கல்லூரி மாணவிகளின் தூரிகை தூறல்கள்! 

கத்தீட்ரல் சாலை வழியாகக் கடந்து செல்லும் அனைவரின் கண்களையும், கவனத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் தூரிகையின் தூறல்களால் அழகழகான வண்ணமிகு ஓவியங்களை வரைந்து பதியமிட்டுள்ளனர்
கல்லூரி மாணவிகளின் தூரிகை தூறல்கள்! 


கத்தீட்ரல் சாலை வழியாகக் கடந்து செல்லும் அனைவரின் கண்களையும், கவனத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் தூரிகையின் தூறல்களால் அழகழகான வண்ணமிகு ஓவியங்களை வரைந்து, பார்ப்பவர் மனதில் பதியமிட்டுள்ளனர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஓவியக் கலைப் பயிலும் மாணவிகள். இது குறித்து ஓவியக் கலைப் பிரிவின் துறைத் தலைவர் சுமித்ரா டாவ்சன் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் ஆரம்பத்தில் இந்த ஓவியங்களை வரையத் தொடங்கினோம். 3 ஆண்டுகள் இடைவெளியில் ஓவியங்களை வரைகிறோம். அந்த வகையில், தற்போது நான்காவது முறையாக வரைகிறோம். இதற்கு முன்பு 2017-இல் வரைந்திருந்தோம்.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கருத்துருவை அடிப்படையாகக் கொண்டு வரைவோம். அந்த வகையில், இந்த ஆண்டு தாவரங்களை கருத்துருவாக எடுத்திருக்கிறோம். காரணம், தாவரங்கள் சுற்றுசூழலுக்கு, மனிதர்களுக்கு, மிருகங்களுக்கு, இயற்கைக்கு என நமது உலகத்துக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த கருத்துருவை எடுத்தோம். இந்த ஓவியங்கள் எல்லாம் நமது இந்திய நாட்டுப்புற ஸ்டைலில் நவீனத்துவம் கலந்திருக்கும்படி இருக்கும்.

மேலும், வனத்தில் முதல் ஓவியம் தொடங்கி மாடித்தோட்டம், கிச்சன் கார்டன், பால்கனி தோட்டம், மேம்பாலங்களில் அமைந்திருக்கும் லேண்ட் ஸ்கேப் தோட்டங்கள், எங்கள் கல்லூரியில் வளர்க்கும் செடிகள், வீடுகளில் வளர்க்கும் செடிகள் என விவசாயம் வரை சுமார் 25 ஓவியங்களாக வரைந்திருக்கிறோம். மேலும், சென்னை நகரத்தின் அடையாளங்களாக கருதப்படும் ஆலமரம், கலங்கரை விளக்கம் , கடற்கரை போன்றவற்றையும் வரைந்துள்ளோம்.

இந்த ஓவியங்கள் அனைத்தையும் எங்கள் ஓவியக் கலைப் பிரிவு மாணவிகள் சுமார் 60 பேர் சேர்ந்து வரைந்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான கருத்துரு மட்டும் மாணவிகளிடம் கூறினோம். அதை வைத்து, டிசைனில் தொடங்கி என்னென்ன ஓவியம் வரைவது என்பது வரை அவர்களே தங்களுடைய ஆலோசனைகளை கூறினார்கள். அதிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மென்மையான வண்ணங்களால், பார்த்ததும் புரிந்து கொள்ளும் விதமாக வரைந்துள்ளோம். மேலும், இதில் பயன்படுத்தியுள்ள நிறங்களில் டெக்சர் கலர் பயன்படுத்தியிருக்கிறோம்.

அதுபோன்று, முதல் ஓவியத்தில் இருக்கும் வண்ணங்களில் இருந்து சில நிறங்களை வைத்து அடுத்த ஓவியம் இருக்கும். அதிலிருந்த சில நிறங்கள் அதற்கடுத்த ஓவியத்தில் இருக்கும் இப்படி முதல் ஓவியம் தொடங்கி, கடைசி ஓவியம் வரை வண்ணங்களின் தொடர்பு இருக்கும். இதனால், இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு, பார்ப்பதற்கு ஒரே மாதிரியான தோற்றத்தில் அழகாக இருக்கும்.

மேலும், இந்த ஓவியங்களில் சில நேராகப் பார்ப்பது போன்று இருக்கும், சில ஓவியங்கள் ஏரியல் வியூவில் இருக்கும், சில சைட் வியூ, டாப் வியூ என பல கோணங்களில் இருக்கும்.

எங்கள் மாணவிகள் அனைவரும், சிறு சிறு குழுக்களாக பிரிந்து கொண்டு, காலையில் 7.30 மணிக்கு தொடங்கி, மாலை 5.30 மணி வரை சுமார் 10 நாள்கள் வரை வரைந்துள்ளனர். மாணவிகளின் கடின உழைப்பால்தான் இவ்வளவு குறுகிய காலத்தில் இது எங்களுக்கு சாத்தியப்பட்டது.

தற்போது, இந்தப் பக்கம் சாலையைக் கடந்துச் செல்லும் பலரும் நின்று, இந்த ஓவியங்களைப் பார்ப்பதும், இதைப்பற்றி எங்களிடம் விசாரிப்பதும், புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் பார்க்கும்போது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மாணவிகளும் உற்சாகமாக இருக்கிறார்கள்'' என்றார்.

படங்கள்: ஏ.எஸ். கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com