முதன்மையான அறம்!

தீவின் குடிமக்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடிவிட்டு நடு இரவைத் தாண்டித்தான் உறங்கச் சென்றிருந்தனர். 
முதன்மையான அறம்!
முதன்மையான அறம்!

இந்தோனேசியாவின் அழகிய தீவு சுமத்ரா. உலகின் பல பாகங்களில் இருந்து இங்கே வந்து கூடியிருந்த உல்லாசப் பயணிகளும், அந்தத் தீவின் குடிமக்களும், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமர்சையாகக் கொண்டாடிவிட்டு நடு இரவைத் தாண்டித்தான் உறங்கச் சென்றிருந்தனர். 

மறுநாள் விடியல் அசாதாரணமான ஒன்றாக வாழ்க்கையில் மறக்கவே முடியாததாக, சரித்திர ஏடுகளில் சர்வ நாசம் என்று எழுதப்படப் போவதாக இருக்கப்போவதைப் பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் மட்டுமா? நம் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளும் முக்கியமாக நாகப்பட்டினமும் அழிவைச் சந்திக்க இருந்தன.

மனித மனங்களின் கோபங்கள் ஒரு நாளைக்கு வெளியே வெடித்து, உஷ்ணமான வார்த்தைகளாக வெளிப்படுவதைப் போல, சுமத்ராவின் ஆழ்கடலான இந்தியப் பெருங்கடலின் அடிமட்டத்தில் பொங்கி, வெடித்துத் சிதறிய எரிமலை, இதனுடைய சக்தியை ஹிரோஷிமாவில் போடப்பட்ட 23,000 அணுகுண்டுக்கு நிகராகச் சொல்லப்படுகிறது. இதன் விளைவு இந்தப் பூகம்பம் கற்பனைக்கு எட்டாத ராட்சத அலைகளை எழும்பச் செய்தது. இவை கடலோரமாக அமைந்த பதினொரு நாடுகளைச் சின்னாபின்னமாக்கி, பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலிக்கொண்டது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டின மீனவர்கள் குடியிருப்புப் பகுதி; தன் குடிசைக்குள் ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்த அந்தோணிக்கு விழிப்பு வந்துவிட்டது. ஜன்னல் வழியாகத் தெரிந்த சூரிய வெளிச்சத்தைக் கொண்டே மணி ஆறு இருக்கும் என்று கணித்தான். சாதாரண நாளாக இருந்தால் வங்கக்கடலின் ஆழ்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்திருப்பான். ஆனால் கிறிஸ்துமஸ் பெரும் பண்டிகை இல்லையா, தன் இரண்டு ஆண் பிள்ளைகளோடும் மனைவி மேரியோடும், கிறிஸ்துமûஸக் கொண்டாடி மகிழ்ந்தான்.

