வீட்டுக்குள் விரிகிறது உலகம்!

கொள்ளை நோய் பாதிப்பால் உலகமே முடங்கிப் போயிருக்கிறது. அரங்கங்கள் மூடப்பட்டுவிட்டன.
வீட்டுக்குள் விரிகிறது உலகம்!

கொள்ளை நோய் பாதிப்பால் உலகமே முடங்கிப் போயிருக்கிறது. அரங்கங்கள் மூடப்பட்டுவிட்டன. தங்களின் பெரும்பகுதி நாள்களை அரங்கத்தில் கழித்த பெண் சாதனையாளர்கள் இன்றைய சூழ்நிலையில் என்ன விதத்தில் மக்களைச் சென்றடைகிறார்கள்? தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரபலமான பேச்சாளர், நடனக் கலைஞர், ஹரிகதை நிபுணர் என்று கலைஞர்களைத் தொடர்பு கொண்டோம்.

சாதாரண நாள்களில் இவர்கள் சுறுசுறுப்பாக இயங்கியதை விட இன்னும் அதிக சுறுசுறுப்புடனும் பரபரப்புடனும் இயங்கி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கென சிறப்பான முயற்சிகளில் இருக்கிறார்கள் என்றாலும் பொதுவில் ஒரு விஷயத்தில் ஒத்திருக்கிறார்கள். அது, இன்றைக்கும் அன்றாடம் மக்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். தன் கலையை மேலும் மெருகேற்றும் முயற்சியில் இருக்கிறார்கள்.

அரங்கன் அருளால் வீடே அரங்கம் - விசாகா ஹரி இந்தியாவின் மதிப்பிற்குரிய பெண் கலைஞர்கள் பலரில் இவரும் ஒருவராக மதிக்கப்படுபவர் விசாகாஹரி. தமிழ்க் குடும்பங்களில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரின் அன்புக்குப் பாத்திரமானவர் விசாகாஹரி. வீட்டுக்குள் முடங்கியிருக்கும் முதியோர்களுக்கு ஒரே ஆறுதல் விசாகாஹரி என்று சொல்லிவிடலாம்.

லால்குடி ஜெயராமனின் மாணவி. இசையும் இயலும் ஒன்றுக்கொன்று இயைந்து வெளிப்படும் இவரது ஹரிகதைகளில். தனக்கென தனி பாணி, தன் குருநாதரின் வார்த்தைகளை சிந்தனைகளை எடுத்துச் சொல்லும் பொழுது காட்டும் விநயம் இவரின் தனிச் சிறப்பு. ஸ்ரீரங்கத்தில் அரங்கன் அருகில் இருக்கும் விசாகாஹரி, கொள்ளை நோய் தொற்றுக்கு சற்று முன் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஹரிகதைக்காக "விஜயஸ்ரீ ஸ்கூல் ஆஃப் ஹரிகதா' என்று ஒரு பள்ளியைத் தொடங்கியிருக்கிறார். தெய்வ சங்கல்பம் என்று இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும் அவர், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் தனது பள்ளியை இணைய வழிக்கு மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்.

வாரம் தோறும் ஹரிகதை வகுப்புகள் நன்முறையில் நடக்க, இந்தப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் பொதுவில் அனைவரும் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் "உபதேச மொழிகள்' என்று தன் குருவின் உபதேசங்களைத் தேர்ந்தெடுத்து சில மணித்துளிகள் ஒரு கீர்த்தனையுடன் சேர்த்து மக்கள் முன் வைக்கிறார். இன்றைய காலத்திற்குத் தேவையான கருத்துகளைத் தொகுத்து இது போல நூற்றுக்கணக்கான பதிவுகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அவர் மேலும் கூறுகையில்,
""வீட்டுக்குள் நிகழ்ச்சிகளை நடத்தினாலும் என் உலகம் நாளுக்கு நாள் விரிவடைந்தே வருகிறது. அரங்கன் அருளால் வீடே அரங்கம் ஆகியிருக்கிறது.

"சத்சங்கம்' என்ற பெயரில் மாதம் ஒருமுறை இணைய வழி ஹரிகதை நிகழ்ச்சிகளையும் சென்ற ஆண்டில் நிகழ்த்தத் தொடங்கினேன். இணைய வழியில் இணைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே நிகழ்ச்சிகளை யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கினேன்.

