சோகத்திலிருந்து மீள...

நட்பு வட்டாரங்களையும் இழக்கும் பரிதாபம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியான தாக்கம் ஒரு பக்கம் என்றால், இது போன்ற சொந்த சோகங்களின் தாக்கமும் இன்னொரு பக்கம். 
சோகத்திலிருந்து மீள...
சோகத்திலிருந்து மீள...

"கரோனா முதல் அலையுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது அலையின் பாதிப்பு மிகவும் கடுமையானதாக உள்ளது. குறிப்பாக பலரும், தங்கள் குடும்பத்தில், சுற்றம், நட்பு வட்டாரங்களையும் இழக்கும் பரிதாபம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியான தாக்கம் ஒரு பக்கம் என்றால், இது போன்ற சொந்த சோகங்களின் தாக்கமும் இன்னொரு பக்கம். 

இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் சோகத்தில் இருந்து மீண்டு, மன ஆறுதல் பெறும் வகையில் மன நல ஆலோசனை வழங்க உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது சென்னை மன நல ஆலோசகர்கள் சங்கம். அனுபவம் வாய்ந்த இருபத்தைந்து மன நல ஆலோசகர்களை ஒருங்கிணைத்து, தொலைபேசி மூலமாக இந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விரிவாகப் பேசினார் சங்கத்தின் மூத்த மன நல ஆலோசகர் சரஸ் பாஸ்கர். அவர் கூறியதாவது:

"இந்த கரோனா தொற்றும், அதன் காரணமாக பலியான ஏராளமான உயிர்களும் எதிர்காலம் குறித்து ஒரு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்திவிட்டன. இதனால், தொற்று பாதிப்பு இல்லாதவர்கள் கூட மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக தன் குடும்ப உறுப்பினர்களை, உறவினர்களை, நண்பர்களை, தெரிந்தவர்களை இழந்தவர்கள் அந்த ஆழமான சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு, ஆறுதல் அளிக்கும் வகையிலும், சமூகத்தில் இருந்து மீண்டு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும் மனநல ஆலோசனை வழங்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. முதல் அலையின்போது, சுமார் ஒரு மாதகாலம் இது போல மன நல ஆலோசனைகள் வழங்கினோம். அது பலருக்கும்  உபயோகமாக இருந்தது. தற்போதைய இரண்டாம் அலை சமயத்தில், அத்தகைய சேவை  மறுபடியும் அவசியம் என்று நினைப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

மன நல ஆலோசனை பெறுவதற்கு மொழி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதாலேயே, தமிழ், தெலுங்கு, மலையாள, ஹிந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகள் பேசும்  மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்து, இந்த ஆலோசனை சேவையை துவக்கி இருக்கிறோம். முற்பகலில் ஒன்றும், பிற்பகலில் ஒன்றுமாக இரண்டு தொலைபேசி எண்கள் மூலமாக எங்கள் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம். எங்கள் உதவி மையத்தினர், சம்பந்தப்படவர் குறித்த தகவல்களையும், அவரது பிரச்னை குறித்தும் கேட்டறிந்து  கொள்வார். அடுத்து, அவர் விரும்பும் மொழியில் ஆலோசனை வழங்கும் மன நல ஆலோசகர், சம்பந்தப்பட்டவரைத் தொடர்பு கொண்டு, ஆலோசனைகள் வழங்குவார். இந்த பன்மொழிச் சேவை முற்றிலும் இலவசமானது. சிலருக்கு, சோகத்தின் தாக்கம் கடுமையாக இருக்கலாம். அவர்களோடு  ஒரு முறை பேசி, ஆலோசனை அளிப்பதன் மூலமாக பிரச்னையை முழுவதுமாக தீர்த்துவிட இயலாது. அப்படிப்பட்டவர்களிடம் எங்கள் ஆலோசகர்கள் தேவைக்கு ஏற்ப மீண்டும், மீண்டும் பேசி, ஆலோசனைகள் வழங்குவார்கள். 

நெருங்கியவர்களின் மரணம் காரணமாக ஏற்பட்டிருக்கும் மன ரணத்துக்கு  ஆறுதல் வார்த்தைகள் பலன் தருமா?

அது மிகப்பெரிய சவால்தான். நெருங்கியவரது மரணத்தால் ஏற்படும் சோகத்துக்கு காலம்தான் ஆறுதல் அளிக்க முடியும். ஆனாலும், மரணம் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. அதுவும் இதுபோன்ற பேரிடர் காலத்தில், அது நம் கையை மீறிய விஷயம் என்பதை புரிய வைக்க வேண்டும். மன நலத்தில், இந்த வகையை "கிரீஃப் கவுன்சலிங்'  என்று சொல்வார்கள். அனுபவம் வாய்ந்த மன நல ஆலோசகர்கள் அதனை சரியானபடி கையாண்டு, உதவி செய்வார்கள்''.

மன நல ஆலோசனை சேவைக்கு

-   9840487762 (காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை)
-  7338905946 (பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை)    

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com