இசை குளிர்விக்கிறது சேவை மகிழ்விக்கிறது!

இசை உலகில் சங்கீத மும்மணிகள் என்று புகழ்பெற்றவர்களுள் ஒருவரான எம். எல். வசந்தகுமாரியின் குருகுலத்திலிருந்து வந்தவர் சுதா ரகுநாதன்.
இசை குளிர்விக்கிறது சேவை மகிழ்விக்கிறது!
இசை குளிர்விக்கிறது சேவை மகிழ்விக்கிறது!

இசை உலகில் சங்கீத மும்மணிகள் என்று புகழ்பெற்றவர்களுள் ஒருவரான எம். எல். வசந்தகுமாரியின் குருகுலத்திலிருந்து வந்தவர் சுதா ரகுநாதன்.

குருவிடம்தான் கற்றுக் கொண்ட  நுணுக்கங்களை தனக்கே உரிய பாணியில் 
பழைமையின் சிறப்பும் புதுமையின் பொலிவும் துலங்க ரசிகர்களுக்கு வழங்குவதில் தனியிடம் பிடித்தவர் இவர்.  பத்மபூஷன் விருதுக்குச் சொந்தக்காரர். குருவின் வழியில் இவரும் சங்கீத கலாநிதி பட்டம் பெற்றார். சுதா ரகுநாதன் செல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்து இசை வேள்வி நடத்தி வருபவர். திரைஇசைப் பாடல்கள் பாடியிருக்கிறார்.

உலகின் பிற இசைக் கலைஞர்களோடு இணைந்து இவர் தந்திருக்கும் ஜுகல்பந்தி கச்சேரிகள் இசையின் வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும். சமூகத்திற்குத் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமென "சமுதாயா' என்ற அறக்கட்டளையை நிறுவி சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துபவர். இசைத் துறையில் தன் அனுபவங்கள் மற்றும் கரோனா நோய் காலத்தில் அவரது வேலைகள் பற்றி நம்மோடு மனம் திறந்து பேசுகிறார்:

முதல் கச்சேரி நினைவிருக்கிறதா?

1980- ஆம் வருஷம் டிசம்பர் சீசனில் 20-ஆம் தேதி பகல்நேர கச்சேரி. மியூசிக் அகாதெமி அரங்கம் நிறைந்திருந்தது. இறைவனின் கருணையும் குரு அருளும் நிறைவாக இருந்திருக்கிறது. அன்றைக்குத் தொடங்கிய பயணம் நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு இசைப் பயணங்கள் பற்றி?

கர்நாடக இசை ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தின் அருமை அறிந்து கொண்டாடுகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, துபாய் என்று பல நாடுகளிலும் சென்று பாடியிருந்தாலும் ஸ்டிம்மென் விழாவில் கலந்து கொண்டு பாடியது வித்தியாசமானது. கிளீவ்லண்ட் கச்சேரிகளையும் குறிப்பாக சொல்லலாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் இசை நிகழ்ச்சி குறித்து? 
2016- ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன.  ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதை வெறும் இசை நிகழ்ச்சி என்று மட்டும் நான் பார்க்கவில்லை. இசை வாழ்வில் எனக்குக் கிடைத்த கெளரவம்.  அந்த இடத்தில் நாம் நிற்பது என்பதே சிறப்பு. பல தேசக் கொடி கள் கம்பீரமாக அணி வகுத்திருக்கும் வளாகத்தில் நாம் அங்கீகரிக்கப்படுவதும் நம்முடைய கலை அங்கீகாரம் பெறுவதும் சாமானிய விஷயமல்ல. அத்தகைய கிடைத்தற்கரிய சந்தர்ப்பம். இதனால் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருந்தேன். 

அங்கே கூடியிருந்த பல நாடுகளின் தூதுவர்கள், உயர் நிலை அதிகாரிகள் என்று நம்முடைய சங்கீதத்தை புதுமையாகப் பார்க்கும் அவர்களுக்கிடையில் பாட வேண்டும். அந்தப் பாட்டின் ஆத்மாவை  கூடியிருப்பவர்கள் உணரும் படியாக இருக்க வேண்டும். இதெல்லாம் என்னையும் சற்றே அழுத்தத்திற்கு உட்படுத்தி இருந்தது.

