்நாட்டவர்களின் தட்பவெப்ப நிலைக்கேற்பவும், உணவு பழக்கங்களுக்கு ஏற்பவும், பசி, செரிமானத்திற்காகவும், அசைவ உணவினால் ஏற்படும் வயிற்றுப் பிரச்னைகளைப் போக்கிக்கொள்வதற்காகவும் பயன்படுத்தும் சூப்   போன்றதுதான் நமது தென்னிந்தியாவின் ரசமும். 

ஆனால், இனிப்பு,  புளிப்பு,  கார்ப்பு,  கசப்பு,  துவர்ப்பு,  உவர்ப்பு என்னும் ஆறு சுவைகளும் ஒன்றாக சேர்ந்து, உடலுக்கு அனைத்து விதத்திலும் நன்மை செய்யும் உணவாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும்  இருப்பது,  வரப்பிரசாதமே. 

உணவிற்கு முன்னரோ அல்லது உணவிற்குப் பின்னரோ,  சோறுடன் சேர்த்தோ அல்லது அப்படியே குடிக்கும் வகையிலும் அனைவருக்கும் விருப்பமான ரசம் என்ற சொல்,  வேதிப்பொருட்கள் என்று பொருள்படும் நிலையில் வடமொழிச் சொல்லிலிருந்து உருவாகியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

தென்னிந்தியாவில்,  மிகக் குறிப்பாக,  தமிழ்நாடு, ஆந்திரா,  கர்நாடகாவில் பிரபலமான, தினசரி உணவில் கட்டாயம் இடம் பிடித்திருக்கக்கூடிய ஒரு உணவு  ரசம். ரசம் தயாரிப்பதற்கு அடிப்படையான பொருட்களாக புளி,  பூண்டு,  மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி என்பவையே இருந்தாலும், பச்சை மாங்காய், குடம்புளி,  தக்காளி,  வெல்லம்,   வேகவைத்த பருப்பு போன்றவைகளும் அடிப்படையாகவே கருதப்படுகின்றன. உணவுப்பொருட்களைப் பயன்படுத்தியும் ரசம் தயாரிக்கப்படும்போது,  சத்துகள் கூடுதலாகின்றன.  

தானியங்களில் அரிசி,  கம்பு, சிறுதானியங்கள் வேகவைத்த நீரைப் பயன்படுத்தி ரசம் வைக்கலாம். இவை ஆற்றலையும்,  "பி' குடும்ப வைட்டமின்களையும் வழங்குகின்றன. 

பருப்பு வகைகளில்,  துவரம் பருப்பு, கடலை,  கொள்ளு,  சோயா,  காராமணி போன்றவற்றை வேகவைத்து மசித்தோ அல்லது வடித்த நீரிலோ ரசம் தயாரிக்கலாம். இவற்றால், புரதம்,  இரும்புச்சத்து,  நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் போன்றவை உடலுக்குக் கிடைக்கின்றன. 

பால் வகையில்,  மோர், நெய்,  வெண்ணெய் போன்றவையும்,  மாமிச வகைகளில், பெரும்பாலும் அனைத்து இறைச்சிகளின் தசை, எலும்பு போன்றவையும், மீன்,  கருவாடு,  நண்டு,  போன்ற கடலுணவுகளும் ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த ரச வகைகளிலிருந்து,  வைட்டமின் "ஏ',  கால்சியம்,  துத்தநாகம், ஒமேகா அமிலங்கள் பிரதானமாகக் கிடைக்கின்றன. 

காய் கனி வகைகளில்,  தக்காளி,  பரங்கி, கத்தரிக்காய், மாங்காய், முருங்கைக்காய், முருங்கைப்பூ,  ஆவாரம்பூ,  அனைத்துக் கீரைகள்,  திராட்சை, பப்பாளி, அன்னாசி போன்றவற்றில் சுவை மிகுந்த ரசம் வைக்கலாம். 

இதனால், வைட்டமின்கள் "பி', "சி, "ஏ' நார்ச்சத்து, ஆனட்டிஆக்ஸிடன்ட், பைட்டோகெமிக்கல்ஸ், கால்சியம், மக்னீசியம், செலினியம், துத்தநாகம், இரும்புச்சத்து, போலிக் அமிலம் போன்ற சத்துகள் கிடைக்கப் பெறுகின்றன. 

கொழுப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள், இனிப்புப் பொருள்களில், மணிலா, எள், வேர்க்கடலை, தேங்காய், ஆலிவ், முந்திரி, வெல்லம், கரும்புச்சாறு போன்றவை சேர்க்கப்பட்டு ரசம் தயாரிக்கும்போது, உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் "ஈ'. இரும்புச்சத்து, போலிக் அமிலம் போன்றவை அபரிமிதமாகக் கிடைக்கின்றன. 

இவைமட்டுமல்லாமல்,  மூலிகைகளில், முடக்கற்றான், வாதநாராயணன் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை, கல்யாண முருங்கை, பிரண்டை, ஓமவல்லி, வெற்றிலை, வேப்பம் பூ  போன்றவை, மூட்டுவலி, சுவாசக் கோளாறுகள், அனைத்து வகைக் காய்ச்சல், வயிற்றுக் கோளாறு, தசைப்பிடிப்பு, வாயுத்தொல்லை, உடல்வலி, எலும்பு பலவீனம், சளி, இருமல், போன்ற உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் நிலையில் அவற்றிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ரசத்தில் சேர்க்கப்படுகின்றன.  

