வறண்ட பூமியில் காய்கறி விளைச்சல்!

2020 -ஆம் ஆண்டு  ஏப்ரலில்  அமல்படுத்தப்பட்ட  பொதுமுடக்கம்  காரணமாக  பல தகவல்  தொழில் நுட்ப  நிறுவனங்கள்,
வறண்ட பூமியில் காய்கறி விளைச்சல்!
வறண்ட பூமியில் காய்கறி விளைச்சல்!

2020 -ஆம் ஆண்டு  ஏப்ரலில்  அமல்படுத்தப்பட்ட  பொதுமுடக்கம்  காரணமாக  பல தகவல்  தொழில் நுட்ப  நிறுவனங்கள், தங்கள்  பணியாளர்களை  வீட்டிலிருந்தே வேலை செய்ய  அனுமதித்து.  ஆனால்  இந்த நிலைமை  எவ்வளவு  காலம் நீடிக்கும்  என்று தெரியாத  பலர்  சொந்த  ஊர்களுக்குக் கிளம்பிவிட்டனர்.  ஐ.டி பணியில் இருந்த ரோஜா ரெட்டியும் சித்ரதுர்கா  மாவட்டம்  சல்லகரேயில் உள்ள  தன்னுடைய  தொன்னேஹள்ளி  கிராமத்திற்குக் கிளம்பிச்  சென்றார். 

 பாறைகளும்  உஷ்ணமும்  நிறைந்த  வறண்ட  பூமியான  அப்பகுதியில்  தண்ணீர் பிரச்னையும் இருந்ததால்,  ரோஜாவின் தந்தையும்,  சகோதரனும் விவசாயத்தை  கைவிட்ட  நிலையில்தான் ரோஜா  அங்கு போய் சேர்ந்தார்.  இனி மாற்று வழியைத்  தேட  நினைத்த  ரோஜா,  ஒரு சவாலாக   இயற்கை  விவசாயத்தை  கையிலெடுக்கத் தீர்மானித்தார். அனுபவம்  வாய்ந்த விவசாயிகளின்  அறிவுரைப்படி  குறைந்த நீரில்  விளையக்
கூடிய  காய்கறிகளை  பயிரிடும்  முயற்சிகளை  மேற்கொண்டார்.  அவ்வப்போது  பெய்யும்  பருவ மழைக்கேற்ப  விளையக் கூடிய  காய்கறிகள்  என்னென்ன  என்பதை  தோட்டக்கலைத் துறையினரிடம்  கேட்டறிந்தார்.  இவரது  தந்தை  மற்றும்  சகோதரனின்  விவசாய  ஆலோசனையும்,  சொந்தமாக  இருந்த ஆறு ஏக்கர்  நிலமும்  ரோஜாவின்  முயற்சிக்கு  சாதகமாக  இருந்தது.



 கிராமங்களில்  உள்ள பல  இளைஞர்கள்  விவசாயத்தை  விட்டுவிட்டு  நகரங்களில்  வேலை  தேடிச் செல்லும்  இன்றைய  சூழலில்,  கைநிறைய  சம்பளம்  கிடைத்த வேலையை  விட்டுவிட்டு  இயற்கை  விவசாயத்தில்  ஆர்வம்  காட்டிய  ரோஜாவின் நம்பிக்கை  வீண் போகவில்லை.  குறுகிய  காலத்தில்  35 வகையான  காய்கறிகளை  விளைவித்ததோடு,  அந்த காய்கறிகளை  விற்பனை செய்ய  "நிசர்கா  நேடிவ் பார்ம்ஸ்'  என்ற நிறுவனத்தை  நிறுவி இயற்கை  விவசாயத் தொழில்  முனைவோராகவும்   உயர்ந்தார். முதலில்  ரோஜாவின்  யோசனையை  வீண் முயற்சியென  ஏற்க  மறுத்த  ரோஜாவின்  தந்தையும்,  சகோதரனும் இப்போது  இவருக்கு  உறுதுணையாக  நிற்கிறார்கள்.  ஒரே ஆண்டில்  ரோஜா திறமையான  விவசாயி  என்று  பெயரெடுத்ததோடு,  தொன்னேஹள்ளி  கிராமத்தில்  உள்ள மற்ற விவசாயிகளுக்கும்  முன்னுதாரணமாக  விளங்குகிறார். 

முழுக்க முழுக்க இயற்கை  விவசாயம்  மூலம்  விளைவிக்கப்படும்  காய்கறிகளை  பயிரிடுவதற்காக  தோட்டக்கலைத்துறை  மற்றும் மகாராஷ்டிரா,  பெல்காம் போன்ற  இடங்களிலிருந்து  தரமான  விதைகளையும்,  இயற்கை  உரங்களையும்  தருவித்து  விளைவிப்பதோடு,  விளைப் பொருள்களை மணிப்பால்,  உடுப்பி,  மங்களூர் போன்ற  நகரங்களுக்கு  வாகனங்கள் மூலம்  அனுப்பிவைக்கிறார்.  இதனால்  ரோஜாவுக்கு  நிரந்தரமான  வாடிக்கையாளர்கள்  கிடைத்துள்ளனர்.
  விவசாயத்தை கைவிட  வேண்டுமென்று  நினைத்த ரோஜாவின்  தந்தையும், சகோதரனும்  காய்கறிகளை  பேக்கிங்  செய்து வாகனங்களில்  ஏற்றி அனுப்ப  உதவியாக  உள்ளனர்.  தொன்னேஹள்ளி  கிராமத்தில்  உள்ள இளைஞர்களுக்கும்  தன்னுடைய  விவசாய  பண்ணையில்  வேலை  கொடுத்துள்ளார்.  மேலும் சில விவசாயிகள் ரோஜாவின்  ஆலோசனையைப் பெற்று  தங்கள் நிலத்திலும்  காய்கறிகளை  பயிரிடுவதால்  காய்கறி  விளைச்சலில்  தொன்னேஹள்ளி  கிராமம் முக்கியத்துவம்  பெற்றுள்ளது.

அடுத்து ரோஜாவின்  திட்டம் என்ன?

""என்னைத் தொடர்ந்து  என்னுடைய  கிராமத்தில்  மேலும் பல விவசாயிகள்  இயற்கை  விவசாயம்  மூலம் காய்கறிகள்  
பயிரிட்டு  உற்பத்தி  அதிகரித்திருப்பதால்  என்னுடைய  "நிசர்கா நேடிவ்  பார்மஸ்'  மூலம் இயற்கை  விவசாயிகள்  கூட்டுறவு  சங்கமொன்ற  நிறுவ  விரும்புகிறேன்.  ஆன்லைன்  மூலம்  நியாயமான  விலையில்  காய்கறிகளை  விற்பனை  செய்யவும்,  அதற்குத் தேவையான  ஆட்கள், வாகனம்  போன்ற அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு  செய்து வருகிறேன்.  வாடிக்கையாளர்கள்  வீடுகளுக்கே  சென்று  காய்கறிகளை  விநியோகிக்கும்  எண்ணமும்  உள்ளது.  இதன்மூலம்  நிரந்தரமான  வருமானம் கிடைக்கும்''  என்று  கூறும்  ரோஜா  ரெட்டிக்கு  அவரது  விவசாயப்  பண்ணையின் மூலம் அதிக  
வருவாய்  கிடைக்கிறதாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com