ஆசையை விலக்கு! - 35:  நேற்றும் இன்றும்!

""மம்மா'' என்று கூவிக் கொண்டே வந்தான் நான்கே வயதான முரளி.
ஆசையை விலக்கு! - 35:  நேற்றும் இன்றும்!


""மம்மா'' என்று கூவிக் கொண்டே வந்தான் நான்கே வயதான முரளி.

""என்னடா கண்ணா?'' பூஜை அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த செந்தாமரை கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வெளியே வர, முரளி 
அவளைக் கட்டிக் கொண்டான்.

குனிந்து பேரனை வாரி அணைத்து, தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள்.

""செந்தாமரை, நேத்து ராத்திரி முழுவதும் இடுப்புவலின்னு அவஸ்தைப்பட்டே. தைலம் தடவி விட்டேன். இப்போ முரளியை இடுப்பிலே வெச்சுக்கிறியே, இரண்டு நாளைக்கு அவனைத் தூக்காமல் இருந்தால் என்ன?''

பேரனை உச்சி முகர்ந்தாள் செந்தாமரை, ""ஐயோ இவனைத் தூக்காமல் இந்தச் சரீரம் இருந்துதான் என்ன புண்ணியம்?'' அதற்குள் முரளி தாத்தான்னு சிதம்பரத்திடம் பாய்ந்து வந்தான்.

""கொஞ்சம் நேரம் இவனை வெச்சிக்கிட்டு இருங்கோ, மணி பகல் பதினொன்னாயிடுச்சு, இவனுக்கு ஜுஸ் கொடுக்கற நேரம் இது. நான் உள்ளே போய் சாத்துக்குடி ஜுஸ் பிழிஞ்சு எடுத்தாறேன்''.

வேகமாக உள்ளே செல்லும் செந்தாமரையைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார் சிதம்பரம்.

அப்பா, பேரன் மீது அவளுக்குக் கொள்ளை அன்பு. ஏன் உனக்கு மட்டும் உன் பேரன் மேல் பாசம் இல்லையா? சிதம்பரத்தின் மனசாட்சி அதட்டியது.

ஐயோ, பாசம் இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா? சாயந்தரம் ஐந்து மணியானால் போதும், முரளியைச் சுமந்துக் கொண்டு பக்கத்தில் உள்ள பார்க்குக்கு நடைப்பயிற்சி செய்யக் கிளம்பி விடுவார். அறுபத்து ஐந்து வயதில் நான்கு வயசுப் பேரனைத் தூக்கிச் செல்வது சாதாரண விஷயமா, தோள்பட்டையில் வலி தலைத் தூக்கும்பொழுது, ""கண்ணா, தாத்தாவுக்குக் கை வலிக்குது, கொஞ்சம் இறங்கி நடக்கிறீயா"" என்பார்.

எல்.கே.ஜி., படிக்கிற முரளி இஷ்டம் இருந்தால் இறங்கி நடப்பான், இல்லையென்றால் இறங்க அடம் பிடிப்பான். பிறகு என்ன? தன் நடைப்பயிற்சியைக் கைவிட்டு சிதம்பரம் வீடு திரும்பி விடுவார்.

இப்பொழுது கோடை விடுமுறை என்பதால் முரளிக்கு, காலை ஒன்பது மணி முதல் பகல் பன்னிரெண்டு மணி வரை இருந்த பள்ளிக்கூடம் கூட இப்பொழுது கிடையாது. முரளியின் அப்பா செந்திலும், அம்மா லலிதாவும் ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். காலை எட்டு மணிக்கு வேலைக்குப் புறப்பட்டுச் சென்றால் இரவு எட்டு மணிக்குத்தான் திரும்பி வருவார்கள்.

முரளியைப் பராமரிக்கும் வேலை முழுவதும் செந்தாமரை, சிதம்பரத்தைச் சார்ந்ததாக ஆகியிருந்தது. இருவருமே, அதை ஒரு பாரமாக நினைக்கவில்லை. முரளியை, கடவுள் கொடுத்த வரமாகக் கொண்டாடினர். அன்பையும், பாசத்தையும் பொழிந்து வளர்த்தனர்.