ரசத்தில் சேர்க்கப்படும் முக்கியமான மூலப்பொருட்களில் அளப்பரிய மருத்துவகுணங்களும் நிறைந்துள்ளன. 

பூண்டு – allin என்ற செயல்படாத பொருளை allinase என்னும் நொதி allicia என்ற செயல்படும் பொருளாக மாற்றுகிறது. இப்பொருள், பெரும்பான்மையான பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினைக் குறைக்கும் பணியையும் செய்கிறது. உணவு மூலம் பரவும் பாக்டீரியாக்கள், இரைப்பைக் குடல்அழற்சி, நுரையீரல் தொற்று, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் பேராற்றல் பூண்டிற்கு உண்டு. 

மிளகு - இந்தியாவின் தொன்மையான பாரம்பரிய மற்றும் வீட்டு மருத்துவப் பழக்கங்களில், இருமல் மற்றும் மார்புச் சளிக்கு மிளகே பிரதான மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

முடக்குவாதம், தலைவலி, குடல்வாயு போன்றவற்றிற்கும் அருமருந்தாகும். மிளகில் உள்ள piperine என்ற மூலப்பொருள், பிற மருந்துகளின் உட்கிரகிக்கும் திறனையும் அதிகரிக்கிகறது.  

சீரகம் - cuminaldehyde, cymene, terpenoids போன்ற நுண்பொருட்கள், செரிமானத்திற்குத் தேவையான நொதிகளையும், கணையச் சுரப்பினையும் சமநிலையில் வைக்கிறது. மேலும், இரும்புச்சத்து நிறைந்துள்ள சீரகம், குடலின் அடுக்கடுக்கான நகருதல் நிகழ்விற்கும் துணைபுரிவதால், இரைப்பையில் இருக்கும் உணவு, எளிதில் சிறுகுடல், பெருங்குடல் என்று செரித்தலுடன் மலக்குடலை அடைகிறது. 

மஞ்சள் - curcuminoids என்ற பீனாலிக் பொருளானது,  உடலுக்குள் செல்லும் மருந்துகள் வேதிப்பொருள்களின் நச்சுத்தன்மையை வெளியேற்றும் மிக முக்கிய வேலையைச்; செய்கிறது. வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்ப்பதற்கு, அதில் சளிபோன்ற கொழகொழப்புத் தன்மையைக் கொடுக்கிறது. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுப்பதுடன், முதுமையில் ஏற்படும் மறதி நோய்க்கும் நல்ல நிவாரணியாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

பெருங்காயம் - மூச்சுக்குழல் azulene, umbelliferone  போன்ற பொருட்கள் கிருமிகளை நீக்கவும்,வாயுக்கோளாறு மற்றும் வயிற்று உப்புசத்தைத் தவிர்க்கவும் பயன்படுகின்றன. வலியுடன் சேர்த்த தசைப்பிடிப்பு, வாயுப்பிடிப்பு, மந்தத்தன்மை, மார்புச் சளியுடன் சேர்ந்த இரைப்பு, சிறுநீரகக் கல் போன்றவற்றை சரி செய்வதற்கு பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் பிரதான உணவு முறைகளில், முழு திரவ உணவுகளும், அரை திட நிலை உணவுகளும் மிக முக்கியமானவை. அதிலும் வாய், தொண்டை அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், திட உணவுகளை செரிக்க இயலாமல் வயிறு மற்றும் குடல் பகுதியில் நோயுள்ளவர்களுக்கு சுமார் 500 முதல் 600 கலோரி கொடுக்கும் வடிகட்டப்பட்ட திரவ உணவுகள் கொடுக்கப்படும். இவற்றில் வேறெந்த உணவுப்பொருள்களின் நார், துகள்கள், பிசிறுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் அதிக மசாலாக்கள், காரம் , புளிப்பு சேர்க்காமல், சில  அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே வைத்து ரசம் தயாரித்துக் கொடுக்கலாம். 

பருப்பு சேர்த்த ரசத்தை, குழைய வேகவைத்த சோறுடன் நன்றாக மசித்துக்கொடுத்து வந்தால், வேறெந்த குறுகியகால நோய்கள் மற்றும் பிற வெளிப்புற உறுப்புகளின் அறுவை சிகிச்சை முடித்து நலம் பெற்று வருபவர்களுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், செரிமான உறுப்புகளுக்கும் அதிக வேலைப்பளு இருக்காது.  

இத்தனை வகை மருத்துவ குணங்கள் நிரம்பிய பொருட்களை சேர்த்து செய்யும் ரசம் அன்றாட உணவில் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டியது என்றாலும், மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு கண்கண்ட உணவாகவும் ரசம் உயர்வு பெறுகிறது. எனவே, இந்த எளிமையான ரசத்தை அனைத்து  வகையிலும் தயாரித்து ரசித்து, ருசித்து உண்டு, உடலைக் காப்போம்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com