கதை சொல்லும் குறள்: வாழ்க்கை... நிம்மதியாக... - 19

மணி காலை  பத்தாகி இருந்தது. நான்கு தெருக்கள் ஒன்று கூடும் இடத்தில் நடுநாயகமாக அமைந்திருந்தது அந்தக் கிருஷ்ணன் கோயில். அதனாலேயே அந்தப் பகுதி ஸ்ரீ கிருஷ்ணபுரம் என்று அழைக்கப்பட்டது.
கதை சொல்லும் குறள்: வாழ்க்கை... நிம்மதியாக... - 19

மணி காலை  பத்தாகி இருந்தது. நான்கு தெருக்கள் ஒன்று கூடும் இடத்தில் நடுநாயகமாக அமைந்திருந்தது அந்தக் கிருஷ்ணன் கோயில். அதனாலேயே அந்தப் பகுதி ஸ்ரீ கிருஷ்ணபுரம் என்று அழைக்கப்பட்டது. கோயிலைச் சுற்றியிருந்த நான்கு தெருக்களும், ஸ்ரீ கிருஷ்ணபுரம் ஒன்றாம் தெரு, இரண்டாம், மூன்றாம், நான்காம் தெரு என்றே அழைக்கப்படுகின்றன.

கிருஷ்ணன்  கோயிலின் நான்காம் தெருவில், கடைசியாக வலது பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது சுசீலாவின் வீடு. மூன்று கிரவுண்டு இடம். இரண்டு மாமரங்கள், நான்கு தென்னை மரங்கள், ஒரு சப்போட்டா மரம்  சூழ மாம்பலத்தில் இருந்தது.

சுசீலாவின் மாமனார் பெரிய ஆடிட்டராக இருந்து மறைந்தவர். அவர்வழி வந்த சொத்து இந்த வீடு. சுசீலாவின் கணவன் ரங்கராஜனும் ஆடிட்டிங் படிப்பைப் படித்துவிட்டு, அப்பாவின் வாடிக்கையாளர்களைப் பார்த்துக் கொள்வதுடன், தனக்கு என்று வரும் புதிய வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகளையும் கவனித்துக் கொள்கிறான். பிறகு என்ன, பென்ஸ் கார், பாங்கில் பெரும் ரொக்கம், வைர நகைகள், சொத்து சுகங்களுக்குச் சொல்லவா வேண்டும்.

சுசீலா ஏற்கெனவே அழகி, இரண்டு பிள்ளைகளைப் பெற்றவள் என்றால் எளிதில் நம்பமுடியாது. உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ள அளவான சாப்பாடு, ஜிம்முக்கு ரெகுலராகச் செல்வது என்று இருப்பாள். அதுவும் விசேஷங்களுக்குத் தன்னை நேர்த்தியாக அலங்கரித்துக் கொண்டு வீட்டை விட்டு இறங்கினால் போதும், எதிர் வீடுகளில் இருக்கும் பல பெண்களின் பொறாமைத் தீயில் எண்ணெயை வார்த்துவிட்டுப் பல ஆண்களின் ஏக்கப் பெருமூச்சை வெளியேறச் செய்துவிடுவாள்.

சுசீலாவின் வீட்டின் எதிரில் அவள் வீட்டைப் பார்த்தவாறு அமைந்திருந்தது, நான்கு அடுக்குகளைக் கொண்ட அந்த பிளாட்டின் கீழ் அடுக்கில் குடியிருந்தாள் மாலதி. நடுத்தரக் குடும்பம் என்ற வகையைச் சார்ந்தவள். கணவன் கோபாலன் ஒரு பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கிறான். வருகிற வருமானத்தில் பாதி வாடகைக்கே போய்விடுகிறது. மீதியை வைத்துக் கொண்டு குடும்பத்தையும், ஒரே மகனின் படிப்புச் செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சர்வ சதா காலமும் நோயில் கிடக்கும் மாமியார், அவருக்கான மருத்துவச் செலவு.  எல்லாவற்றிற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்வீட்டு சுசீலாவைப் பார்க்கும் பொழுது எல்லாம் மாலதி பெருமூச்சு விடுவாள்.

அந்தப் பிளாட்டின் முதல் அடுக்கில் இருக்கும் மனோகரி, சீர்காழி என்ற ஊரைச் சேர்ந்தவள். சென்னைப் பெரு நகரத்து வாழ்க்கை முறை அவளுக்குப் புதுசு. கல்யாணமாகி ஒரு வருடம் தான் ஆகிறது. அவளின் கணவன் மாம்பலத்தில் உள்ள ஒரு பிரபலமான துணிக்கடையில், சேல்ஸ் மேனேஜராக வேலை பார்க்கிறான். மீதி இரண்டு அடுக்குகளில் உள்ளவர்கள் எல்லாம் வடநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனால் மனோகரியும், மாலதியும் சிநேகிதிகள் ஆயினர்.

பரபரப்புடன் தன் பிளாட்டிலிருந்து, கீழே இறங்கி ஓடி வந்தாள் மனோகரி. மாலதியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.