மூன்று மாதக் குழந்தையாக முரளி தன் அம்மா லலிதாவோடு, இங்கே வந்தது முதல் அவனுக்கு ராஜ உபசாரம்தான். அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டு லலிதாவும், செந்திலும் தங்கள் ஆபீஸ் வேலையில் முழுக் கவனத்தையும் செலுத்தினர்.

""முரளி கண்ணா, இன்னும் ஒரு வாய் தயிர்சாதத்தை வாங்கிக்கோடா, கடைசி வாய் சாதத்திலே தான் எல்லா சக்தியும் இருக்கும்''.

""முடியாது போ, எனக்கு வேணாம்''.

"கண்ணு இல்ல, இதைச் சாப்பிட்டீனா, உனக்கு பத்து தலை ராட்சசன் கதையைச் சொல்லுவேன்''.

""செந்தாமரை, நீ எந்த யுகத்திலே இருக்க. அவன் யூடியூப்புலே, "ஸ்பைடர் மேன்', "பேட் மேன்' பார்க்கிறான். அவன் கிட்டப் போய் பத்துத்தலை ராட்சசன் கதைங்கற..''

""முரளி, தாத்தா உனக்கு ஸ்பைடர் மேன் படத்தைப் போடவா, நீ ஒழுங்கா சாப்பிட்டா போடுவேன்''.

முரளி தயிர் சாதத்தை வேகமாக விழுங்கத் தொடங்கினான்.

""அடப் போக்கிரி'' என்று செந்தாமரை அவனை அணைத்துக் கொண்டாள்.

முரளியைப் பராமரிப்பதற்கே அதிக நேரம் செலவிடுவதால், செந்தாமரை பூஜை அறையில், குறைவான நேரத்தையே செலவிடத் தொடங்கினாள்.

சுவாமிப் படங்களுக்குப் பூ போடுவது, விளக்கேற்றுவது என்பதே அரிதாகி விட்டது. முன்பெல்லாம் விஷ்ணு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி என்று பாராயணம் செய்தவள் அதையெல்லாம் விடுத்து இன்று பேரன் முரளியின் பின்பே சுற்றிக் கொண்டிருக்கிறாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, செந்திலும் லலிதாவும் வீட்டிலே இருந்தனர். முரளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிறேன், என்று குளியல் அறைக்குச் சென்ற செந்தாமரை உடல் முழுவதும் எண்ணெய் மற்றும் சீயக்காய்ப் பொடி அப்ப வெளியே வந்தாள்.

""ஏங்க, கொஞ்சம் முரளியைத் துடைச்சு, பவுடர் போட்டு, கட்டில் மீது நான் எடுத்து வெச்சிருக்கிறத் துணியைப் போட்டு விடுங்க, என்னை எப்படி ஆக்கிட்டான் பாருங்க? நான் போய் குளிச்சிட்டு வரேன்''.

செந்திலும், லலிதாவும் பதினொரு மணிக்குத் தூங்கி எழுந்து வந்தனர். அதற்குள் பரபரவென்று செந்தாமரை, வெஜிடபுள் சூப்பைத் தயாரித்து, முரளிக்குப் புகட்டிக் கொண்டிருந்தாள்.

""அம்மா லலிதா, உனக்கும் செந்திலுக்கும் சூப்பை எடுத்து வெச்சிருக்கேன் குடிங்க, சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க, சேர்ந்து சாப்பிடலாம்''.

"" செந்தாமரை இன்னைக்கு என்ன சமையல்?'' என்றார் சிதம்பரம்.

""லலிதாவுக்குப் பிடிக்குமேன்னு புளியோதரையும், மசால்வடையும் செஞ்சேன், கூடவே தாளிச்ச தயிர்சாதம், அப்பளம், பச்சடி''.

""இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே, உன் அருமை மருமகள் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து உனக்குக் கூடமாட ஒத்தாசை பண்ணியிருக்கலாம்தானே?''

""உஸ்.. சும்மா இருங்க அவ காதிலே விழுந்துடப் போகுது''.

""திருந்தாத ஜென்மம் நீ'' என்று தலையில் அடித்துக் கொண்டு சிதம்பரம் இடம் பெயர்ந்தார்.

