கதை சொல்லும் குறள்- 9: வேண்டாத விருந்தாளி

""மாதவி, இங்கே வாம்மா'' அன்பொழுகக் கூப்பிட்டார் தண்டாயுதபாணி.""என்ன, என்று'' பார்த்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து கண்களைத் திருப்பாமலேயே கேட்டாள் மாதவி.
கதை சொல்லும் குறள்- 9: வேண்டாத விருந்தாளி

""மாதவி, இங்கே வாம்மா'' அன்பொழுகக் கூப்பிட்டார் தண்டாயுதபாணி.

""என்ன, என்று'' பார்த்துக் கொண்டிருந்த சீரியலில் இருந்து கண்களைத் திருப்பாமலேயே கேட்டாள் மாதவி.

""வந்து, ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்''.

""அதுக்கு இப்பதான் நேரமா, கொஞ்சம் பொறுங்க சீரியல் முடியட்டும்''.

""ஆமாம், இது முடிஞ்சா, அடுத்ததுன்னு ராத்திரி பதினொரு மணி வரைக்கும் சோபாவை விட்டு எழுந்திரிக்க மாட்டே''.

""ஏன் சொல்ல மாட்டீங்க, வேளா, வேளைக்கு கொட்டிக்க சமைச்சு வெச்சுட்டுத்தானே, சீரியலைப் பார்க்கிறேன்''.

நேரம் தெரியாம வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டோமே என்று தண்டாயுதபாணி வெலவெலத்துப் போனார். சொல்ல வந்ததைக்கூட மறந்துபோனார். அம்மாடி, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா கடந்த இருபது வருஷமா இதே பழக்கமாயிடுச்சு. என்ன ஈனமான பொழப்பு இது. 

மாசம் சொளையா ஐம்பதாயிரம் ரூபாய்களை சம்பாதித்து இவ கையிலே கொண்டாந்து கொடுக்கறேன். ஒத்த புள்ள ஸ்ரீதரனும் பூனாவிலே ஹாஸ்டலில் தங்கி இன்ஜினியர் படிப்பு படிக்கிறான். இங்கே மும்பையில் வேலை. சொந்த பிளாட்டு. சென்னையில் பூர்வீக சொத்தின் மூலம் வரும் வருமானம் என்று வாழ்க்கை வசதியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நிம்மதிதான் இல்லை. தன் கைச்செலவுக்குக் கூட தண்டாயுதபாணி, மாதவியிடம்தான் கையேந்த வேண்டியிருக்கிறது.

ஏன் இந்த அவலநிலை? எல்லாம் பெண்டாட்டிதாசனாக ஆனதனால் வந்தவினை. மாசம் பொறந்தா சம்பளக் கவரை மாதவியிடம் சமர்ப்பிக்க வேண்டும். சொத்திலிருந்து வரும் வருமானமும், அவள்பேரில்தான் பேங்கில் போடப்படுகிறது. முடிசூடா ராணியாகத் திரிகிறாள். கையில் சவுக்குதான் இல்லை. அதனால் என்ன, வாயில் இருந்து அவள் கக்கும் சுடுசொற்களே, கேட்பவர் மீது சவுக்கடிகளாக விழும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, மாதவி மார்க்கெட்டுக்குப் போய் இருந்தாள். தண்டாயுதபாணி பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். இன்றைக்குக் மாதவிக்கு மீன் குழம்பு வைத்து சாப்பிட ஆசை வந்துவிட்டது. மீன்களை வாங்கி வந்தாள். 

மீன் வறுவலின் மணம், வீட்டுக்குள் பரவி, தண்டாயுதபாணிக்கு நாவில் உமிழ்நீரை அதிகமாகச் சுரக்கச் செய்தது.

வீட்டின், காலிங்பெல் கண கணத்தது.

ஐயோ, நல்ல சாப்பாட்டு நேரத்திலே யார் அது, பூஜை நேரத்தில் கரடியாக வந்திருக்கிறது? மாதவியின் முகம் கோணியது.