""மாமா'', மேரி, அந்தோணியை அப்படித்தான் அழைப்பாள்.
""போய் ஒரு அரை கிலோ நல்ல கறி வாங்கியாங்க. புள்ளைகளுக்கு இன்னைக்கு பிரியாணி ஆக்கித் தரலாம்.
இப்பத்தானே, பிரார்த்தனையை முடிச்சிட்டு வந்தேன். அதுக்குள்ள என்னை கடைக்கு விரட்டறையா?''
""இல்ல மாமா, தினம் தினம் பிள்ளைங்களுக்கு மீன் குழம்பையே ஆக்கித் தரேன். இன்னைக்குப் பண்டிகை நாளு, இரண்டு பசங்களுக்கும் பிரியாணின்னா உயிர் அதான்...''
எப்பொழுதோ கிடைக்கும் இந்த உணவைப் பிள்ளைகளும் ஆவலாக உண்டு மகிழ்ந்தனர். குடிசையின் வெளியே வந்து அந்தோணி பழைய சினிமாப் பாடல்களைப் பாடி மகிழ, அக்கம்பக்கத்துக் குடிசைவாழ் மீனவர்களும் அதில் கலந்து கொண்டுப் பாடி, ஆடி மகிழ்ந்தனர்.
அந்தோணி தூங்கிக் கொண்டிருந்த மேரியை எழுப்ப மனம் இல்லாமல், மெதுவாகக் கதவை மூடிக்கொண்டு வெளியே வந்தான். வழக்கம்போல, தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கடல்அன்னையை வணங்கினான். 
கடந்த இரண்டு நாட்களாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை. இனி நாளைக்குத்தான் போகவேண்டும். அந்தோணிக்குச் சொந்தமானக் கட்டுமரம் ஒன்று இருந்தது. மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லும்பொழுது அவனுக்குத் துணையாக அவனுடைய நண்பன் ஆண்டனி உடன் வருவான். 
இது நேற்று, இன்று எற்பட்ட பழக்கம் இல்லை, இருபது வருட வழக்கம். ஆண்டனி தன் குடும்பத்தோடு, கிறிஸ்துமûஸக் கொண்டாடத் தன் மாமனார் வீட்டுக்குச் சென்றுவிட்டான். இன்றைக்கு மாலைதான் திரும்பி வருகிறான். அதனால், நாளைக்குத்தான் மீன் பிடிக்கப் போக வேண்டும்.
பிறகு எதற்கு அந்தோணி இவ்வளவு அவசரமாகக் கடற்கரையை நோக்கிப் போகிறான்.
அந்தோணியின் மீன் பிடிக்கும் வலையில் ஆங்காங்கே கிழிசல்கள் ஏற்பட்டிருந்தது. இரண்டு மாதங்களாகவே அதைத் தைக்க வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் அதற்கு நேரம் கிடைப்பதில்லை. இன்றுதான் முழுசா ஒரு நாள் இருக்கே.
சிலு சிலு என்று கடல்காற்று அந்தோணியின் முன் நெற்றிக் கேசங்களைக் கலைத்துப் போட்டுக் கொண்டிருந்தது. குனிந்த தலையை நிமிராமல் தன்னுடைய வலையைத் தைப்பதில் அந்தோணி கவனம் செலுத்திக் கொண்டு இருந்தான்.
சே, வயிறு கடமுடான்னு சத்தம் போடுதே, ஒரு வாய் டீயாவது குடிச்சிட்டு வந்திருக்கலாம். வெயில் சூடேறுவதற்குள் வேலையை முடிக்க நினைத்தேன், இப்ப பசிக்குது.
இந்த எண்ணம் ஏற்பட்டவுடன் வலையைச் சுருட்டி வைத்துவிட்டு, டீக்கடை வரைக்கும் போய் டீயைக் குடித்துவிட்டு வரலாம் என்று எழுந்தான். கடலைப் பார்த்துத் திடுக்கிட்டான். 
என்ன இது? கடலில் அலையே இல்லையே, சற்று உள் வாங்கினால் போல் அல்லவா இருக்கு. மனப்பிரம்மையோ, தன் கண்களை வலது கையால் தேய்த்துவிட்டுப் பார்த்தான். ஐயோ, அது என்ன கடலில் தீ பற்றிக் கொண்டதா? கறுப்பு புகை போல வானுயர்ந்து எழும்பி வருகிறதே, அது பேரலை என்பது அந்தோணிக்குப் புரியவே சில விநாடிகள் ஆனது.
இயேசு அய்யனே என்று கத்திக் கொண்டு, தன் வீடு நோக்கி ஓடத் தொடங்கினான் அந்தோணி.
வாழ்க்கையில் இதுவரை கேட்டறியாத பெரும் சத்தம்; வானத்தை நோக்கி வீசப்பட்டவன் பிறகு அதள பாதாளத்திற்கு செல்வதைப் போலக் கீழே இறங்கிக் கொண்டிருந்தான், அவனுடைய கண்களையும், மூக்கையும் ஏதோ ஒன்று அடைக்க அவன் நினைவு இழந்தான்.
அந்தோணி கண் விழித்தபொழுது ஒரு உயர்ந்த பனைமரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தான். என்ன நடந்தது என்பதை அவனால் உணர முடியவில்லை. ஆனால் சுற்றி எழுந்த மரண ஓலங்கள் அவனை இவ்வுலகத்திற்கு அழைத்து வந்தது.
மெதுவாகப் பனை மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தான். அவன் உடல் முழுவதும் கறுப்பு மண், மூக்கின் உள் எல்லாம் மண், கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தது.
ஐயோ, கடல்  உள்ளே புகுந்துடுச்சு, எல்லாம் போச்சு என்று ஜனங்கள் தலைத்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தனர். சடக் என்று அந்தோணிக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. மக்களே என்று தன் குடிசை இருக்கும் 
திசையை நோக்கி அந்தோணி தலைத்தெறிக்க ஓடினான்.
வீடு மட்டும் இல்லை, மேரி, பீட்டர், மைக்கேல் என்று எவருமே இருந்த சுவடு தெரியாமல் கடலுக்குள் ஐக்கியமாகி இருந்தனர். ஐயோ மேரி, புள்ளைகளே என்று கதறினான் அந்தோணி. இயேசுவே! என்னை மட்டும் ஏன் பொழைக்க வச்சே, இதோ எங்களை வாழ்வித்த தெய்வமே என் வம்சத்தை அழிச்சிடுச்சே என்று கடலை நோக்கித் தன் உயிரை மாய்த்துக் கொள்ள ஓடினான்.
அங்கே அவன் கண்ட காட்சி, பல பிணங்கள் மண்ணில் புதைந்திருந்தன. ஆடைகளை முற்றிலுமாகக் கடல் அலை இழுத்துக்கொள்ள, அம்மணமாக பல மல்லாந்துக் கிடந்தன. இதில் பெண்களின் பிணங்கள் அதிகமாக இருந்தன. என்ன கொடுமை அக்கா, தங்கச்சிகளாகப் பழகிய மக்கள்; வெறி வந்தவன் போல் ஓடிய அந்தோணி அங்குமிங்குமாகக் கரை ஒதுங்கி இருந்தத் துணிகளைச் சேகரித்து, அந்தப் பிணங்களை மூடி அவைகளின் கெüரவத்தைக் காத்தான்.
பிணங்களைச் சுமந்து சென்று ஓர் இடமாகச் சேர்த்தான். சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி, அவர்களை ஒன்றிணைத்தான். தன் இழப்பை நினைத்து வாய்விட்டு அழுது, பிறர் கஷ்டங்களுக்குத் தோள் கொடுத்தான்.
அந்தோணி தன் பெண்டாட்டி, பிள்ளைகள் உயிரோடு கிடைப்பார்களா என்று ஏங்கினான். ஓடி ஓடித் தேடும்பொழுது பலர் குற்றுயிராகக் கிடைப்பதைப் பார்த்து அவர்களைக் கரைச்  சேர்த்தான். இப்படி, அப்படியாக மொத்தம் இருபத்து ஐந்து பேரைக் காப்பாற்றி இருந்தான்.
அவனுடைய நல்ல குணத்திற்கு இறைவன் சிறிது கருணைக் காட்ட நினைத்தாற்போல, சுனாமியின் தாக்குதலுக்குப் பின் இரண்டாம் நாள் நிவாரணத்திற்காக எழுப்பப்பட்ட ஒரு கூடாரத்தில் அந்தோணியின் பத்தே வயதான அவனுடைய இளைய மகன் பீட்டர் உயிரோடு மீட்கப்பட்டிருந்தான். 
தெய்வமே, நன்றி என மண்ணில் மண்டியிட்டு அழுதான் அந்தோணி. மேரியும், மைக்கேலும் இன்றுவரை கிடைக்க வில்லை. அவர்களுடைய பிணங்களைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடல்தாய் அவர்களைத் தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டாள். மொத்தம் 10,000 பேர் தமிழ்நாடு முழுவதிலும் 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு நடந்த சுனாமியில் உயிர் இழந்தார்கள் என்றால் அதில் 7,000 மக்கள் நாகப்
பட்டினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.


