கல்வி கற்க வயது தடையில்லை!

தருமபுரியில்  உள்ள சிறு  கிராமத்தைச் சேர்ந்த மரகதவல்லி , 1992-  ஆம்  ஆண்டு தன்னுடைய  17-ஆவது  வயதில்  பிளஸ் 2  தேர்வு  எழுதியபோது
கல்வி கற்க வயது தடையில்லை!
கல்வி கற்க வயது தடையில்லை!

தருமபுரியில்  உள்ள சிறு  கிராமத்தைச் சேர்ந்த மரகதவல்லி , 1992-  ஆம்  ஆண்டு தன்னுடைய  17-ஆவது  வயதில்  பிளஸ் 2  தேர்வு  எழுதியபோது  தேர்ச்சிப்  பெறவில்லை.  இது அவருக்கு அதிர்ச்சியாக  இருந்தாலும் என்றாவது  ஒருநாள்  மீண்டும்  இதே தேர்தவை  எழுதி வெற்றிப் பெற வேண்டுமென்ற  வைராக்கியம்  மனதில்  எழுந்தது.  ஆனால் உடனடியாக மறுதேர்வு  எழுத குடும்ப சூழ்நிலை சாதகமாக  இல்லை.  சில ஆண்டுகள்  கழித்து  இவரது பெற்றோர்  இவருக்குத் திருமண ஏற்பாடுகள்  செய்தபோது  மறுக்காமல்  ஒப்புக் கொண்டார்.

 திருமணத்திற்குப் பின்  மரகதவல்லியின் வாழ்க்கையில்  பல திருப்பங்கள்  ஏற்பட்டது.  கருச்சிதைவு,  கணவருடன்  மனவேறுபாடு,  குடும்பப் பிரச்னைகள்   என பல  இடையூறுகளை  வாழ்க்கையில் சந்திக்க  வேண்டியதாயிற்று.  இதற்கிடையில்  பிறந்த தன்னுடைய  மகளையும்,  மகனையும்  வளர்த்து  ஆளாக்க  வேண்டிய  பொறுப்பும்  சேர்ந்து கொண்டது.  வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.  எந்த வேலையிலும்  நிலைத்து  இருக்க  முடியவில்லை.  ஈரோடு  கல்லூரி ஒன்றின்  கேன்டீனில்  வேலை கிடைத்தது.  இதை  தன்னுடைய   பனிரெண்டாம்   வகுப்பு தேர்வை எழுதி முடிக்க  கிடைத்த வாய்ப்பாக  கருதினார்.

உடனே தன்னுடைய  நீண்டநாள்  கனவை  செயல்படுத்தத் தொடங்கினார்.  கேன்டீனில்  முழு நேர  வேலையை  பார்த்தபடியே,  வாரத்தில்  இரு தினங்கள்  டூட்டோரியல்  மையத்திற்குச் செல்ல  ஆரம்பித்தார்.  ஒரு வருடம் கழிந்தது.  மரகதவல்லி  பனிரெண்டாம்  வகுப்பு தேர்வு எழுதி  தேர்ச்சிப் பெற்றார்.  தொடர்ந்து  அண்ணாமலை  பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து  பி.ஏ.  ஆங்கிலம்  படித்து முடித்தார்.  இத்துடன்  தன்னுடைய  கனவு நிறைவேறியதாக நினைக்காமல்  அழகப்பா  பல்கலைக்கழகத்தில்  மாஸ்டர்  டிகிரி  பெறும் முனைப்பில் உள்ளார்.  இதற்கிடையில்  பேஷன் டிசைனிங்  கற்றுத்  தேறியுள்ளார்.

தற்போது  45  வயதாகும்  மரகதவல்லி, ஈரோட்டில்  பிள்ளைகளுடன்  வசித்து வருகிறார்.  கல்லூரி  கேன்டீன் வேலைக்கும்  சென்றபடி,  படித்து தேர்வு  எழுதுவதை  பார்த்த அக்கம் பக்கத்தினர், இந்த வயதில் படிப்புத் தேவையா?  என்று கேலி  பேசியதும்  உண்டு.  பேசாமல்  பிள்ளைகளை  பார்த்துக் கொண்டு  வீட்டை  கவனித்துக் கொள்ளக் கூடாதா?  என்று இவர் காதுபடவே  பேசுவார்களாம்.  அதைப்பற்றிக் கவலைப்படாமல்  தன்னுடைய  குறிக்கோளை  நிறைவேற்றுவதிலேயே  கவனம் செலுத்திய  மரகதவல்லி,  தன் குடும்பத்தையோ  குழந்தைகளையோ கவனிக்காமல் விட்டுவிடவில்லை.  தன்னுடைய  தாயின்  படிப்பு  ஆர்வத்தைக் கண்ட  இவரது மகள்  பி.எஸ்.சி சைக்காலஜி  படித்து வருகிறார்.  மகன் 12 -ஆம் வகுப்பு  படிக்கிறார். 
இந்த வயதில் பிடிவாதமாக  படிக்க வேண்டிய அவசியம் என்ன?
 17 வயதில் பிளஸ்2 எழுதிய போதே நன்றாக படித்து எழுதி தேர்ச்சிப் பெற்றிருக்கலாமே  என்று கேட்டபோது  சொன்னார்:

""உண்மைதான்,  நான்படித்த காலத்தில் தியரி மற்றும் பிராக்டிகல்  வகுப்புகளை  புரிந்து கொள்ள  முடியாததால்  மீண்டும்  மறுதேர்வு  எழுத முயற்சிக்கவில்லை.  கல்லூரி  கேன்டீன் லேலையில்  சேர்ந்தபிறகு தான் படிப்பைத் தொடர வேண்டுமென்ற  எண்ணம்  தோன்றியது.  இதற்கிடையில்  என் வாழ்க்கையில்  ஏற்பட்ட  பிரச்னைகள்  கொஞ்ச நஞ்சமல்ல.  இப்போது நான் படித்துக் கொண்டிருந்தபோது கூட பல பிரச்னைகள்,  கேலிப்  பேச்சுகளை  சந்திக்க  வேண்டியதாயிற்று. பெண்களுக்கு  கல்வியைப் போன்ற பாதுகாப்பு வேறு ஏதுமில்லை.  எவ்வளவு  குறுக்கீடுகள்,  இடர்பாடுகள் வந்தாலும்  கல்வி கற்பதை  நிறுத்தாதீர்கள்  என்று பெண்களுக்கு  அறிவுறுத்த விரும்புகிறேன்.  வாழ்க்கையில்  நான் உறுதியாக  இருந்ததால்தான்  என்னால்  இன்று நினைத்ததை  சாதிக்க  முடிந்தது. வீட்டைவிட்டு  வெளியேறி  கல்வி கற்க  ஆரம்பித்த  பின்னர்தான் நிறைய விஷயங்களை  தெரிந்து கொள்ள முடிந்தது'' என்கிறார் மரகதவல்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com