இசை உலகின் நிலை இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் எப்படி இருக்கிறது?

கடினமான காலம் தான். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் உலகமே இருப்பதைப் போல இசை உலகமும் இருக்கிறது. 

வழக்கமாக டிசம்பர் கச்சேரிகளுக்கு ஜூன் மாதத்தில் தேதிகள் கொடுத்து எங்கெங்கே என்றைக்குப் பாடப் போகிறோம் என்பது உறுதியாகிவிடும். 
தற்போது நிலைமை அப்படி இல்லை. கச்சேரிகளை சபாக்களில் நடத்த முடியுமா அல்லது இணைய வழியில் நடத்த வேண்டிய நிலை ஏற்படுமா -  எதுவும் தெரியவில்லை. கணிக்க முடியாத நிலையில் வளரும் கலைஞர்கள் கவலைப்பட காரணம் இருக்கிறது. தேக்க நிலை மாறும் வரை நம்பிக்கையோடு காத்திருந்து தான் ஆக வேண்டும். 

நெறியாளராக இருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம்...

"எக்ஸ்பிரஷன் எக்ஸ்ப்ரெஸ்ஸோ' என்ற நிகழ்ச்சி, முப்பது பிரபலமானவர்களோடு உரையாடுவது என்று முடிவு.  நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களைப் பற்றி நாம் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள படிக்க வேண்டியது அவசியம். தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும் சமாளித்துக் கொண்டு நிகழ்ச்சியைத் தொடர வேண்டும். 


நிகழ்ச்சிக்கு உமையாள்புரம் சிவராமன் முதல் ஏ. ஆர். ரஹ்மான் வரை விஸ்வநாதன் ஆனந்த் தொடங்கி இந்திரா நூயி என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே உலகப் பிரபலங்கள் தான். அரட்டைக் கச்சேரி போல உரையாடல்கள் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிகளில் இசை நம்மைக் கட்டிவைக்கும்.

குறிப்பாக இந்திரா நூயி பெரிய கார்ப்பரேட் நிறுவனத் தலைவர் என்று நினைக்கிறோம். அவருக்கு கர்நாடக சங்கீதத்தின் மீதான ஆர்வம், குடும்பம் வேலை இரண்டிலும் பொறுப்புகளை கவனித்துக் கொள்வதற்கான முறைகள் குழந்தை வளர்ப்பு பெண்கள் தங்கள் லட்சியங்களை தேர்ந்தெடுப்பது முன்னேறுவது என்றெல்லாம் விரிவாகப் பேசினோம். 


வெள்ளிவிழாக் கொண்டாட்டமாக இருபத்தைந்தாம் நிகழ்ச்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனக்கும் இந்த நிகழ்ச்சிகள் உற்சாகம் தந்தன. 

கலைத்துறைப் பெண்களுடனான உரையாடல் பற்றி..

இசையைப் பிரதானமாக வைத்து வளரும் கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென ஒரு நிகழ்ச்சியையும் இணையத்தில் தொகுத்து வழங்கினேன். முற்றிலும் பெண் குரலிசைக் கலைஞர்
களோடு அளவளாவும் நிகழ்ச்சி. 

இன்றைக்கு தனக்கென இசைத் துறையில் இடம் பிடித்திருக்கும் இளம் கலைஞர்கள் தமது குருக்களிடம் பாடம் கற்றுக் கொண்ட முறை, கச்சேரிகளுக்குத் தயாராகும் பாங்கு, தங்கள் இசைப் பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்கிறார்கள் என்று நுட்பமான செய்திகளை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தினேன்.

காயத்ரி வெங்கட்ராகவன், ஐஸ்வர்யா சங்கர், பிருந்தா என்று மனதுக்கு நெருக்கமான பாடகர்கள் கலந்து கொண்டார்கள். சக கலைஞர்களைப் பார்ப்பதற்கும் உரையாடுவதற்கும் ஆசை இருந்தாலும் நேரம் இல்லாமல் அனைவருமே ஓடிக்கொண்டிருப்போம். இன்றைய நிலையில் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததால் எனக்கும் புத்துணர்வு தந்த அனுபவமாக இருந்தது. 