மணி பகல் பன்னிரண்டைத் தாண்டி இருந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, சோபாவில் படுத்துத் தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சீரியலைப் பார்த்தபடி இருந்த மாலதி அப்படியே உறங்கிப் போய் இருந்தாள். அழைப்பு மணியைக் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்து எழுந்துச்  சென்று கதவைத் திறந்தாள்.

""மாலதி அக்கா, தூங்கிட்டீங்களா? நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?''

""அதான் பண்ணிட்டியே, உள்ளே வா உட்காரு, ஏன் இப்படி அரக்கப் பரக்க ஓடியாந்த?''

""ஐயோ, என்னத்தச் சொல்வேன். எதிர் வீட்டு மகாராணி அதான் சுசீலா அக்கா இப்பத்தான் கார்லே ஏறிப் போறா. ஏதோ விசேஷத்துக்குப் போறாப்போல இருக்கு. அவ தளுக்கும், மினுக்கும், அப்படியே வைரத்துலே முழுகி எழுந்தவ மாதிரி...''

""ஏய் மனோகரி, சொல்ல வந்ததைச் சரியாச் சொல்லும். உடம்பு முழுக்க விளக்கெண்ணெயை தடவிக்கிட்டு வைரத்தில புரண்டு எழுந்தாப்போலன்னு சொல்லு.''

""ஆமாக்கா, அதுபோலத்தான். அவளுக்கு என்னாடி, கொடுத்து வெச்சவ, புருஷன் கோடியிலே சம்பாதிக்கிறான். அதான் வைரத்திலே புரள்றா.  நம்மைப்போல அன்றாடங்காய்ச்சியா அவ.''

""ஆமாக்கா, நீ சொல்லுவது சரிதான். சும்மா புருவத்தைச் சீர் செய்யறதுக்காகப் பக்கத்துலே இருக்கிற அழகு நிலையத்துக்குப் போனேன், அங்கே சுசீலாக்கா வந்திருந்தாங்க. முகத்துக்கான ஸ்பெஷல் சிகிச்சையாம். அதைச் செய்யறதுக்கு மாசாமாசம் வந்துடுவாங்களாம். கால்லே, கையிலே இருக்கிற நகம் தொடங்கி, அழகுப் படுத்திப்பாங்களாம். இது தவிர பாடி மசாஜ் வேறே, அப்படி இப்படின்னு மாசத்துக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் தன்னை அழகுப்படுத்திக்கச் செலவு செய்வாங்களாம்.''

""ஆங், இது என்னடி அநியாயமா இருக்கு. அப்ப ஜிம்முக்குப் போறாளே அதையும் சேர்த்தா, செலவு எகுறுதே! தோளுக்கு மேலே வளர்ந்த புள்ளைங்க. அதுலே ஒன்னு கல்லூரிக்குக் கூடப் போக ஆரம்பிச்சாச்சு.''

""என்ன சொல்லறீங்க அக்கா?''

""ஆமாண்டி, பூக்காரி பொன்னம்மா சொல்லித்தான் எனக்கே தெரியும். புருஷனுக்குத் தலையிலே சொட்டை விழுந்தாச்சு, தொப்பையும் போட்டுட்டாரு. இவ மட்டும் இளங்குமரியாட்டம் வலம் வரா. யாரை மயக்க என்று தெரியலை.''

அன்று காலை மணி பத்து. கிருஷ்ணன் கோயிலில் அதிகக் கூட்டம் இல்லை. கடந்த மூன்று மாதங்களாகவே சென்னையைத் தண்ணீர்ப் பஞ்சம் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. மாலதி குடியிருந்த பிளாட்டில் சுத்தமாகப் பூமித் தண்ணீர் வற்றிவிட்டது. லாரித் தண்ணீருக்குப் போன் செய்தால்கூட, அது வர ஒருவாரம் ஆனது. வேறுவழி, காலை நான்கு மணிக்கே எழுந்து வீட்டுத் தேவைக்காக லொங்கு, லொங்கு என்று கைப்பம்பை அடிக்க வேண்டியிருந்தது.
மனோகரிக்கும் அதே நிலைதான். மாலதியாவது மாடி ஏற வேண்டாம். மனோகரி இடுப்பில் குடத்துடன் ஏறுகிறாள். மீதி இரண்டு அடுக்குகளிலிருக்கும் வடநாட்டுக்காரர்கள்  சிறிது வசதியானவர்கள், ஆட்களுக்குப் பணம் கொடுத்துத் தண்ணீரைச் சுமந்துவரச் செய்கிறார்கள்.

""என்னம்மா மாலதி சோர்வாய் இருக்கே'', அக்கறையுடன் கேட்டார் கிருஷ்ணன் கோயில் குருக்கள்.

""என்னத்த சொல்லறது குருக்களையா, எல்லாம் தலைவிதி, ஏழை வாத்தியாருக்கு வாழ்க்கைப்பட்டா, பம்புலே தண்ணி அடிச்சுதானே ஆகனும்.''
மாலதி இதைச் சொல்லி முடிச்ச சமயம், சுசீலா கையிலே பூக்கூடையோட கிருஷ்ணன் சந்நதி முன்னே வந்து நின்றாள்.

