கரோனா...   என்ன சாப்பிடுவது?

கரோனா இரண்டாம் அலையின் அறிகுறிகளாக, காய்ச்சல் ஏறக்குறைய 40 ,50 சதவிகிதத்தினருக்கு இருக்கும் நிலையில், இருமல், தொண்டை கரகரப்பு, சளி போன்றவை 80 சதவிகித நோயாளிகளுக்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன
கரோனா...   என்ன சாப்பிடுவது?

கரோனா இரண்டாம் அலையின் அறிகுறிகளாக, காய்ச்சல் ஏறக்குறைய 40 ,50 சதவிகிதத்தினருக்கு இருக்கும் நிலையில், இருமல், தொண்டை கரகரப்பு, சளி போன்றவை 80 சதவிகித நோயாளிகளுக்கு இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தவிர  உடல் வலி, கண் சிவந்து பொங்குதல், சுவை மற்றும் மணமின்மை போன்றவைகளுடன் 20 சதவிகிதத்தினர் கடுமையான தலைவலியாலும் பாதிக்கப்படுகின்றனர். 

கரோனா தொற்றினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள், வீடு திரும்பியவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் என்று எவராக இருப்பினும், அறிகுறி தென்பட்டு, பரிசோதனையில் தொற்று முடிவு செய்யப்பட்ட நாளிலிருந்து, முழு குணம் தெரியும் வரை, மருத்துவ சிகிச்சையை கட்டாயம் தொடர்ச்சியாகப் பின்பற்றிதான் ஆகவேண்டும்.

அதே நேரம், மருத்துவ சிகிச்சைக்குக் கொடுக்கப்படும் சமமான முக்கியத்துவத்தை, உணவுக்கும் கொடுத்தாக வேண்டும். அப்போதுதான், மருந்தும் உணவும் ஒருசேர நோயைக் குணப்படுத்தி, உடல் நிலையில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். மேற்கூறிய அறிகுறிகள் இருக்கும்போது, எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எவ்வகை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்: 

காய்ச்சல் - மூன்று முதல் ஐந்து நாள்கள் வரையில் காய்ச்சல் இருக்கும்போது, திட உணவுகளைத் தவிர்த்து, நொய்யரிசி, வரகு, உடைத்த கோதுமை போன்ற ஏதாவது ஒரு தானியத்துடன், சிறிதளவு பாசிப்பருப்பு சேர்த்து, தாராளமாக நீர் சேர்த்து, சிறிது மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூளுடன் குழைத்த கஞ்சி போன்று கொடுக்கலாம். வாந்தி அல்லது செரிமானக் கோளாறு இருந்தாலும் நிவர்த்தியாகும். இடையுணவாக பருப்பு சூப், காய்கள் வேகவைத்து மசித்தும் அல்லது சூப் போன்றும் கொடுக்கலாம். முட்டை, அதிக எண்ணெய் சேர்த்த பொருட்கள், வெளியில் உணவகங்களில் வாங்கும் உணவுகள், மாமிச உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். 

தலைவலி - உடலில் நோய் ஏற்படும்போது, அதை எதிர்த்து செயல்படும் செல்களால் சுரக்கப்படும், புரதப் பொருளான சைட்டோகைன்ஸ் என்னும் செயலூக்கிகள் ஏற்படுத்தும் தூண்டுதல்களே வலியாக உணரப்படுகிறது. இவையே கரோனா தொற்றின்போது ஏற்படும் தலை வலிக்கும் காரணமாக இருக்கின்றன. இயற்கையாகவே, பாலாடைக்கட்டி, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, தயிர், காபி, சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள், இந்த சைட்டோகைன்ஸ் புரதங்களை அதிகரிக்கும் தன்மையைப் பெற்றிருப்பதால், அவற்றைத் தவிர்த்து விட வேண்டும். 

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், பச்சை காய்கள், அரிசியுணவு போன்றவற்றைக் கொடுப்பதாலும், உடலின் நீரின் அளவு குறையாமல் திரவ உணவுகளைத் தொடர்ச்சியாக, சிறிது சிறிதாகக் கொடுப்பதாலும் தலைவலியைக் கட்டுப்படுத்தி, படிப்படியாகக் நிவாரணம் பெறலாம். திட உணவுகள் மற்றும் மாமிச உணவுகளால் செரிமானமின்மை  ஏற்பட்டால், தலைவலியும் அதிகரிக்கும் என்பதால், சூப் போன்ற திரவ உணவுகளையும்,  நார்ச்சத்துள்ள முழு தானிய உணவுகளையும் பின்பற்றுதல் நல்லது.  

