மறக்கமுடியாத வாய்ப்பு: பத்தாயிரம் பேருக்கு சமையல்!

தானத்தில் சிறந்தது அன்னதானம். பசிப்பிணி போக்குவதற்கு நிகரான தர்மம் வேறில்லை.
மறக்கமுடியாத வாய்ப்பு: பத்தாயிரம் பேருக்கு சமையல்!

தானத்தில் சிறந்தது அன்னதானம். பசிப்பிணி போக்குவதற்கு நிகரான தர்மம் வேறில்லை. அதிலும் இன்றைய கொள்ளை நோய் காலத்தில் இதன் அருமை இன்னும் அதிகம். இந்த அறப் பணியை கோவையில் நிறைவாகச் செய்து வருபவர் தேன்மொழி.  பிறர் 
துன்பம் காண சகியாத உள்ளம் கொண்டவர். தேர்ந்த சமையல் கலைஞர்.  ஒரே சமயத்தில்  500 பேருக்கும்  சமைப்பார்- ஆயிரம், இரண்டாயிரம் பேருக்கும் சமைப்பார்.  ஒரு சமயம்  10 ஆயிரம்   பேருக்கும் சமைத்திருக்கிறார்.  கரோனா காலத்தில்  சம்பாதிக்க  வசதியற்ற, நடைபாதைவாசிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு தினமும்  சமைத்து - உணவுப் பொட்டலங்களை நண்பர்கள் உதவியுடன்  வழங்கி  வருகிறார். 
எப்படி சாத்தியம்? தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
""அப்பா ரவிச்சந்திரன் கட்டட வேலைக்குப் போவார். அம்மா விஜயா கேன்டீனில் வேலை பார்த்தார். ஒரே தங்கை நான் என்று சிறிய குடும்பம் அன்றாடம் வேலை பார்த்தால் தான் குடும்பம் நடக்கும் என்ற நிலை.  நான் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். அதற்குமேல் பள்ளிக்குப் போக இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனக்குள் மாற்றத்தை உணர ஆரம்பித்த நாள்களில் அம்மா உறுதுணையாக இருந்தார். பாலின மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்த பொழுதும் பெற்றோர் நன்கு கவனித்துக் கொண்டார்கள். 
 என்னுடைய பனிரெண்டாவது வயதில் கட்டட வேலைக்குப் போய் கல் சுமந்தேன். கொஞ்சம் பெற்றோரின் சுமைக்குத் தோள் கொடுக்கிறோம் என்ற திருப்தி இருந்தது. சமூகம் ஒதுக்கினாலும் குடும்பம் அன்பைப் பொழிந்தது. சுமை தூக்கும் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் மனதுக்குள் ஒரு சுமை அழுத்திக்கொண்டே இருந்தது. இப்படிக் கூலி வாங்கிப் பிழைத்து எத்தனை காலம் கஷ்டப்படுவது? முன்னேற்றத்திற்கு வழி என்ன? இந்த கேள்விகள் விடையற்று நின்றன. 
கூலி வேலை செய்யப்போன இடத்தில் தொழில் பயிற்சி கொடுத்து சுயமாகவும் கெளரவமாகவும் வாழ்வதற்கு வழிகாட்டும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த மதனாஅம்மா பற்றிக் கேள்விப்பட்டு அவர்களை சந்தித்தேன்.  18வயதில் சமையல் பயிற்சி பெறுவதற்கு முடி வெடுத்தேன். அவர்களோடு ஆறு ஆண்டுகள் சமையல் பணியில் உடனிருந்து சமையல் கலையின் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். பெரிய பெரிய பாத்திரங்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சமைப்பது தனிக்கலை. அதற்கு மனவலிமை உடல்பலம் இரண்டும் வேண்டும். என்னுடைய மனம் எப்படியும் நாம் இந்தத் துறையில் ஜெயிக்க வேண்டும் குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதில் திடமாக இருந்தது. 
