பெண்ணாக பிறப்பதே வரம்!

""உலகில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி கடந்துப் போக வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கிறது''
பெண்ணாக பிறப்பதே வரம்!


""உலகில் நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி கடந்துப் போக வேண்டிய சூழ்நிலை கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கிறது'' என்கிறார் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் சரண்யா ஜெய்குமார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து  கூறியிருப்பதாவது:

""பொதுவாக, பெண் பிள்ளையாக பிறப்பதே ஒரு வரம் தான் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். சலவைத் தொழில் செய்யும் சமூகத்தில் இருந்து வந்தவள் நான். இன்னும் எங்களுடைய அனைத்து உறவினர்களும் இத்தொழிலை விடாமல் செய்து வருகின்றனர். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் எங்களுடைய சொந்த பந்தங்களில்  பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு அதற்கு மேல் முனைவர் பட்டம் வாங்கிய முதல் நபரும் நான் தான். அந்த முனைவர் பட்டம் என்பது தென்னிந்தியாவில்; கல்வி உளவியலில் முதல் பெண் என்ற பெருமையை எனக்குத் தேடித் தந்தது. இன்றைக்கு திருமணம் முடிந்து நல்ல நிலையில் இருந்தாலும் அப்பாவும், ஆசிரியர்களும் தந்த இந்த கல்வியால் தான் எனக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை ஆணித்தரமாக என்னால் சொல்ல முடியும். ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று நாம் பாடத்தை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை, வாழ்க்கையும் சேர்த்துக் கற்றுக் கொள்கிறோம். அந்த வாய்ப்பு எல்லா பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. 

இந்தியாவின் மக்கள் தொகையில் 52சதவீதம் ஆண்கள், 48சதவீதம் பெண்கள். ஆனால் இந்த 48சதவீதத்தை நாம் முழுமையாக பயன்படுத்துகிறோமா என்று யோசித்துப் பார்த்தால் இல்லை என்பது தான் பதில். இதற்கு காரணம் கல்வி என்கிற திறவுகோல் சரிசமமாக நமக்கு கிடைக்கவில்லை. மக்கள் தொகை குறைந்த நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் பெண்கள் சரி சமமாக இருக்கிற நாடுகளில் பங்களிப்பு குறைகிறது. இந்த பின்னடைவு எங்கே இருந்து தொடங்கப்படுகிறது என்று ஆராய வேண்டும். 

இந்த 48சதவீத பெண்களுக்கும் முழுமையாக கல்வி கிடைத்திருந்தால், நமது தேசம் மற்ற நாடுகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கியிருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. சிலர் நன்றாக படித்திருந்தாலும் வேலை வாய்ப்புகள் குறைகிறது என்று கூட நினைக்கலாம். சில சமயங்களில் வேலை கிடைக்காமலே திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்து விடுகிறது. அப்படிப்பட்ட சூழலில் ஒரு வேலை வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக உங்களுடைய வீட்டுக் கதவை தட்டும். ஆனால் சிலர் குழந்தையை கவனிக்க வேண்டும், மாமனார்-மாமியாருக்கு உணவுகள் சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரும் வேலை வாய்ப்பை தட்டி விடுகிறார்கள். ஆனால் அது தான் நீங்கள் செய்யும் முதல் தவறு. கிடைக்கிற வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது. 

சில வீடுகளில் மருமகளுக்கு வேலை கிடைத்தவுடன் மாமியார் மகிழ்ச்சியடைந்தோ அல்லது வீட்டின் பணிப்பெண் மகிழ்ச்சியடைந்தோ நீ வேலைக்குப் போம்மா நான் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறேன். சமைத்து வைக்கிறேன். அப்படி சொல்பவர்களுக்கு 1அல்லது 2மாதங்களுக்கு ஒருமுறை அவர்களை கட்டிப்பிடித்து அன்புகளை பரிமாறிக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஏதாவது பொருட்களை அன்பளிப்பாக வழங்குங்கள். அது வாழ்வின் கடைசி வரைக்கும் நிலைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் சண்டை வராது, வேண்டாத வார்த்தைகள் வராது, பாசங்கள் மட்டுமே அதிகரிக்கும். பொதுவாக ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் திட்டமிட்ட குறிக்கோள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த குறிக்கோள் என்பது எந்த வயதிலும் வரலாம். சில நபர்கள் சொல்வார்கள் என்னுடைய இளமைப் பருவத்தை முடித்துவிட்டேன். இனிமேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என புலம்புவார்கள் ஆனால் குறிக்கோள் என்பது அது கிடையாது.

ஏனென்றால் 60வயதில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் அந்த நீரிழிவு நோயை தன்னுடைய நடைப்பயிற்சி மூலம் முற்றிலும் குணப்படுத்துகிறார் என்றால் அதுவும் ஒரு குறிக்கோள் தான் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். 

ஒரு குறிக்கோள் என்பது பெட்ரோல் மாதிரி, ஓடுகிற வண்டியில் பெட்ரோல் இல்லை என்றால் நின்றுவிடும். ஆனால் அதை நிறுத்தாமல் ஓட்டுவதற்கு பெட்ரோலை ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும். 

என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு ஆண் மகன் என்பவன் ஒரு சுவரைப் பார்த்துக் கொண்டு எத்தனை நாள்கள் என்றாலும் இருக்க முடியும். ஆனால் பெண்ணால் அப்படி இருக்க முடியாது.  ஏùன்னறால் நம்முடைய கற்பனை என்பது வேறு, ஆண்ணின் கற்பனை என்பது வேறு ஆகவே ஓடுங்கள் அது தான் உங்களுடைய வெற்றி பாதை'' என்கிறார் சரண்யா ஜெய்குமார். 

மகளிர் கருத்தரங்கில் பேசியதிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com