அரங்கத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினால் சில ஆயிரம் பேர் வருவார்கள்; ரசிப்பார்கள். தற்போது, இணையத்தில் ஒரே நேரத்தில் நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் பேர் வரை நேரலையில் கேட்கிறார்கள். தொடர்ந்து, மக்கள் தங்களுக்கு வசதியான நேரங்களில் கேட்க முடிகிறது. இதனால் பல லட்சம் பேரை ஒரே நேரத்தில் சென்றடைய முடிகிறது. இதுவும் இறைவனின் கருணை ஹரிகதைகள் சொல்வதோடு மட்டுமல்லாது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதற்கும் இந்த நிகழ்ச்சிகளில் நேரம் ஒதுக்கி புராணம், ஹரிகதை இசை தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்து வருகிறேன்.

கொவைட் முதல் அலை முடிந்து இரண்டாம் அலை தொடங்குவதற்கு முன் சற்று அரங்கங்கள் திறந்த நேரத்தில் மூன்று நாட்கள் நாரத கான சபாவில் எங்களது பள்ளியின் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியை உத்சவமாகவே கொண்டாடினோம்.

ஒரே நேரத்தில் உலகில் அனைவரையும் சென்றடைகிறோம் என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும் கண்முன் ரசிகர்களின் மலர்ந்த முகத்தைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை என்பது ஒரு குறை தான். இறைவனின் விளையாடல்களை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். எல்லாம் நலமடைய இறைவனைப் பிரார்த்திப்போம்'' என்று தன் ஆதங்கம் மற்றும் அவாவினை வெளிப்படுத்துகிறார்.

நான் ஒரு கதைசொல்லி - பாரதி பாஸ்கர் பாரதி பாஸ்கர் இவரும் உலகறிந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். கம்பன் கழக மேடைகளில் புகழ் பெற்றவர். தனது குரு சாலமன் பாப்பையாவின் குழுவில் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணித்துப் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். வங்கியில் உயரதிகாரி. இவரும் இணையத்தில் தற்போது கவனத்தைத் திருப்பியிருக்கிறார். பாரதி பாஸ்கர் சொல்கிறார்:

ஆரம்பத்தில் பார்வையாளர்களைப் பார்க்காமல் திணறித் தான் போனேன். ஏனெனில், எங்களின் சொற்கள் பார்வையாளர்களுக்கானவை. அவர்களின் தன்மை அறிந்து பேசுவது தான் ஒரு பேச்சாளரின் அடிப்படைப் பண்பு. இணைய வழி நிகழ்ச்சிகள் பெரிய அளவில் திருப்தியைத் தரவில்லை, தனியே ஓர் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு பேசுவதில் சுவாரஸ்யமில்லை. என்றாலும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன்.

நண்பர் ராஜா வழங்கிய யூடியூபில் சிறுகதைகள் வாசித்து அளிக்கலாம் என்ற ஆலோசனையை ஏற்று "ஒரு கதை சொல்லட்டுமா' என்று சிறுகதைகள் வாசிக்கத் தொடங்கினேன். இலக்கியத்தின் மீதான தீராக் காதல் என்னை இந்தப் பணிக்கு இட்டுச் சென்றது. உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் இளைஞர்கள் அனைவருக்கும் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், அவர்களிடம் தமிழ் ஆர்வம் இருக்கும். அப்படியானவர்களிடம் தமிழ் சிறுகதைகளைக் கொண்டு சேர்ப்பதில் உற்சாகம் மிகுந்தது.

இதில் உங்கள் பாணி என்ன?

ஒவ்வொரு கதையைப் படிப்பதற்கு முன்னும் அந்தக் கதை பற்றிய என்னுடைய பார்வையை முன் வைக்கிறேன். பல்லாயிரம் பேர் நாம் வாசித்தளிக்கும் கதைகளைக் கேட்கிறார்கள் அது குறித்தான தம்முடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற நிலையை நான் ரசிக்கத் தொடங்கினேன். வேலையும் மனதுக்கு மிக நெருக்கமாகிவிட்டது''

மெல்ல மெல்ல ரஷ்ய மொழிக் கதைகள் தொடங்கி உலக மொழிகளின் சுவாரஸ்யமான சிறுகதைகளை என்னுடைய பாணியில் சொல்ல ஆரம்பித்தேன். ரசிகர்கள் வட்டம் இன்னும் பெரிதாகியது. "சிறகை விரி பற' என்ற தலைப்பில் தொடர்ந்து மகாபாரதத்தின் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகளைத் திரட்டி அதனை இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

பேச்சாளராக அடையாளப்படுத்தப்பட்ட எனக்குள் ஒரு கதை சொல்லி இருப்பதை நானே உணர்ந்து கொள்ள இந்த ஊரடங்கு காலம் வழிசெய்திருக்கிறது. இன்றைக்கு இலக்கிய அனுபவத்தை உணர விரும்பும் பல்லாயிரம் தமிழர்களோடு இலக்கியத் தளத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற பூரிப்பு ஒருபுறம் இருந்தாலும் மக்களின் மலர்ந்த முகங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது.

