கதை சொல்லும் குறள் - 31: அருமருந்து!

கோடை வெயில் தீயாய்த் தகித்தது. பிடரியிலும், முன் நெற்றியிலும் ஆறாக வழிந்த வியர்வையை, கையில் பிடித்திருந்த சிறிய துண்டைக் கொண்டு சொர்ணம் துடைத்துக் கொண்டே, சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.
கதை சொல்லும் குறள் - 31: அருமருந்து!

கோடை வெயில் தீயாய்த் தகித்தது. பிடரியிலும், முன் நெற்றியிலும் ஆறாக வழிந்த வியர்வையை, கையில் பிடித்திருந்த சிறிய துண்டைக் கொண்டு சொர்ணம் துடைத்துக் கொண்டே, சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

காலை டிபனை முடித்துக் கொண்டு அவளுடைய சீமந்தப் புத்திரன் வெங்கடேசன் ஆபீஸூக்குக் கிளம்பிச் சென்றுவிட்டான். ஹாலில் இருந்த  கடிகாரம் பகல் மணி பதினொன்று என்று காட்டிக் கொண்டிருந்தது.

சொர்ணத்தின் கணவர் ராமசாமி, தினசரிப் பத்திரிகையில் மூழ்கிப் போயிருந்தார். இதோ, இன்னும் ஒரு மணி நேரத்தில் வெங்கடேசனுக்கு, சாப்பாட்டை எடுத்துச் செல்லப் பொன்னி வந்துவிடுவாள். வெங்கடேசனுக்கு வெளிச்சாப்பாடு ஒத்துக் கொள்வது இல்லை, அதனால் சொர்ணத்தின் வீட்டில் வேலை பார்க்கும் பொன்னி, மேல் வருமானம் வருகிறதே என்று அவனுக்குப் பகல் சாப்பாட்டைக் கடந்த இரண்டு வருடங்களாக எடுத்துச் செல்கிறாள்.

முள்ளங்கி சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், வெள்ளரிப் பச்சடி மற்றும் பொரித்த வடாம் என்று சமையலை முடித்து, டிபன் பாக்ஸில் கட்டி நிமிரும்பொழுது, சொர்ணத்தின் மருமகள் ஸ்வாதி, வெங்கடேசனின் காதல் மனைவி துயில் நீங்கி, எழுந்து சமையல் கட்டுக்குள் காலை வைத்திருக்கிறாள்.

வெங்கடேசனுக்கும், ஸ்வாதிக்கும் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள்தான் முடிந்திருக்கிறது. கொஞ்சம் வசதியான வீட்டுப் பெண் ஸ்வாதி. அவளின் அப்பா சென்னையில் புகழ்வாய்ந்த கான்ட்ராக்டர். தன் ஒரே செல்ல மகளை வெங்கடேசனுக்கு, அவள் உயிருக்கு உயிராகக் காதலித்தாள் என்கின்ற ஒரே காரணத்துக்காகத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

பெரிய பங்களாவில் வாழ வேண்டிய பெண், இந்த இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட சிறிய பிளாட்டில் வாழ வந்திருக்கிறாள். இவனுக்குக் கல்யாணமாகி வந்த புதிதில், சொர்ணம் தன் மருமகளைத் தலையில் தூக்கி வைத்துத் தாங்கினாள். பிறகு! அழகோடும், ஐஸ்வர்யத்தோடும் வந்த மருமகளாயிற்றே. தன் மருமகளை ஒரு வேலை செய்ய விடவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஸ்வாதிக்கு வீட்டு வேலைகளைச் செய்வதில் இஷ்டமில்லை, பழக்கமும் இல்லை.