இருமல் - நுரையீரலில் இருக்கும் கிருமியை அல்லது சளியை வெளித்தள்ளுவதற்காக ஏற்படும் வறட்டு இருமல் அல்லது சளியுடன் சேர்ந்த இருமல், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குக் கூட சில நோயாளிகளுக்கு இருக்கிறது. இவ்வாறான தொடர்ச்சியான இருமல், உணவு உண்ணுவதற்கும் சிரமத்தைக் கொடுப்பதால்,  போதுமான ஆற்றலும் சத்துக்களும் கிடைக்காமல், நாளடைவில் உடல் மேலும் நலிவடைகிறது. இதைத் தவிர்ப்பதற்கு முதலில் இருமலைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். ஏற்கெனவே கூறிய கஞ்சி  வகை உணவுகள் தொண்டைப் பகுதி மற்றும் உணவுக் குழாய்க்கு இதமளித்து, உணவு மென்மையாக உள்ளே இறங்குவதற்கும் உதவிசெய்கிறது.
 மேலும், இருமல் மற்றும் சளி மிக அதிகமாக இருக்கும் நிலையில், உடலுக்கு சட்டென்று குளிர்ச்சி நிலையைத் தரும் பழங்கள், பழச்சாறு, கீரைகள் போன்றவற்றை  மூன்று அல்லது நான்கு நாள்களுக்குக் கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. சற்றே குணம் அடைந்தவுடன், வெதுவெதுப்பான நீரில் பழச்சாறு கலந்து, அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி அல்லது மிளகுப்பொடி சேர்த்தும் கொடுக்கலாம்.  கீரைகளை, பருப்புடன் சேர்த்து மசியலாகவே கொடுக்க வேண்டும். இவற்றுடன், நெல்லிக்காய், தூதுவளை, கற்பூரவல்லி, வெற்றிலை, சித்தரத்தை, அதிமதுரம், கடுக்காய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயன்படுத்தி ரசம் செய்து, குழைத்த சாதத்துடன் கொடுப்பதால் குணம் கிடைக்கும். 

சுவை மற்றும் மணமின்மை -– உணவின் சுவையை அறிந்து கொள்வதற்கு, உமிழ்நீர் மிகவும் இன்றியமையாதது. உடலில் நோய் இருக்கும்போதும், அதற்காக கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மையாலும், உமிழ்நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்படுவதாலும் சுவை தெரிவதில்லை. மூக்கினுள் இருக்கும்  மணமறியும் பணியைச் செய்யும் மென்மையான சிறப்புத் திசுக்கள் நோய்த் தாக்கத்தின் காரணமாகத் தற்காலிகமாக செயலிழந்து விடுவதால், உணவின் மணம் தெரிவதில்லை. 

இந்த இரண்டு உணர்வுகளுமே, உணவை விரும்பி உண்ணுவதற்குத் துணைபுரிகின்றன. கரோனா தொற்றில், சுவையும் மணமும் தெரியவில்லை என்ற காரணத்தினால், உணவைத் தவிர்த்தல் கூடாது. நாக்கிலுள்ள சுவை அரும்புகளையும் மூக்கிற்கு மணமறியும் தூண்டுதலையும் எளிதில் கொடுக்கவல்லது எலுமிச்சம் பழம், நார்த்தங்காய், புளியம்பழம், புதினா, ஏலக்காய் போன்ற உணவுப்பொருட்கள். அவற்றை அவ்வவ்போது முகர்ந்து பார்க்கச் செய்வதாலும் வாயில் வைத்திருக்கச் செய்வதாலும், எப்போதும் குடிக்கும் நீரில் கலந்து கொடுப்பதாலும்,  உணர்வறியும் நரம்புகளுக்குத் தூண்டுதல் கிடைத்து, குறைந்த நாள்களிலேயே சுவையும் மணமும் தெரிந்து குணம் கிடைக்கும். 

உடல்சோர்வு - தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஏறக்குறைய மூன்று வாரங்கள் வரை இந்த உடல் சோர்வு இருக்கிறது. இந்நிலையில், உடலுக்குத் தேவையான ஆற்றல், புரதம், கொழுப்புச் சத்துகள் படிப்படியாக உயர்த்தப்பட்டு, அவர்களின் வயதுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்டுள்ள அளவினைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

பலவகை தானியங்களை மாவாக அரைத்த சத்து மாவு கஞ்சியை தினமும் காலை, மாலை என இருவேளைகள் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம். பகலில்,  கஞ்சியாகக் கொடுத்த உணவுகளை குழைத்த நிலைக்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தொடர்ந்த பிறகு, திட நிலைக்கு மாற்றிவிடவேண்டும். மீன், முட்டை, மாமிச வகை சூப் என்று ஏதாவது ஒரு அசைவ வகை உணவைக் கொடுக்கலாம். 

சைவமாக இருப்பின், இரண்டு வேளைகள் பருப்பு உணவுகளைக் கொடுக்க வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அளிக்கும் காய்கள் மற்றும் பழவகை சாலட்களையும், பாதாம், பிஸ்தா, வால்நட், முந்திரி, தேங்காய், எள், மணிலா( வேர்க் கடலை) போன்ற ஆற்றலும்,கொழுப்பும் தரும் கொட்டை வகை உணவுகளையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். 

வயிற்றுப்போக்கு - இருக்கும் நிலையில், பால், முட்டை, மாமிசம் போன்ற அசைவ உணவுகளையும், கீரைகள், அதிக புளிப்பு, காரம், மசாலா சேர்த்த உணவுகளையும் தவிர்த்துவிட வேண்டும். அவ்வப்போது  எலுமிச்சம்பழச்சாறு எடுத்துக் கொள்வதுடன்  காய்ச்சல், இருமல், சளி இல்லாத நிலையில் இஞ்சி, மிளகு, சீரகம், ஓமம் போன்ற பொருட்களில் ஏதாவது ஒன்றிரண்டை சேர்த்து மோர் சாதமாக எடுத்துக் கொள்ளலாம்.  வயிற்றுப்போக்கு நிற்கும் வரையில், குழைத்த தானியக் கஞ்சி வகைகள் சிறந்த பலனைக் கொடுக்கும். உடலின் நீர்ச்சத்து குறையாவண்ணம், அதிக நீருள்ள உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். 

அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com