வாழ்க்கையை இனிமையாக்கிய தேனீ

பள்ளிக்கூடத்தை  எட்டிக் கூடப் பார்க்காத  மஞ்சுளாவை ஆண்டிற்கு இருபது லட்சம் வருமானம் ஈட்டும்  தொழில் முனைவராக உயர்த்துள்ளார் என்று சொன்னால் நம்புவீர்களா?
வாழ்க்கையை இனிமையாக்கிய தேனீ

பள்ளிக்கூடத்தை எட்டிக் கூடப் பார்க்காத மஞ்சுளாவை ஆண்டிற்கு இருபது லட்சம் வருமானம் ஈட்டும் தொழில் முனைவராக உயர்த்துள்ளார் என்று சொன்னால் நம்புவீர்களா? ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பக்கத்தில் இருக்கும் கொளப்பலூர்தான் மஞ்சுளாவின் சொந்த ஊர்.

"தேனீ வளர்ப்பதால் கிடைக்கும் தேன் எனது வாழ்க்கையையே இனிமையாக்கிவிட்டது'' என்று சொல்லும் மஞ்சுளா, தனக்கும், கணவர் பார்த்திபனுக்கும் சொந்தமான வயலில் தேனீக்களை வளர்த்து தேன் சேகரித்து விற்பதுடன் தான் கற்றதை பயிற்சி வகுப்புகள் நடத்துவதன் மூலம் அநேகருக்கு தேன் வளர்ப்பில் பயிற்சி கொடுப்பதுடன் அவர்களைத் தொழில் முனைவர்களாகவும் மாற்றியுள்ளார்.

மஞ்சுளா தொழில் முனைவராக மாறியது குறித்து மனம் திறக்கிறார்:

"கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், தேசிய தேனீ வாரியம், வேளாண் அறிவியல் நிலையம் வழங்கும் யுக்திகள் ஆலோசனைகள் என்னை வழிநடத்திச் செல்கின்றன. "மஞ்சரி ஹனி' நிறுவனத்தின் மூலம் தேன் விற்பனை செய்து வருகிறேன். தேன் விற்பனை வழக்கம் போல நடந்து கொண்டிருந்தாலும் தேன் ஹல்வா, தேன் கேக், தேன் பிஸ்கட், தேன் ஜெல்லி, தேன் நெல்லி சீவல் போன்ற மதிப்புக் கூட்டிய பொருள்களைத் தயாரித்து விற்பனையும் செய்து வருகிறேன்.

தேன் ஹல்வாவுக்கு எனது செய்முறை இதுதான்: அரை கிலோ தரமான கோதுமையை அரவையில் போட்டு உடைத்து சுமார் எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பிறகு கையால் ஊறிய கோதுமையை அழுத்தி பிசைய வேண்டும். அப்படிப் பிசையும் போது, ஊறிய கோதுமையிலிருந்து பால் வெளிவரும். கோதுமைப் பாலை வடிகட்டி எடுத்து கொஞ்ச நேரம் தெளியவிட வேண்டும். சிறிது நேரத்தில் கெட்டி கோதுமைப்பால் அடியில் தங்கிவிட, தண்ணீர் மேலாக நிற்கும். அந்தத் தண்ணீரை வடித்து எடுத்துவிட்டு கெட்டியான கோதுமைப் பாலை பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் வைத்து சூடாக்கிக் கிண்ட வேண்டும். அவ்வப்போது நெய் சேர்க்க வேண்டும். முக்கால்வாசி ஹல்வா "கொழ கொழ' பதத்திற்கு வந்தவுடன், அரை கிலோ தேனை சேர்த்து கிண்ட வேண்டும். வறுத்த முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளலாம். முழுப்பதம் வந்ததும் நெய் தேய்க்கப்பட்ட பரந்த தட்டில் ஹல்வாவைப் பரப்பி துண்டு துண்டாக வெட்டி எடுக்கலாம். தேன் ஹல்வாவை சர்க்கரை நோயாளிகளும் சுவைக்கலாம்.

புகையிலை, ஹான்ஸ், குட்கா, பான் மசாலா பயன்படுத்துபவர்களுக்கு மாற்றுப் பொருளாக தேன், நெல்லி, சீவல், பாக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி மெலிதாகச் சீவி அதில் மிளகாய் பொடி, உப்பு, மிளகுப் பொடி, பெருங்காயம் சேர்த்து கலந்து காய வைக்கவேண்டும். நன்கு உலர்ந்ததும் தேனில் ஊற வைத்து பிறகு நிழலில் உலர வைக்க வேண்டும். இந்தச் சீவலை பாக்கு மாதிரி மென்று சாப்பிடலாம்.

"புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த வேண்டும்' என்று எண்ணம் வரும் பொது இந்தச் சீவலைப் பயன்படுத்தினால் போதும். புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதைப் படிப்படியாக விட்டுவிடலாம்'' என்கிறார் மஞ்சுளா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com