கருணையுள்ள இதயமே  உண்மையான அழகு!

சென்னை அண்ணா நகரில் 25 ஆண்டுகளாக  வாழ்ந்து வருகிறார் தேனியைச் சேர்ந்த சிவகாமி,
கருணையுள்ள இதயமே  உண்மையான அழகு!
கருணையுள்ள இதயமே  உண்மையான அழகு!

சென்னை அண்ணா நகரில் 25 ஆண்டுகளாக  வாழ்ந்து வருகிறார் தேனியைச் சேர்ந்த சிவகாமி, .வாடகை வீடுதான். ஒரே மகன். சுமார் 15  ஆண்டுகளாக  முதியோருக்கும், உதவி தேவைப்படுகிறவர்களுக்கும் தனி மனுஷியாக  உதவி செய்துவருபவர். உணவு அளிப்பவர். ஆறுதல் வார்த்தைகள் சொல்பவர்.

உதவிகள் செய்வதற்காக அறக்கட்டளையையோ, சமூகத் தொண்டு நிறுவனத்தையோ தொடங்காதவர். எந்த நேரத்தில்  அழைத்தாலும்  உடனே கிளம்பிவிடுவார். வீட்டையும், குடும்பத்தையும்  கவனித்துக் கொண்டு, தேவைகளைச் சுருக்கிக் கொண்டு ஆர்வத்துடன் உதவும் பாதையில் பயணிக்கும் சிவகாமி  தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:
"சமீபத்தில் அரசு மருத்துவமனையிலிருந்து  காலை 11 மணிக்கு செவிலியர் அழைத்தார். சென்று பார்த்த போது.. மனைவியை  இழந்திருந்த அந்த முதியவர் சாலையில் அடிப்பட்டு மூன்று   மாதமாக காலுக்கு சிகிச்சை பெற்று குணமாகி வந்த நிலையில்,  அவர் கொடுத்த தகவலின் படி திருவண்ணாமலையில் அவரது மகன், மகளை தொலைபேசியில் அழைத்தேன்.  விஷயத்தைச் சொன்னதும், எங்களுக்கு அப்பாவே இல்லை.. நீங்களே முதியோர் காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள்' என்று இருவரும் ஒதுங்கிக் கொண்டார்கள்.  

பின்னர், காவல் துறையிடம் ஒப்புதல் பெற்று, காப்பகம்  சொல்லும் இடத்திலெல்லாம் கையொப்பம் இட்டு.. மனித உரிமை சட்டங்களுக்கு உட்பட்டு காப்பகத்தில்  சேர்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய போது, இரவு மணி பத்தரை.

இப்படி தினம் தினம்,  "நாளைய விடியலில்  யாருக்கு  உதவுவேன்' என்ற  கேள்வியுடன் உறங்கப் போகும் போது மணி பன்னிரண்டைத் தாண்டிவிடும். 
குழந்தைகளை  யாருக்குத்தான் பிடிக்காது ? அதுவும், பெண் குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதனால்,  சாலையோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆசையா  சட்டையோ, கவுனோ  வாங்கிக் கொடுப்பேன்.   புற்று நோய் சிகிச்சைக்காக  வரும் குழந்தைகள் ஆசைப்படும் பொருள்களை அன்பளிப்பு செய்வேன்.  

காப்பகங்களில் உள்ளவர்களை குளிக்க வைத்து,  உடைகளை மாற்றி, டயாப்பர் அணிவித்து, நகம் வெட்டி விட்டு, உணவு பரிமாறி ஊட்டிவிட்டு வீடு வந்து சேரும்போது  மனம்  நிறைவாக இருக்கும்.

ஒரு முறை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. சென்று பார்த்தேன். அண்ணா நகர் ரவுண்டானாவில் மனநிலை பாதிக்கப்பட்டு அடையாளம் சொல்ல முடியாமல்  ஆனால் ஆவேசமாக  இருந்த  அந்த நடுத்தர பெண்மணியை காண்பித்தனர். அவரை சமாதானப்படுத்தி, அவருக்கு ஆடையை மாற்றிவிடும்போது கடித்தும் விட்டார். பிறகு, அவரை காப்பகத்தில் சேர்த்து.. பேசி பழகி  விபரங்களைக் கேட்ட போது, அவர்,   நியூக்கிளியர்  மெடிக்கல்  இமேஜிங்  சயின்ஸ்'  படித்த  டாக்டர் என்று தெரிய வந்தது. அதை வைத்து அவர் எந்த மருத்துவமனையில் வேலை பார்த்தார் என்பதைக் கண்டுபிடித்து பிறகு  அவர் வீட்டில் கொண்டு போய் சேர்த்தோம். அவர் வட நாட்டுப் பெண்மணி.  

இப்படி தினம் தினம் சந்திக்கும் நபர்களிடம் கேட்பதற்கு  நிறைய இருக்கும்...நெகிழ்ச்சியாக இருக்கும்... சொல்பவர் கண்ணீரில்  உடைவார். அவர்களுக்கு ஆறுதல் சொல்வேன். 

ஆனால் ஒரு சிலரிடம்  மட்டும் தான் எண்ணங்களை... கருத்தைப்  பரஸ்பரம்  பரிமாறிக்கொள்ள முடியும்..! அப்படிப் பட்ட உறவுகள், நட்புகள் வாழ்வில் கிடைப்பது பெரும் பாக்கியம்...! அந்த மாதிரி பிரதிபலன் பாராத உறவுகளை, நட்புகளை  வாழ்வில் தொலைத்து விடக்கூடாது. அப்படியே தொலைத்து இருந்தாலும் அந்த உறவுகளை, நட்புகளை  திரும்பவும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 

ஆதரவற்றோருக்கான  காப்பகத்தில் சேர்த்துவிட நான் அழைத்து சென்ற அம்மா ஒருவர், ஹிந்தியில் மூணு டிகிரி முடித்து பிரபலமான பள்ளிகளில் வேலை பார்த்து அன்பான கணவருடன் குடும்பம் நடத்திய ஒரே ஒரு மகனுக்குத் தாய். ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அம்மாவின் கடைசிக் காலத்தில்  மகனுக்கு தாய் பாரமாகிப் போனார். ஆதரவற்றோர் காப்பகத்தில் அந்த அம்மா இறந்தும் போனார். மகன் ஈமக் கடன் செய்யக் கூட வரவில்லை. இப்படி எல்லாம்  நிகழ்வுகள்  ஒரு புறம்  நடந்து கொண்டிருந்தாலும் மறுபுறம்.. மனித நேயத்துடன்  சமூகப் பொறுப்புடன் பங்களிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

அழகு என்பது அழகான உடல் அமைப்பு அல்ல... கருணையுள்ள இதயம் கொண்டிருப்பதுதான் உண்மையான அழகு .." என்கிறார்  இந்த பொதுமுடக்க நேரத்திலும் தன் நலன் கருதாது பிறரின் நலனுக்காகவே வாழ்ந்து மனிதத்தை மட்டுமே சுவாசிக்கிறார் சிவகாமி.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com