சங்கீதம் கற்றுக் கொடுக்கிறீர்களே...

அடிப்படை சங்கீதம் முறையாகக் கற்றுக் கொண்டவர்களுக்கு மேலும் அதன் நுட்பங்களை என்னுடைய வலைத்தளத்தில் கற்றுக் கொடுக்கிறேன். தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள இந்தப் பாடங்கள் பயன்படும். "அப்பியாசம்' என்ற தலைப்பில் இசை கற்றுக் கொடுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சக கலைஞர்களும் சில குறிப்புகளை வழங்குகிறார்கள்.


சங்கீதமும் சமையலும் எப்படி  ஒன்றிணைந்தன?

யூடியூபில் என்னுடைய சூடாஸ் கிச்சன் பற்றிக் கேட்கிறீர்கள். சங்கீதம் சமையல் இரண்டும் கலை தானே. இன்னும், செவிக்கு உணவோடு வயிற்றுக்கும் உணவு வேண்டுமே.  சப்தஸ்வரா கட்லெட், அடாணா பாடிக் கொண்டே சப்பாத்தி செய்வது, சமையலுக்குப் பொருத்தமான ராகத்தைப் பாடுவது என்று புதிதாக முயன்று பார்த்தேன். பல நாடுகளில் இருந்தும் ரசிகர்கள் விரும்பிப் பார்த்தார்கள்.  பக்கோடா செய்யக் கற்றுக் கொடுத்துக் கொண்டே அதற்குப் பொருத்தமாக "பேகடா ராகமும்; பாடி ரசிகர்களுக்கு விருந்தளித்தேன்.


இசையை வாழ்வாகத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களுக்கு உங்கள் செய்தி...

தடங்கல்கள் இருக்கின்றன என்பது உண்மை தான். இசையைத் தொழிலாக எடுத்துக் கொள்ள விரும்பும் இசைக் கலைஞர்களுக்கு இது வரமான காலம். பல ஆண்டுகள் மேடைகளில் பாடுவதற்குத் தேவையான பாடல்களை நன்றாக கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் இந்த நேரம் வரம். புதிதாக பாட வருவோர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி தங்கள் திறமைகளை நிரூபிக்க வழி இருக்கிறது. நம்பிக்கையோடு பயிற்சி செய்து கொண்டிருந்தால் நிலைமை சீரடையும் பொழுது அவர்களுக்கு அதுவே நற்பெயர் கிடைக்கக் காரணமாக இருக்கும். 

கரோனா நோய் தொற்றுக் காலத்தில் உங்கள் "சமுதாயா' அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி..

"சமுதாயா' அறக்கட்டளை வழியாக தர்ம காரியங்களில் ஈடுபட்டிருக்கிறேன். கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவி. நலிந்த இசைக் கலைஞர்கள் ஏறத்தாழ 150 கலைஞர்களுக்கு பணஉதவி செய்திருக்கிறோம். 
மருத்துவமனைகளில் முன்களப் பணியாளர்களுக்கும் தேவையானோருக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்கியிருக்கிறோம்.  வெளிநாட்டில் வாழ்வோர் தரும் நன்கொடைகள் போல இயன்றவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்கு  உதவும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம்.


"நைவேத்யம்' என்று கரோனா பாதிப்பால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் தேடி சென்று உணவு வழங்கும் பணி ஆயிரக்கணக்கானவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. 
இதுவரை ஏறத்தாழ ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கியிருக்கிறோம். இன்னும் இந்த சேவையைத் தொடர்வதற்கான எண்ணம் இருக்கிறது. அதற்கான ஆதரவைத் திரட்டுவதில் ஈடுபட்டு நாள்களை செலவிடுவதில் மன நிறைவு அடைகிறேன். இசை மனத்தைக் குளிர்விக்கிறது. சேவை ஆத்மாவை மகிழ்விக்கிறது. 

- கோதை.ஜோதிலட்சுமி 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com