யாருமில்லா அரங்கத்தில் - ஊர்மிளா சத்யநாராயணன்

பேச்சாளர்களின் நிலை ஒருவிதம் என்றால் நடனக் கலைஞர்களின் நிலை சற்று மாறுபட்டது. பத்மஸ்ரீ கே என் தண்டாயுதபாணி பிள்ளையின் மாணவி. 45 ஆண்டுகளுக்கும் மேலாக அரங்கங்களில் அன்றாடம் தன்திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தவர் ஊர்மிளா சத்யநாராயணன். அர்ப்பணிப்போடு கூடிய அவரது உழைப்பு நடனத் துறையில் அவருக்கென ஒரு தனி இடத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. " நாட்டிய சங்கல்பா' என்ற நடனப் பள்ளியை கால் நூற்றாண்டு காலம் ஆச்சாரியராக இருந்து நடத்துவதோடு நூற்றுக்கணக்கான மாணவர்களைத் தேர்ந்த நடனக் கலைஞர்களாக உருவாக்கியிருக்கிறார். அவர் என்ன சொல்கிறார்:

""தற்போது எங்கள் நாட்டிய சங்கல்பா பள்ளியில் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் வெளிநாட்டில் இருக்கும் சில மாணவர்களுக்கு மட்டும் வேறு வழி இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவோம். இன்றைக்கு அடுத்த தெருவில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் வகுப்புகளை ஆன்லைனில் மட்டுமே நடத்த முடியும் என்பதால் வகுப்புகள் தொடர்ந்து பல மணி நேரம் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். முன்னை விட அதிக உழைப்பு தேவைப்படுகிறது.

உங்களுக்கான பயிற்சி எப்படி நடக்கிறது?

ஆன்லைன் தவிர வேறு மார்க்கம் இல்லாத நிலையில் கற்பிக்கும் முறைகளில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. கடினமான நிலைமை என்றாலும் எல்லா காலத்திலும் நன்மையும் இருக்கத் தான் செய்யும். அன்றாடம் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளுக்காக ஓடிக் கொண்டே இருந்ததால் நான் கற்க விரும்பிய புதிய நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கும் முயன்று பார்ப்பதற்கும் நேரம் இல்லாமல் இருந்தது. தற்போது அவற்றைக் கற்றுக் கொள்கிறேன். புதிய நடன நிகழ்ச்சிகளை வடிவமைக்கிறேன். என்னை செம்மைப்படுத்திக் கொள்ளவும் நேர்த்தியாக புதிய உத்திகளை முயன்று பார்க்கவும் வாய்ப்பாக இந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

எப்படி இருக்கிறது அனுபவம்?

சில நிகழ்ச்சிகளை இணைய வழியில் சபாக்களோடு இணைந்து நடத்துகிறேன். யாருமற்ற அரங்கத்தில் தனியே ஒரு நடன நிகழ்ச்சியை நடத்துவதென்பது இதுவரையிலான என்னுடைய கலையுலகப் பயணத்தில் நான் காணாத அனுபவம். நாரத கான சபா மேடையில் தனியே இருந்து நடனமாடிய நிகழ்வை வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது.

மாணவர்கள் சிலரின் அரங்கேற்றங்கள் கூட இந்தக் கடின காலத்திலும் நடத்தி முடித்திருக்கிறேன்.

எனது தாயார் கொவைட் பாதிப்புக்கு உள்ளான நிலையிலும் இரண்டு தவணை தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டிருந்ததனால் நலமடைந்துவிட்டார். இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களை கவனித்துக் கொள்வதன் சிரமங்களை உணர்ந்ததால் சொல்கிறேன், ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் நம் மக்கள் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மக்களிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். கலைஞர்கள் சிறந்த எதிர்காலத்தை மீண்டும் பெறுவார்கள். அரங்கங்களில் ரசிகர்களின் கரவொலியோடு நடனத்தை அரங்கேற்றுவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com