பகல் நேரத்துச் சாப்பாட்டு மேடை கலகலப்பாக இருந்தது. செந்தாமரை அருமை மகனுக்கும், மருமகளுக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள், அவர்கள் நன்றாகச் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ந்தாள்.

பாவம் வாரம் முழுவதும் உழைக்குதுங்க, ருசிச்சுச் சாப்பிடட்டும் என்று அவளுடைய பாசக்கார நெஞ்சம் எண்ணியது. தான் வருடம்தோறும் உழைப்பதை உணர முடியாமல் செய்தது எது? குடும்பத்தின் மீது கொண்ட பற்றுதான் காரணம் என்பதை அவள் எப்பொழுது உணர்வாள். செந்தாமரை உணரும் காலமும் வந்தது.

""அம்மா, அப்பா என்று வார்த்தைகைளை விழுங்கினான் செந்தில். 

அவ்வளவுதான், அவன் பெண்டாட்டி விழிகளை உருட்டி விழித்துப் பார்க்க, வந்து... எங்க ஆபீஸில் எனக்குப் பதவி உயர்வு கொடுத்திருக்காங்க''.

""டேய், இந்த நல்ல விஷயத்தைச் சொல்லவா இப்படித் தடுமாறுரே''.

""இல்லப்பா, வந்து அமெரிக்காவிலே, நியூஜெர்சியிலே நான்கு வருஷங்கள் வேலை பார்க்கணும்''.

""என்னடா சொல்லறே'' செந்தாமரை அலறியே விட்டாள்.

""ஏம்மா இப்படிப் பதறரீங்க? வாழ்க்கையில் நாங்க எப்பத்தான் முன்னேறது? நாங்க குடும்பத்தோடு அடுத்த மாசம் அமெரிக்கா போறோம்'' என்றாள் லலிதா.
""குடும்பம்னா'' என்றார் சிதம்பரம்.

""நானும் செந்திலும், முரளியும்'' என்றாள் லலிதா.

சொன்னபடியே, செந்திலின் குடும்பம் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டது. நல்ல காலம் சிதம்பரமும், செந்தாமரையும் குடியிருக்கும் வீடு அவர்களுக்குச் சொந்தமானது. மாடியை வாடகைக்கு விட்டிருந்ததினால் அதிலிருந்துக் கொஞ்சம் பணம், பிறகு சிதம்பரத்தின் பென்ஷன் என்று வயித்துப்பாட்டுக்குக் கஷ்டம் இல்லை. ஆனால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து இப்பொழுது வயதான காலத்தில் தனிக்குடித்தனம் என்றதும் செந்தாமரை நொடிந்துப் போனாள்.

பேரன் முரளியின் பிரிவை அவளால் தாங்கவே முடியவில்லை. மூன்று மாதக் குழந்தையாக அவள் மடியில் தவழ்ந்து, தளிர் நடை நடந்து, மழலைப் பேசி, தன் பிஞ்சுக் கரங்களினால் அவளைத் தழுவிக் கொண்டு, ஐயோ அவனின் வாசம் இன்னும் கூட  அவளைச் சூழ்ந்து இருக்கே.

இரவில் கணவனின் மார்பில் முகம் புதைத்துச் செந்தாமரை அழ, அவளைத் தேற்ற வகை தெரியாமல் அவரும் கண் கலங்குவார். சரி, சில மாதங்கள் ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார்.

ஆனால் பிள்ளைப் பாசத்திலும், பேரன் காட்டிய அன்பிலும் உயிர் வாழ்ந்த செந்தாமரை, நடைபிணமாக உலவி வந்தாள். புன்சிரிப்பு மாறாத அவள் முகம் சிரிப்பைத் தொலைத்து இருந்தது. ஓடி ஓடி வேலை பார்த்த கால்களும், ஒடிய ஒடிய இயங்கிய கைகளும் ஒடுங்கிப் போயின. ஒப்புக்குச் சமைப்பது, விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருப்பது என்று ஆகிப்போனது.

வீடியோ காலில் பேரனோடு பேசும் நாட்களே அவளுக்கு உயிர்ப்புக் கொடுத்த நாட்களாக அமைந்தது. முதலில் வாராவாரம் வந்த வீடியோ கால்கள் இப்பொழுது மாதத்துக்கு ஒரு முறை என்பதே அரிதாகிப் போனது.