தண்டாயுதபாணி சென்று கதவைத் திறக்க, அவரின் பெற்றோர் நின்றிருந்தனர்.

""அப்பா, அம்மா, வாங்க வாங்க'' என்று சந்தோஷத்துடன் கூவினார் தண்டாயுதபாணி.

""தண்டாயுதபாணி, நீ கனவிலே வந்தையாம், அதனால் உன்னைப் பார்க்கணும், பார்க்கணும்னு அம்மா சொல்லிக்கிட்டே இருந்தாடா. அதான் இன்னைக்கு காலை பதினொரு மணி பிளைட்டைப் புடிச்சி வந்துட்டோம்''.

""வாங்க'', என்று சொல்லியபடி சமையல் அறையை விட்டு வெளியே வந்த மாதவிக்கு முகம் விளங்கவேயில்லை. மனசு எரிந்தது. நல்ல சாப்பாட்டு நேரத்தில், இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்குதுங்களே.

""ஒரு கடுதாசி போடக்கூடாது. இல்லை போனாவது செய்து சொல்லியிருக்கலாம் இல்ல'' என்றாள் மாதவி.

""புள்ள வீட்டுக்கு போறதுக்கு முன் அறிவிப்பு எதுக்குன்னு வந்துட்டோம்'' என்றாள் தண்டாயுதபாணியின் அம்மா கமலம்.

""கழுகுக்கு மூக்குல வேர்த்தாற்போல வந்துடுச்சுங்க ரெண்டும்'' என்ற மாதவியின் மனதில் தோன்றிய வெறுப்பை, அவளுடைய முகம் படம் பிடித்துக் காட்டியது.

நிலைமையை சமாளிக்க தண்டாயுதபாணி, ""சரி வாங்கம்மா, நீங்க ரெண்டு பேரும் போய் முகம், கை, கால்களைக் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்'' என்றார்.
கமலம், ""ஏங்க'' என்று கூப்பிட்டாள், தன் கணவன் சங்கரை.

""என்னம்மா'' என்றார் சங்கர்.

""வேண்டாத விருந்தாளியா நம்ம மருமகளுக்கு நாம தெரியுறோம். மீன் வாசனை ஊரையே தூக்குது. ஆசையா செய்து புருஷனோட சாப்பிட நினைச்சிருக்கா. நாம அதைக் கெடுத்துட்டோம். சரி ஒண்ணு செய்வோம்.

இன்னைக்கு நாம விரத நாள்'' என்று சொல்லிடுவோம்.

""கமலம், நீ சொல்றது சரிதான்''.

""ஊம்.. சத்தம் போடாதீங்க, ரூமுக்குள்ளே நாம பேசிக்கிறது வெளியே தெரிஞ்சுடப்போகுது. நாளைக்கு காலையிலே முதல் பிளைட்டுலே சென்னைக்கு திரும்பிடுவோம்''.

""அது வந்து''..

""இல்லங்க, நான்தான் என் புள்ளையைப் பார்த்துட்டேனே. பெத்தவங்க எப்படி வந்தா என்ன? வான்னு வாய் நிறைய அழைக்காத, ரசம் சோறு என்றாலும் அன்போடு போடாத வீடு மகன் வீடாக இருந்தாலும், வேற்று வீடுதான் என்றார்  கமலம்''.

அன்பும், பாசமும் பொங்க மகனைப் பார்க்க வந்த கமலமும், சங்கரும்,  வெறும் மோர் சோறும் ஊறுகாயும் வைத்துக் கொண்டு சாப்பிடுவதைப் பார்க்கப் பொறுக்காமல் தலைகுனிந்து நிராயுதபாணியாக அமர்ந்திருந்தான் தண்டாயுதபாணி.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

(குறள் எண்: 90)

பொருள் : அனிச்சப்பூ, முகர்ந்தவுடன் வாடிவிடும். அதுபோல், விருந்தினரை முகங்கோணி வரவேற்றால், விருந்தினர் வாடிவிடுவார்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com