என்னுடைய இருபத்தைந்தாவது வயதில் முதல் முறையாக தனியே சமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு காதணி விழாவுக்கு ஐநூறு பேருக்கு பிரியாணி செய்யும் வாய்ப்பு, மனதில் பதட்டம் இருந்த நேரத்தில் அம்மா உதவிக்கு நானிருக்கிறேன். நீ துணிந்து வேலையைப் பார் என்று ஊக்கப்படுத்தினார். இறையருளால் நல்லபடியாக செய்து நல்ல பேர் வாங்கிவிட்டேன். என் சாப்பாட்டைச் சாப்பிட்டவர்கள் என்னைக் கூப்பிட்டு அவர்கள் வீட்டு விசேஷங்களில் வாய்ப்புக் கொடுத்தார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளில் எத்தனையோ விசேஷங்களுக்கு சமைத்துவிட்டேன். ஆரம்பத்தில் ஐநூறு பேர் சாப்பிட்டால் ஓரிருவர் விசாரித்து  எனது  தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்தன. இப்போது சில நேரங்களில் ஒரே நாளில் நான்கு ஐந்து விசேஷங்களுக்கு சமைப்பதற்கான ஆர்டர்கள் வருகின்றன. மேல்வேலைக்கு நம்பிக்கையான ஆட்களை வைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் ஓடிஓடி அடுப்பில் நானே நின்று சமைக்கிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் மறக்க முடியாதபடி ஒரு வாய்ப்பு கிடைத்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பத்தாயிரம் பேருக்கு அசைவ சமையல் செய்தேன். பலரும் பாராட்டினார்கள். சமையல் துறையில் எனக்கென அங்கீகாரமும் நற்பெயரும் பெற்றுத் தந்த பணி என்று சொல்லுவேன். 
 இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டிய துறை. ஆண்டு முழுவதும் உழைத்தாலும் மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருகியதே தவிர களைப்பில்லை. காரணம் என் பெற்றோரை இன்றைக்கு வசதியோடும் மகிழ்ச்சியோடும் வைத்திருக்க முடிகிறதே. என்றைக்குத் தனியே நான் சமையல் செய்யத் தொடங்கினேனோ அன்றிலிருந்து அம்மாவை வேலைக்கு அனுப்பாமல் வீட்டில் சுகமாக வைத்துக் கொண்டேன். 
ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தக் கரோனா பெருந்தொற்று வந்து சேர்ந்திருக்கிறது. விசேஷங்கள் கல்யாணங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இன்றைக்கு எனக்கு வசதிக் குறைவு ஒன்றுமில்லை என்றாலும் தினக்கூலி வாங்கிப் பிழைப்போரின் நிலை அனுபவத்தால் எனக்கு நன்றாகத் தெரியும். மனம் பதறியது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நம்மால் ஆனது ஏதாவது செய்ய வேண்டுமே. மனிதராகப் பிறந்தவர்கள் பிறர் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? 
 எங்கள் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவலாம் என்று முடிவெடுத்தோம். இருப்பவர்களைத் தேடிச் சென்று அவர்களால் முடிந்த உதவி செய்யச் சொல்லிக் கேட்போம். தங்களால் முடிந்ததைத் தருவார்கள். சேர்ந்த பொருட்களைக் கொண்டு அன்றைக்கு சமையல் செய்து பொட்டலங்களை கஷ்டத்தில் இருபவர்களைத் தேடிச் சென்று கொடுக்கிறோம். சில நாள்களில் நிறைய பொருளுதவி கிடைக்கும். 
அந்த  சமயத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேருக்குக் கூட சமையல் செய்து கொடுக்கிறேன். சில நாட்களில் ஐநூறு, இருநூறு என்று சுருங்கிப் போய்விடுவதும் உண்டு. சென்ற ஆண்டில் பொதுமுடக்கம் இருந்த போதும் சரி தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும் என்னுடைய பணி தொடர்கிறது. 
ஒரு பைசா எனக்கென்று பெற்றுக் கொள்வதில்லை. தினமும் சமையல் செய்து கொடுப்பதைத் தவிர்ப்பதும் இல்லை. ஆயிரக்கணக்கான  பேருக்கு சமையல் செய்வதனால் பொது இடம் தேடி அங்கே சமைக்கிறேன்.  இருநூறு, முந்நூறு பேருக்கு செய்வதற்குத் தான் பொருள்கள் திரட்ட முடிந்தது என்றால் என் வீட்டிலேயே சமையல் செய்ய ஏற்பாடு செய்து சமைக்கிறேன். 
இந்த உணவுப் பொட்டலங்கள் பசியோடு இருப்பவர்களின் கைகளுக்குப் போய் சேரும் பொழுது ஒரு நிம்மதியும் நிறைவும் இருக்கிறதே அது எனக்குப் போதுமானது. சகமனிதர்களின் பசி தீர்க்க இறைவன் வாய்ப்பளித்திருக்கிறார். இந்தக் கொடுமையான காலம் முடிந்து அனைவரும் நிம்மதியாக வாழும் காலம் விரைவில் வரவேண்டும் என்ற வேண்டுதலோடு என் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com