""செந்தாமரை..''

""ஊம்..''

""வரியா, பக்கத்துல இருக்கிற கெளடியாமடம் கிருஷ்ணன் கோயில்வரை சென்று வரலாம்''.

""நான் வரலை, நீங்க போயிட்டு வாங்க''.

""நீ வரலைன்னா, நானும் போகலை''.

தன் கணவரை ஏறிட்டுப் பார்த்தாள் செந்தாமரை, ஷேவ் செய்யாமல், வியாதியில் அடிபட்டவரைப் போல நொந்து போய் நின்றவரைப் பார்த்த அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

""ஏன் இப்படி இருக்கறீங்க?''

""நீ மட்டும் என்னவாம், முரளி போனதிலிருந்து வருத்தப்பட்டு, சரியாச் சாப்பிடாம, தூங்காம, கண்கள் இடுக்கி, கன்னத்தில் குழிவிழுந்து, என்னால் உன்னப் பார்க்க முடியலைடி செந்தாமரை'', சிதம்பரம் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கத் திடுக்கிட்டாள் செந்தாமரை.

""வாங்க, நான் கிளம்பி வரேன் கிருஷ்ணன் கோயிலுக்குப் போகலாம்''.

கெளடியாமடம் கிருஷ்ணன் கோயிலில் அன்று பெருங்கூட்டம் கூடி இருந்தது. உலகப் புகழ் பெற்ற ஆன்மிகப் பேச்சாளர் கிரிதரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். கூட்டத்தோடு கூட்டமாக ஓர் ஓரத்தில் சாமியைத் தரிசனம் பண்ணிவிட்டு, அவர் பேச்சைக் கேட்கச் சிதம்பரமும், செந்தாமரையும் அமர்ந்தனர்.

கிரிதரன் தன் ஆன்மிகப் பேச்சிக்கிடையே ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்.

""ஒரு காகம் ஒரு மாமிசத் துண்டை எடுத்துக் கொண்டு, தக்க இடத்தில் அமர்ந்து உண்ண, வானத்தில் பறக்கத் தொடங்கியது. அவ்வளவுதான் கழுகுகள் கூட்டம் காக்கையைத் துரத்த ஆரம்பித்தன. ஐயோ, எப்படி உயிர் பிழைப்பேன்? என்று எண்ணி அங்கும் இங்குமாகப் பறந்தது. காக்கையின் அவஸ்தையைக் கண்ட கருடன் ஒன்று, "ஏ காக்கையே', கழுகுகள் உன்னைத் துரத்தவில்லை? உன் வாயில் இருக்கும் மாமிசத் துண்டுக்காக அவை உன் பின்னால் வருகின்றன, அதைக் கீழே போடு என்றது. காக்கையும் மாமிசத் துண்டைக் கீழே போட அதைப் பிடிக்க, கழுகுகள் பறந்து சென்றுவிட்டன.

அந்தக் காக்கையின் நிலையில்தான் மனிதர்களாகிய நாம் இருக்கிறோம். வீணாக ஆசை, பந்த பாசம் என்று பிடித்துக் கொண்டு அலைகிறோம். அதை எல்லாவற்றையும் தூக்கி எறியுங்கள், ஆசையே இல்லாதவனான ஆண்டவன் மீது பற்று வையுங்கள். அவன் உங்களைக் காப்பான், என்றும் நம்மீது இரக்கம் காட்ட, அன்பு செலுத்த இறைவன் இருக்கும்பொழுது அர்த்தமற்றதைப் பற்றிக் கவலையில் மூழ்காதீர்கள்'' என்றார்.

அவ்வளவுதான் செந்தாமரையின் அஞ்ஞானம் பட்டென்று விலகியது. அங்கே உண்மையான ஞானம் அவளுடைய மனதைப் பற்றிக் கொண்டது. கோயிலில் விற்ற லட்டு கிருஷ்ணன் சிலையை வாங்கிக் கொண்டாள். இதோ இனி இவன்தான் அவளின் நிரந்தர முரளி. 

பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டாள், இனிப் பேரானந்தம்தான்.

பற்றுக பற்றற்றான் பற்றினை ;  அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(குறள் எண்: 350)

பொருள் : ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க, அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com