பனிச்சறுக்குப் போட்டியில்  தங்கம் வெல்வேன்!

2021 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அல்பைனில் நடந்த தேசிய குளிர்கால விளையாட்டில், பெங்களூருவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜியா ஆர்யன் பனிச்சறுக்குப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற செய்திவெளியானபோது
பனிச்சறுக்குப் போட்டியில்  தங்கம் வெல்வேன்!

2021 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அல்பைனில் நடந்த தேசிய குளிர்கால விளையாட்டில், பெங்களூருவைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜியா ஆர்யன் பனிச்சறுக்குப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற செய்திவெளியானபோது பலரை வியக்க வைத்தது. இவ்வளவு சிறுவயதில் ஜியா ஆர்யனுக்கு ஸ்கீயிங் எனப்படும் பனிசறுக்கு விளையாட்டில் எப்படி ஆர்வமேற்பட்டது?

""என்னுடைய ஒன்பதாவது வயதில் பெற்றோருடன் ஜம்மு- காஷ்மீர் சென்றிருந்தேன். அந்த பயணத்தின்போது அங்குள்ள மலைப்பகுதிகளில் பலர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதை பார்த்தேன். நாமும் முயற்சிக்கலாமே என்ற எண்ணம் தோன்றவே பெற்றோரிடம் என் விருப்பத்தைக் கூறினேன். அவர்களும் அங்கிருந்த "ஜவஹர் இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டெய்னரிங் அண்ட் வின்டர் ஸ்போர்ட்ஸ்' மையத்தில் என்னுடைய பெயரைப் பதிவு செய்தனர். பனிச்சறுக்கு விளையாட்டில் அடிப்படை, நடுப்பகுதி மற்றும் இறுதி என மூன்று கட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் 14 நாள்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலில் பனி அதிகமாக படரும் பகுதிகள், விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை. பனிச்சறுக்கின்போது எப்படி மூவிங் செய்வது போன்றவைகளில் பயிற்சி யளிக்கப்படுகிறது.

இதே போன்று இந்த விளையாட்டில் ஸ்லாலோம், ஜெயிண்ட் ஸ்லாலோம் மற்றும் டவுன்ஹில் என பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தூரம் என கணக்கிட்டுள்ளனர். ஸ்லாலோம் மற்றும் ஜெயிண்ட் ஸ்லாலோம் என இருபிரிவுகளிலும் நான் தேர்ச்சிப் பெற்றேன். ஸ்லாலோம் பிரிவில் சிவப்பு மற்றும் நீலம் என இரு வண்ணங்களில் இரு கம்பங்கள் மிக குறுகிய இடைவெளியில் நட்டு வைப்பார்கள். பனிச்சறுக்கின் போது இந்த இரு கம்பங்களுக்கும் இடையே புகுந்து வெளிவர வேண்டும். ஏதாவது ஒரு கம்பத்தை தவறவிட்டாலும் தோற்றதாக கருதப்படுவர். ஜெயிண்ட் ஸ்லாலோம் பிரிவில் இந்த கம்பங்கள் நிறைய இடைவெளிவிட்டு நட்டு வைப்பார்கள். விளையாட்டு வீரர்கள் இந்த கம்பங்களையும், தூரத்தையும் எவ்வளவு குறுகிய நேரத்தில் நுழைந்து கடந்து செல்வதை பொறுத்தே வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படும். பனிச்சறுக்கு விளையாட்டைப் பற்றி சுலபமாக சொல்லி விடலாமே தவிர, இதற்கான விளை யாட்டு சாதனங்களை வாங்க மிகவும் செலவாகும். ஒரு ஸ்கீயிங் கிட் விலை 15 லட்சம் ரூபாய் ஆகும். பயிற்சிப் பெற கட்டணமும் அதிகம். சற்று ஆபத்தான விளையாட்டும் கூட.

அமெரிக்க முன்னாள் உலக கோப்பை அல்பைன் ஸ்கீ வீராங்கனை லிண்ட் சே கரோவின் வோன், அவர் பங்கேற்ற மொத்த பனிச்சறுக்குப் போட்டிகளில் நான்கு முறை உலக கோப்பை வென்றுள்ளார். இதே போன்று அமெரிக்காவைச் சேர்ந்த இருமுறை ஒலிம்பிக்ஸ் பனிச்சறுக்குப் போட்டியில் தங்கம் வென்றவரும், உலக கோப்பை அல்பைன் ஸ்கீ வீராங்கனையுமான மிக்காலா பவுலின் ஷிப்ரின் மூன்று முறை உலக கோப்பை சாம்பியனாகவும், நான்கு முறை உலக சாம்பியனாகவும் வெற்றிப் பெற்றுள்ளார். நான் பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமுடன் ஈடுபடுவதற்கு இவர்களையே முன்னோடியாக கருதுகிறேன்.

தற்போது இமாச்சலப் பிரதேசம் ரோஹ்டாங் பகுதியில் ஐடி பிடி மெரின் போர்ஸ் மூலம் பயிற்சி பெற வேண்டிய நான், பொதுமுடக்கம் காரணமாக பயிற்சியளிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நேரத்தை வீணாக்காமல் தினமும் மலை மீது 5 கி.மீ. தூரம் ஓடிச் சென்று மீண்டும் கீழே இறங்கி ஓடிவரும் பயிற்சியை செய்து வருகிறேன். நானே சுயமாக பனிச்சறுக்கு விளையாட்டில் பயிற்சிப் பெறுவதோடு,

என்னுடைய இடுப்புப் பகுதியை வலுவேற்ற சைக்கிள் ஓட்டுகிறேன். வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரியாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறேன். இந்தியாவில் பனிச்சறுக்குப் போட்டிகள் நடத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் குளிர்கால போட்டிகளை நடத்த அரசு தயக்கம் காட்டுகிறது.

இந்தத் தயக்கத்தைப் போக்கவும், இளம் வீரர்களைஉருவாக்கவும் திட்டமிட்டுள்ளேன். 2024- ஆம் ஆண்டுகேங்வோனில் நடக்கவுள்ள குளிர்கால இளைஞர் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கம் வெல்லுவதே என்னுடைய லட்சியம்'' என்கிறார் ஜியா ஆர்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com