2005-இல், தமிழக அரசு சுனாமி நினைவு நாளில், அதில் வீரச் செயல்களைப் புரிந்து பல உயிர்களைக் காத்தவர்களுக்கு வீரப்பதக்கமும், பத்து லட்சம் ரூபாய்களையும் பரிசாக வழங்கியது. இதில் முதல் நபராக அந்தோணி தேர்ந்தெடுக்கப்பட்டான். தமிழக முதல்வர் கையால் பதக்கத்தையும், பத்து லட்சம் ரூபாய்க்கான செக்கையும் வாங்கினான்.
சில வார்த்தைகளைப் பேச விரும்புவதாக அந்தோணி வேண்டுகோள் விடுக்க, முதல்வர் அதற்குச் சம்மதித்தார்.

"'அனைவருக்கும் வணக்கங்க. கடல் மாதாவை, கடல் அன்னைன்னு சொல்லித்தான் அவளை வணங்கி, அவள் கொடுத்த வாழ்வாதாரத்திலே வாழுறோமுங்க. சுனாமி என்ற சொல்லையே நாங்க அறிஞ்சது இல்லை. அன்றைக்குக் கூட கடல் உள்ளே புகுந்துடுச்சுன்னுதான் ஓடினோம், அவளுடைய கருணையிலே பலர் உயிர் பிழைச்சோம். இதுலே என்னுடையதுன்னு என்ன இருக்கு சொல்லுங்க? எனக்கு ஒரு மகனை மீட்டுக் கொடுத்துட்டா, உடம்புலே இன்னும் தெம்பு இருக்கு, உழைச்சு சாப்பிடுவேங்க. கடல் மாதாவே எடுத்ததைத் திருப்பிக் கொடுப்பா. இந்தப் பத்து லட்ச ரூபாயை இந்த சுனாமியிலே அநாதையானப் பிள்ளைகளின் நலனுக்காகக் கொடுக்கறேங்க, மறுக்காமல் முதல்வர் ஐயா வாங்கிக்கணுமுங்க''.
தன் பிள்ளை பீட்டரின் கையைப் பிடிச்சிட்டு தலைநிமிர்ந்து நடக்கும் அந்தோணி அறங்களுக்கு எல்லாம் முதன்மையானவனாக எனக்குத் 
தோன்றுகிறான், உங்களுக்கு?
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
 ( குறள்  எண்:  322)
பொருள் : இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com