ஒவ்வொருத்தர் மாதிரியா, தண்ணிப் பஞ்சம் வந்தா என்ன? வசதியா கொழிக்கறாங்க, லாரியிலே தண்ணீரை வாங்கி சம்ப்பை நிரப்பிக்கறாங்க. அவங்களுக்கு மட்டும் போன் செஞ்சாத் தண்ணி வருது. பாருங்களேன் தினுசுக்கு ஒரு புடவையாக் கட்டிக்கிட்டு மினுக்கறாங்க, நம்பளச் சொல்லுங்க.
பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வெறுப்பு உமிழும் கண்களைக் கொண்டு சுசீலாவை உற்றுப் பார்த்தபடி மாலதி திரும்பி நடந்தாள்.

சுசீலா அதிர்ந்து நின்றாள். அந்தப் பெண் தன்னைத்தான் சொல்கிறாள் என்பது அவளுக்குப் புரிந்து போனது. ஏனெனில் கிருஷ்ணன் சந்திதியில் அந்தச் சமயம் வேறு யாருமே இல்லை. தன் வீட்டில்தான் லாரியில் தண்ணீர் வாங்கப்படுகிறது. தண்ணீர் லாரிகளைக் கொண்டு, தண்ணீரைச் சப்ளை செய்யும் சலீம் வாட்டர் சப்ளையர்ஸின் முதலாளி தன் கணவரின் வாடிக்கையாளராக இருப்பதனால்தான், போன் செய்ததுமே தண்ணீர் உடனே கிடைக்கிறது.

சுசீலாவின் முகவாட்டம் கோயில் குருக்களின் மனதைப் பச்சாதாபத்தினால் கரைய வைத்தது. பணக்காரியாக இருந்தாலும் சுசீலா மிக நல்லவள். யாரையும் அவமதித்ததில்லை. கடந்த இருபத்தைந்து வருடங்களாக இந்தக் கோயிலில் குருக்களாக வேலை பார்க்கிறார். முதல் முதலாக சுசீலா புதுமணப் பெண்ணாக, தன் கணவருடன் கோயிலுக்கு வந்தது முதல், இதோ இன்று இங்கே முகம் கருத்து நிற்பதுவரை கவனித்துக் கொண்டுதான் வருகிறார், அவள் யாரையும் பற்றிப் பேசியதும் இல்லை, அவமானப் படுத்தியதும் இல்லை.

""அம்மா, சுசீலா''

""என்ன ஐயா-?''

""நீங்க மனசு வருத்தப்படாதீங்க. இதோ இப்ப வந்துபோனாளே மாலதி, அவ உங்க வீட்டுக்கு எதிரிலேதான் குடியிருக்கிறாள். நீங்க அவள் வம்புக்குப் போனதில்லை. ஆனால் அவளுக்கு உங்களைப் பற்றி வம்பு பேசுவதுதான் வேலை. எல்லாம் வயிற்றெரிச்சல். 

நீங்க நன்றாக வாழறது அவளாலே பொறுக்க முடியலை. இங்க கோயிலுக்கு சாமி கும்பிடவா வரா, அக்கம்பக்கத்துலே உள்ளவங்களைப் பற்றிக் குறை பேசறதுதான் அவளுடைய முக்கிய வேலை. அதுவும் உங்களைப் பற்றிப் பேசறது அவளுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. அவள் புருஷன் மிகவும் நல்லவன், அவனுக்கு இப்படி ஒரு பொண்டாட்டி.''

""நான் சொன்னா நீங்க தட்டாமல் ஒன்னைச் செய்யணும்.''

""சொல்லுங்க.''

""வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை என்று பூசணிக்காயை வாங்கி குடும்பத்தோட நின்னு சுத்திப் போட்டுக்கோங்க. அந்தப் பூசணிக்காயை அந்த மாலதியின் வீட்டுக்கு எதிரே போட்டு உடையுங்க. அப்பத்தான் அந்த பொறாமைக்காரியின் கண் திருஷ்டி உங்கக் குடும்பத்தைப் பாதிக்காது. என்ன, நான் சொல்லறதை அலட்சியமா எடுத்துக்காதீங்க.''

""அப்படியே செய்யறேங்க.'' மாலதி போய்விட்டாள் என்று எண்ணி குருக்கள் சொன்னதை எல்லாம், கோயில் பிரகாரத்தைச் சுற்றி வரும்பொழுது, மாலதி என்று தன் பெயர் அடிபடுவதைக் கேட்டு நின்றவளின் காதுகளில் விழுந்துவிட்டது.

நடுவீதியில், துகில் உரியப்பட்டவள் நிலையை அடைந்தாள், இனியாவது அவள் மாறுவாளா?

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் 
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?

(குறள் எண் 190)

பொருள் :

பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும், வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com