சேவையாலும் கல்வியாலும் மக்களை கவர்ந்தவர்!

கரோனா பொதுமுடக்கத்தால்,  பல லட்சம் பேர்  வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதையும், தெருக்களில் வசிக்கும் ஏழைகள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் என பல தரப்பினர் பசியால் வாடுவதையும்  நாம் தினந்தோறும்
சேவையாலும் கல்வியாலும் மக்களை கவர்ந்தவர்!

கரோனா பொதுமுடக்கத்தால், பல லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதையும், தெருக்களில் வசிக்கும் ஏழைகள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் என பல தரப்பினர் பசியால் வாடுவதையும் நாம் தினந்தோறும் கண் கூடாகப் பார்க்க முடிகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் தங்களுடைய சேவைகள் மூலமாக உணவளித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு கரோனா தொடங்கியதிலிருந்து 24மணிநேரமும் ஏதோ ஒரு வகையில் உழைத்துக் கொண்டே இருக்கிறார் திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் அரசு தொடக்கப் பள்ளியின் உதவி ஆசிரியர் ஹ.புஷ்பலதா. அவரிடம் பேசியதிலிருந்து :

""சின்ன வயதில் இருந்தே மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்தை கற்றுக் கொடுத்திருந்தார் எனது தந்தை. இன்றளவும் அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. எனக்கு இல்லை என்றாலும் சரி அடுத்தவர்ளுக்கு கொடுத்து உதவுவதில் தான் எனக்கு மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு கரோனா காலத்திலிருந்து தினந்தோறும் சாலையோரம் வசிக்கும் சுமார் 250பேருக்கு உணவு வழங்கி வந்தேன். இந்நிலையில், மீண்டும் பொது முடக்கம் தொடங்கியதால், "இளந்தளிர்' அமைப்பின் அருட்தந்தை சூசை அலங்காரம் அடிகளார் உதவியோடு தற்போது தினந்தோறும் மதியம் 250-பேருக்கும், திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 100பேருக்கு காலை உணவும் வழங்கி வருகிறோம்.

அண்மையில் திருவானைக்காவல் அருகில் இருக்கும் செங்கல் சூளையில் பணிபுரியும் மக்களுக்கு உணவு வழங்குவதற்கு சென்றிருந்தேன். அங்கு, ஒருவர் கூட முகக்கவசம் அணியவில்லை, எனவே, முதலில் அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினேன். பின்னரே, உணவுகளை வழங்கினேன்.

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருந்தாலும் திடீரென காய்ச்சல் வந்துவிட்டது. அரசு மருத்துவமனையில் போய்ப் பார்த்தேன். இரண்டு நாள்களில் கடவுள் புண்ணியத்தால் குணமடைந்து விட்டேன். அதில் இருந்து கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பணியை விடுவதற்கு மனம் வரவில்லை.

கரோனா நேரத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு அரிசி, காய்கறிகள், முகக்கவசம், மருந்தகங்கள் இல்லாத சில கிராமங்களில் வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு நாப்கின் போன்றவற்றையும் வழங்கிவருகிறோம்.

உணவு தயார் செய்வது முக்கியமல்ல. அது பசித்த நேரத்திற்கு சரியாக சென்றடையே வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். உணவு சமைப்பது - எடுத்துச் சென்று உதவுவது என அனைத்து வேலைகளுக்கும் அருகில் உள்ள உதவும் உள்ளம் கொண்ட நண்பர்கள், முகநூல் நட்புகள், தொண்டு நிறுவனங்கள் உதவி வருகிறார்கள்.

இது தவிர, கடந்த ஒரு வருட காலமாக எங்கள் பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரோனா நேரத்தில் வீட்டிலும், சாலையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? கை கழுவுவதன் அவசியம்? போன்றவற்றை பாடல்கள் மூலமாகவும், பேச்சு மூலமாகவும் பதிவு செய்து அனைத்து பெற்றோரின் கட்செவி அஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறேன். மேலும், ஒவ்வொரு குழந்தையின் குடும்ப சூழ்நிலையை அவ்வப்போது விசாரித்து தெரிந்து கொண்டு தேவைப்படுவோருக்கு உதவி வருகிறேன்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com