வாரியார் வழி வந்த இன்னிசை சகோதரிகள்!

ஆன்மிகச் சொற்பொழிவுகளை நகைச்சுவையோடு மக்கள் மனதில் பதிய வைத்த பெருமைக்குரியவர் முருக பக்தர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவரது 9-ஆவது தம்பி மயூரநாதசிவத்தின் பேத்தி காயத்ரி.
வாரியார் வழி வந்த இன்னிசை சகோதரிகள்!

ஆன்மிகச் சொற்பொழிவுகளை நகைச்சுவையோடு மக்கள் மனதில் பதிய வைத்த பெருமைக்குரியவர் முருக பக்தர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். அவரது 9-ஆவது தம்பி மயூரநாதசிவத்தின் பேத்தி காயத்ரி.

வருக்கு வாரியார் வள்ளி (16), வாரியார் லோச்சனா(14) என இரு மகள்கள் 
உள்ளனர். 

சென்னையில் வள்ளி 11- ஆம் வகுப்பும், லோச்சனா 9 -ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். போரூரில் வசித்து வரும் இச்சகோதரிகள் இருவரும் வாரியார் சுவாமிகளைப் போலவே கோயில்கள் தோறும் பக்தி இன்னிசையுடன் கூடிய ஆன்மிகச் சொற்பொழிவை நிகழ்த்தி வருகிறார்கள். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட திருமுறைப் பாடல்களும், திருப்புகழ் பாடல்களிலும் இவர்கள் நிகழ்த்தும் இன்னிசைக் கச்சேரியின்போது பாடல்கள் மடை திறந்த வெள்ளம் போல அருவியாகக் கொட்டுகின்றன.

காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றம் இச்சகோதரிகளின் இசைத் திறமையைப் பாராட்டி அண்மையில் "திருமுறை இளவரசு' என்ற விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது. இவ்விருது வழங்கும் விழா நிறைவுக்குப் பின்னர் இச்சகோதரிகளை சந்தித்துப் பேசினோம்...

வாரியார் வள்ளி கூறியது: ""எங்கள் அப்பாவின் தாத்தா திருநெல்வேலி அம்பை வேலாயுத ஓதுவார். அவர் சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஓதுவாராகவும், இசை ஆசிரியராகவும் இருந்து வந்தார். எங்களது சின்னஞ்சிறு வயதில் அவருடன் இணைந்து கோயிலுக்குப் போகும்போது அவர் பாடும் திருமுறைப் பாடல்களை சேர்ந்து பாடி மனனம் செய்யக் கற்றுக் கொண்டோம். 

சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் எங்கள் பெற்றோர், சிவாலயங்களில் நடக்கும் முற்றோதல் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போது நாங்கள் இருவரும் திருமுறைப் பாடல்களைச் சேர்ந்து பாடும்போது பலரும் வியந்து பாராட்டினர். இந்தப் பாராட்டு எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தன.

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மாநில அளவில் நடத்திய திருமுறைப் பாடல்கள் மனனப் போட்டியில் நான் இரண்டாவது பரிசும், தங்கை லோச்சனா மூன்றாவது பரிசும் பெற்றோம். விளையாட்டுப் போக்காக திருமுறைப் பாடல்களை மனனம் செய்தோம். ஆனால் அதுவே கோயில், கோயிலாக பக்தி இன்னிசைக் கச்சேரி நடத்தும் அளவுக்கு உயர்த்தும் என நாங்கள் சிறிதும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பக்தி இன்னிசைக் கச்சேரியாக கோயில்களில் நடத்தி வருகிறோம். 

"வாரியார் டிவி' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள எங்களது யூ-டியூப் சேனலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எங்களது இன்னிசை விடியோக்கள் இருக்கின்றன. அவற்றை அனைவரும் பார்த்து மகிழலாம்.

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் கதிரேச ஓதுவாரை எங்கள் குருநாதராக ஏற்றுக்கொண்டு முறைப்படி திருமுறைப் பாடல்களைத் தொடர்ந்து கற்றுக் கொண்டும் இருக்கிறோம். பக்தி இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிகச் சொற்பொழிவு இரண்டும் தனியாகவும், இணைந்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் இதுவரை 100-க்கும் மேற்பட்ட கோயில் திருவிழாக்களில் எங்கள் பக்தி இன்னிசைக் கச்சேரி  நடந்துள்ளது.

பிளஸ் 2 படிப்பை முடித்தவுடன் இசைக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதும். அதன் பின்னர் பக்தி இன்னிசையுடன் கூடிய ஆன்மிகச் சொற்பொழிவை வாரியார் சுவாமிகளைப் போலவே உலகம் முழுவதும் கொண்டு சென்று பக்தி நெறியை வளர்க்க வேண்டும் என்பதே எனக்குள் இருக்கும் விருப்பம்'' என்றார் அவர்.

வாரியார் லோச்சனா கூறியது: ""நாங்கள் நடத்தும் பக்தி இன்னிசைக் கச்சேரிகளுக்கு பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் அதிகமாகப் பார்க்க முடிகிறது. இன்றைய இளைய சமுதாயத்தினரும் வர வேண்டும். இள வயதினரும் பக்தி நெறியைப் பரப்புவதை ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு அதை வளர்க்க முன் வந்தால் இந்தியா சிறந்த தேசமாக உருவெடுக்கும். 

"இல்லம்தோறும் திருப்புகழ், உள்ளம்தோறும் முருக சிந்தை' என்ற, எங்கள் தாத்தா வாரியார் சுவாமிகளின் பொன்மொழியை ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான். எங்களது குறிக்கோள், எங்களது ஆசை''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com