கதம்பம்!

சென்னையில் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் மவுஷ்மி. தற்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேருந்து ஓட்டுநர்.
கதம்பம்!

சிட்னியில் பேருந்து ஓட்டும்சென்னைப் பெண்!

சென்னையில் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் மவுஷ்மி. தற்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பேருந்து ஓட்டுநர். இதுகுறித்து அவர் கூறுகையில், ""தமிழ்நாடுதான் எனது பூர்வீகம். பேராசிரியராக இருந்தபோது, துபாயில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதை ஏற்றுக் கொண்டு துபாய்க்கு சென்றேன். அங்கு
தான் எனக்கு திருமணமும் முடிந்தது. குழந்தையும் பிறந்தது. திடீரென குடும்ப உறவில் விரிசல் ஏற்படவே, நான் தமிழ் நாட்டிற்கு திரும்பிவிட்டேன். அப்போது என் மகனுக்கு ஒன்றரை வயது.
தனி பெண்ணாக, அதுவும் தனிமைத் தாயாக சமூகத்தில் வாழ்வது ரொம்பவே கடினமானது. பல சிரமங்களை சந்தித்தேன். அந்த சமயத்தில், நண்பர் ஒருவர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஆய்த்தமானார். அவரது உதவி மூலம், நானும் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தேன்.
ஆஸ்திரேலியா வந்ததும் வங்காள தேசத்து தம்பதிகளின் வீட்டில் ஷேரிங் முறையில் தங்கி கொண்டேன். அப்போது தான் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். அதே போல மரியாதையும் உண்டு என்று அறிந்தேன்.
அதனால், முறைப்படி ஓட்டுநர் பயிற்சி பெற்று பேருந்து ஓட்ட ஆரம்பித்தேன். பேருந்து ஓட்டுநராக பணிக்கு சேர்ந்ததும், முதல் ஆறுமாதங்கள் கடினமானதாக இருந்தது. பெரிய வாகனத்தில் மக்களை ஏற்றிக் கொண்டு புதுப்புது நகரங்களுக்கு செல்ல வேண்டும். பெரிய வாகனத்தை ரிவர்ஸ் எடுப்பது, குறுகிய சாலைகளில் திருப்புவது, பாதைகளை மனப்பாடம் செய்வது என்று. இப்போது அனைத்தும் பழகிவிட்டது. எவ்வளவு பெரிய பேருந்தாக இருந்தாலும் , ஆஸ்திரேலியாவின் எந்த நகரமாக இருந்தாலும் சரி, பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்த்து விடுவேன்' என்கிறார் மவுஷ்மி.

அமெரிக்க பிரதிநிதிகள்சபை தலைவர்!


அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை ( கீழவை) தலைவராக ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரான நான்சி பெலோசி நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ
பைடன் வெற்றி பெற்றுள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. தற்போதைய பிரதிநிதிகள் சபை தலைவரான ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசிக்கும் குடியரசு கட்சியின் கெவின் மெக்கார்த்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பதிவான 427 வாக்குகளில் நான்சிபெலோசி 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பிரதிநிதிகள் சபை தலைவராக நான்சி பெலோசி நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மற்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2006-இல் பிரதிநிதிகள் சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் அப்பதவியை வகித்த முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார். நான்சி பெலோசி. 2006 முதல் 2011 வரை சபையை வழிநடத்திய நான்சி பெலோசி 2018 -ஆம் ஆண்டு முதல் மீண்டும் பிரதிநிதிகள் சபை தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ""அமெரிக்க வரலாற்றில் மிகவும் மாறுபட்ட பிரதிநிதிகள் சபைதலைவராகப் பணியாற்று
வது எனக்குப் பெருமை அளிக்கிறது'' எனக் கூறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை ஆர்வலரான பெலோசி, மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர். இந்திய அமெரிக்க உறவின் வலுவான ஆதரவாளர். அவருக்கு புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோபைடனும், துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸூம் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பெண்விஞ்ஞானிக்குசர்வதேச சுற்றுச்சூழல்விருது!

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட இந்தியப் பெண் விஞ்ஞானி கிரிதி கராந்த் சர்வதேச அமைப்பால் கௌரவிக்கப் பட்டுள்ளார்.
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வதேச விஞ்ஞானிகளுடன் இணைந்து வைல்ட் எலமண்ட் ஃ பவுண்டேஷன் அமைப்பு செயல்பட்டு வருகிறது. மனித உலகம் தாவர உலகம், விலங்குகள் உலகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பாதுகாப்பதற்கு இந்த அமைப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த அமைப்பு கிரிதி கராந்துக்கு "வன புத்தாக்க விஞ்ஞானி' விருது வழங்கியுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியப் பெண் கிரிதி கராந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானியான கிரிதி
கராந்த் வனப்பாதுகாப்பு ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானியாகவும் உள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, கொலம்பியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெறுபவர்களுக்கு ஆராய்ச்சிப் பணிகளுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ரூபாய் 75 லட்சத்தையும் அந்த அமைப்பு வழங்கியுள்ளது.
வனப்பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு இந்த விருது உதவும் என்று கிரிதி கராந்த் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com