தமிழ்நாட்டு பெண் சிங்கம்

தன்னம்பிக்கையின்  இன்னொரு  முகம் தான்  அம்பிகா ஐ. பி. எஸ்.  பதினான்கு வயதில் அம்பிகாவுக்கு போலீஸ்காரருடன் திண்டுக்கல்லில்   திருமணம்.
தமிழ்நாட்டு பெண் சிங்கம்

தன்னம்பிக்கையின் இன்னொரு முகம் தான் அம்பிகா ஐ. பி. எஸ். பதினான்கு வயதில் அம்பிகாவுக்கு போலீஸ்காரருடன் திண்டுக்கல்லில் திருமணம்.

தினெட்டு வயதில் இரண்டு குழந்தைகளின் தாய். வழக்கமான வீட்டு பொறுப்புகள் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய சாதாரண குடும்பத் தலைவியாக மாறிவிட்ட அம்பிகா 35 -ஆவது வயதில் ஐ.பி.எஸ் ஆனது எப்படி ?

ஒரு முறை கணவருடன் குடியரசு நாள் போலீஸ் அணிவகுப்பைக் காண அம்பிகா சென்றிருந்தார். காக்கிச் சீருடையில் காவலர்களின் அணிவகுப்பு கம்பீரமாக இருந்தது. அந்த அணிவகுப்பு முடிந்ததும் இரண்டு உயர் காவல் அதிகாரிகளுக்கு பாண்ட் முழங்க பதக்கம் அணிவித்து விழாவின் சிறப்பு விருந்தினர் மரியாதை செய்தார். இதைப் பார்த்த அம்பிகா புல்லரித்துப் போனார்.

"உங்களுக்கு இந்த ராஜ மரியாதை எப்போது கிடைக்கும்' என்று கணவரிடம் அம்பிகா கேட்கவில்லை. மாறாக எனக்கு இந்த மரியாதை கிடைக்க என்ன செய்யணும்..' என்று கேட்டார்.

கணவர் திகைத்துப் போனார். "அது அத்தனை எளிதான விஷயம் இல்லைம்மா... மொதல்ல பட்டப்படிப்பு படிக்கணும். அப்புறம் ஐ.பி. எஸ் தேர்வு எழுதி பாஸ் ஆகணும்.. அப்புறம் காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டு ஐ.ஜி, டி.ஜி.பி ஆகணும்... அப்போதுதான் மதிப்பு மரியாதை விருது உன்னைத் தேடி வரும்' என்று கணவர் சொல்ல ... அம்பிகாவை ஐ.பி.எஸ் கனவு அந்தக் கணமே தொத்திக் கொண்டது.

பள்ளிப்படிப்பை முடிக்காத அம்பிகா ஐ.பி.எஸ் அதிகாரியாக மாறுவது என்று உறுதி எடுத்தார். கணவரின் அனுமதியைக் கேட்டுப் பெற்றார். முதல் கட்டமாக பயிற்சி வகுப்பில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறினார். பிறகு பட்டப்படிப்பையும் முடித்தார்.

"திண்டுக்கல்லில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு பயிற்சி நிலையங்கள் இல்லை. அதனால் நீ சென்னைக்குப் போ... தங்கும் இடத்தை நான் ஏற்பாடு செய்கிறேன். நான் தாயாக இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதே .. ஐ.பி.எஸ்ஸாக திரும்பி வா'என்று கணவர் அம்பிகாவை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

முதல் முயற்சியில் தேர்வில் அம்பிகா தோல்வி அடைந்தார். தளராமல் கணவர் தந்த ஊக்கத்தில் இரண்டாம் முறை தேர்வு எழுதினாலும், மீண்டும் தோல்வி ஏற்பட்டது. மூன்றாம் முறையும் தோல்வி.

"முயற்சி செய்தோம்.. முடியல. ஊருக்கு கிளம்புவோம்' என்று கணவர் சொல்ல..."கடைசியாக ஒரு முறை எழுதி பார்க்கிறேன்' என்று அம்பிகா கெஞ்ச... கணவர் சம்மதம் தெரிவித்தார். அம்பிகா நான்காவது முறையாக ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத... ஐ.பி.எஸ்ஸாக தேர்வானார். 2008-இல் இது நிகழ்ந்தது .

ஆனால் , மும்பையில் வேலை . அங்கு காவல் பணியில் சேர்ந்த அம்பிகா பம்பரமாகச் செயல்பட, "பெண் சிங்கம்' என்று அழைக்கப்பட்டார். 2019 - இல் துணை கமிஷனர் ஆக பதவி உயர்வு பெற்றார். "லோக்மத் மஹாராஷ்ட்ரியன்' என்ற மாநில விருதினையும் பெற்றார்.

அம்பிகா மும்பை நகரின் நான்காம் பிராந்திய காவல் பொறுப்பாளராகப் பணிபுரிகிறார். விவரம் தெரியாத வயதில் திருமணம் செய்து கொண்டாலும், கொஞ்சம் பக்குவம் வந்ததும் தனக்கு ஏற்பட்ட சறுக்கலுக்காக யாரையும் குறை சொல்லாமல், சுதாரித்து கடுமையாக உழைத்து, கணவரின் ஒத்துழைப்புடன் தனது ஐ.பி.எஸ் கனவை நனவாக்கிய அம்பிகா, நிச்சயம் பெண் சிங்கம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com