மறுவீடு முடிந்து தன் மாமியாரின் வீட்டுக்கு வந்தது முதல் காலை பதினொரு மணி வரைத் தூக்கம், பிறகு ஒரு கப் காப்பி, குளித்துவிட்டு நேராக டைனிங் டேபிளுக்கு வந்து பகல் உணவைச் சாப்பிடுவதை ஸ்வாதி வழக்கமாக்கிக் கொண்டாள். என்னதான் பெரிய வீட்டுப் பெண் என்றாலும், சின்னச் சின்ன வேலைகளைச் செய்யலாம் இல்லையா?

அன்றும் வழக்கம் போல், ""அத்தை காப்பி தருகிறீர்களா?'' என்றாள்.

""போய் ஹாலில் உட்காரும்மா, எடுத்து வருகிறேன்'' என்றாள் சொர்ணம்.
அந்தச் சமயத்தில் பொன்னி உள்ளே நுழைந்தாள். சொர்ணம் போட்ட காபியை ஸ்வாதியிடம் கொடுத்துவிட்டு வந்தவள், சொர்ணத்திடம் கிசு கிசுப்பான குரலில் சொன்னாள்.

""என்னம்மா இது அநியாயமாக இருக்கு, இந்தம்மா பதினொரு மணி வரை தூங்கறதும், நீங்க சமையல்காரியாட்டம் பொங்கி வேளா வேளைக்குப் போடறதும்; ஏன் கொஞ்சம் கூடமாட ஒத்தாசையா வேலை பார்க்கலாம் இல்லையா?''

""உஸ், பொன்னி சத்தமாப் பேசாதே, அவ காதிலே விழப்போவுது. இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு, போகப் போகச் சரியாகிடும்''.

"'ஆமாம், எல்லாம் உங்களாலேதான் இப்படி நடக்குது. சரிம்மா, சின்னய்யாவுக்குச் சாப்பாட்டுக் கூடையை ரெடி பண்ணிட்டீங்களா, நான் கிளம்பறேன்''.

ஒரு மாதம் மேலும் ஓடியது. திருச்சியிலிருந்து, சொர்ணத்தின் சித்திப் பெண் கோமதி, சென்னைக்கு வந்து தன் அக்காவோடு ஐந்து நாள்கள் தங்கிவிட்டுப் போனாள்.

ராமசாமி ஹாலில் படுத்துக் கொள்ள, சொர்ணமும், கோமதியும் ஒன்றாகப் படுத்துக் கொண்டனர். பல சிறுவயது நிகழ்ச்சிகளை நினைவுபடுத்திப் பேசி மகிழ்ந்தனர். கோமதி வந்த மூன்றாம் நாள் இரவு, அவள் மெதுவாக ஆரம்பித்தாள்.

""சொர்ணம், நான் சொல்லறேனேன்னு தப்பாக நினைச்சுக்காதே, என்ன உன் மருமகள் பெரிய மகாராணியா? நீ அவளுக்கு சேடிப் பெண்ணா? ரொம்ப அநியாயம்டி இது. வேளாவேளைக்கு வந்து தின்னுட்டுப் போறதும், பெரியவங்க என்று இல்லாமல் கால் மேல் கால் போட்டு உட்காருவதும், காரில் ஏறி புருஷனுடன் ஊர் சுற்றிவிட்டு நடு இரவுக்கு மேல் வருவதும், நீ ஏன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டியா? இல்ல உன் வீட்டுக்காரர் வாயில் என்ன கொழுக்கட்டையா அடைச்சியிருக்கு? இதுப்போல அநியாயம் எங்குமே நடக்காது''.

கோமதி சொல்வதை எல்லாம் சொர்ணம் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள். பிறகு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

""கோமதி, நீ சொல்வது எல்லாம் நியாயமாக உனக்கும், உலகத்தாருக்கும் தோன்றலாம், ஆனால் எனக்கு அப்படி இல்லை.

என்னடி சொல்லறே?''

""அவசரப்படாம நான் சொல்லறதைக் கேள். சின்னஞ்சிறுசுகள், கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்கள்தான் ஆகி இருக்கு, வாழ்க்கையை அனுபவிக்கட்டுமே. ராத்திரி ஸ்வாதி எப்பொழுது தூங்கறாளோ தெரியலை. எனக்கு ஒரு பொண்ணு இருந்து இப்படி அம்மா வீட்டுக்கு வந்து தூங்கினா, நான் எழுப்புவேனா. புகுந்த வீட்டில் என்ன வேலையோ இங்க வந்து தூங்கறான்னு அவளை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்தானே. இது தவிர ஸ்வாதிக்காகவா நான் சமைக்கிறேன், எல்லாருக்குமே தானே, வெங்கடேசனின் கல்யாணத்திற்கு முன் நான்தானே சமைச்சேன், இப்ப ஸ்வாதியும் என் சமையலை அவங்களோடு பகிர்ந்து, சுவைத்துச் சாப்பிடறா''.

""என்ன இருந்தாலும் நாலு வார்த்தை சுருக்குன்னு கேட்டா அவ உடம்பு வணங்கி உனக்கு உதவி செய்வாதானே?''

""நான் கோபப்பட்டுக் கடுமையான வார்த்தைகளைக் கொட்டினா உறவு கெட்டுப் போயிடும். உறவு என்பது கண்ணாடிப் பாத்திரம் போன்றது. கோபம் அதை உடைச்சிடும், பிறகு எதைக் கொண்டு அதை ஒட்ட வைப்பது? என் கோபம், ஸ்வாதியை நெருப்பாகச் சுடும், காலம் முழுவதும் என்னை விரோதியாகக் கருத வைக்கும்''.

""அப்ப இதுக்கு விமோசனம்?''

""காலம்தான் இதுக்கு அருமருந்து. ஸ்வாதி, இருபத்து ஐந்து வயது வரை அவளின் பொறந்த வீட்டில் வளர்ந்தவள், அந்தப் பழக்கவழக்கங்கள் கொஞ்சக் காலம் அவளோடு ஒட்டி இருக்கும். நம் வீட்டில் வாழ்ந்து வரும்பொழுது, அவளுடைய செயல்களில் மாற்றம் நிகழும்''.

""ஒரு செடியை ஓர் இடத்தில் இருந்து வேரோடுப் பறித்து வந்து நம் வீட்டுத் தோட்டத்தில் நடுகிறோம் என்று வைத்துக்கொள், தண்ணீர், வளமான மண், சூரிய வெளிச்சம் என்று எல்லாம் இருந்தாலும், அது வேர் பிடித்து பழைய இலைகளை உதிர்த்து, புதிய தளிர் இலைகளைத் துளிர்க்க வைக்கச் சிலகாலம் ஆகும்தானே. அப்படி வேர் பிடித்து அது வளர்ந்து மரமானாதும் பூத்து, காய்த்து நிழலும் தரும்''.

""அப்ப உன் மருமகள் சில வருஷங்களுக்குப் பிறகு உனக்குப் பணிவிடை செய்வாளாக்கும்?''

""அவள் எனக்கு பணிவிடை செய்கிறாளா என்பதில் இல்லை வாழ்க்கை, உறவு முறியாமல் காக்கப்படுவதே இனிய வாழ்க்கை''.

தீமையை விளைவிப்பது கோபம் என்பதை உணர்ந்து வாழும் சொர்ணத்தின் வாழ்க்கையில் வசந்தம் வீசாமலா இருக்கும்.

பல வருடங்களுக்குப் பிறகு வெங்கடேசன் தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய பெரிய பங்களாவில், தங்கள் பேரப்பிள்ளைகளோடுச் சுகமாக வாழ்கிறார்கள் சொர்ணமும், ராமசாமியும். அவர்களுடைய சதாப்தப் பூர்த்தியை விமர்சையாகக் கொண்டாட ஸ்வாதியும், வெங்கடேசனும் தடபுடலான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.கோபம் இல்லையெனில் சுபிக்ஷம் தானே!

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.

( குறள் எண்: 303)

பொருள்: தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான். அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிட வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com