ஒலிம்பிக்: தமிழ்நாட்டு வீராங்கனை!

கால்பந்து, ஹாக்கி, வாலிபால், டென்னிஸ், தடகளம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளின் வரிசையில் ஒலிம்பிக் போட்டிகளில் 19-ஆம் நூற்றாண்டு முதலே இடம் பெற்று வருகிறது ஃபென்சிங் எனப்படும் வாள்வீச்சு போட்டி.
ஒலிம்பிக்: தமிழ்நாட்டு வீராங்கனை!

கால்பந்து, ஹாக்கி, வாலிபால், டென்னிஸ், தடகளம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளின் வரிசையில் ஒலிம்பிக் போட்டிகளில் 19-ஆம் நூற்றாண்டு முதலே இடம் பெற்று வருகிறது ஃபென்சிங் எனப்படும் வாள்வீச்சு போட்டி. முதன்முதலில் ஐரோப்பாவில் பின்பற்றப்பட்ட இந்த விளையாட்டில் மூன்று வகைகள் என ஃபாயில், சாபேர், எப்பி என வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் லாúஸனை தலைமையிடமாகக் கொண்ட எஃப்ஐஇ எனப்படும் அமைப்பு உலகளவில் இந்த விளையாட்டை நிர்வகித்து வருகிறது. உலகக் கோப்பை, ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், கண்டங்கள் அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. ஐரோப்பிய, ஆசிய நாடுகள் இந்த விளையாட்டில் சிறப்புற்று விளங்குகின்றன.

ஃபாயில், சாபேர், எப்பி எனப்படும் மூன்று வகையான பிரிவுகளிலும் வெவ்வேறு வகையான வாள்கள், விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஃபென்சிங் விளையாட்டில் பங்கேற்போருக்கு தனியாக வெள்ளை நிறத்திலான உடை, கவச உடைகள், கையுறைகள் உள்ளன.

இந்தியாவிலும் வாள்வீச்சு விளையாட்டு சிறிது சிறிதாக பிரபலமடைந்து வருகிறது. தமிழகத்தின் சி.ஏ. பவானிதேவி, கபிதா தேவி, குமரேசன் ஆகியோர் 
ஓரளவு பிரபலமானவர்களாக திகழ்கின்றனர். இதில்  2021  டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு  தகுதி  பெற்று இந்தியாவின் முதல் வாள்வீச்சு வீராங்கனை என்ற சாதனையை  நிகழ்த்தியுள்ளார்  தமிழகத்தின்  பவானி தேவி.

சென்னையைச் சேர்ந்த மத்திய தர குடும்பத்தில் 1993-இல் பிறந்த பவானி தேவியின் தந்தை கோயில் அர்ச்சகர் ஆவார். 2003-இல் தனது 10-ஆவது வயதில் வாள்வீச்சு ஆட்டத்தில் பயிற்சி பெறத் தொடங்கிய பவானி தேவி, 10-ஆம் வகுப்பு நிறைவில் கேரள மாநிலம் தலச்சேரியில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். 14 வயதில் துருக்கியில் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியில் 3 நிமிடங்கள் தாமதமாகச் சென்றதால், கருப்பு அட்டை பெற்ற பவானி, 2010-இல் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார். தேசிய சாம்பியன் பட்டத்தை 8 முறை வென்றவர் பவானி.

தொடர் வளர்ச்சி: தொடர்ந்து தீவிர பயிற்சி, விடாமுயற்சியால் வாள் வீச்சில் பவானிதேவியின் செயல்பாடு மேலும் வளர்ச்சி பெற்றது. பல்வேறு சர்வதேச போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற அவருக்கு சிறப்பு பயிற்சி பெற முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் வழங்கி ஊக்குவித்தார். பின்னர் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட்டின் கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் விளையாட்டு வீரர்கள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 15 பேரில் ஒருவரானார் பவானி.

2021-இல் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கம் வென்றார். அதன் பின் நடைபெற்ற கடினமான சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பவானி, 2020-இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தரப்பில் தகுதி பெறுவார் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டன. கடந்த 2019-இல் கான்பெர்ராவில் நடைபெற்ற சீனியர் காமன்வெல்த் பென்சிங் போட்டியில் தங்கம் வென்றார் பவானி.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை: 

வரும் ஜூலை 23-ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில் பவானி தேவி ஒலிம்பிக் போட்டிக்கும்  தகுதி பெற்றுள்ளார். குறிப்பாக புடாபெஸ்டில் நடைபெற்ற ஃபென்சிங் சாபேர் உலகக் கோப்பை போட்டி காலிறுதியில் கொரியாவிடம் தோல்வியுற்றது ஹங்கேரி அணி. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஃபென்சிங் சாபேர் பிரிவில் மொத்தம் உள்ள 34 தனிநபர் இடங்களில் குழுப் போட்டிகள் மூலம் வீரர்கள் தேர்வு பெறுகின்றனர்.

இரண்டு இடங்கள் ஆசிய வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரிடத்துக்கு தகுதி பெற்றார் பவானி தேவி.

42-ஆவது இடம்: தற்போது உலக தரவரிசையில் பவானி தேவி 42-ஆவது இடத்தில் உள்ளார்.  இத்தாலியின் லிவோர்னோ நகரில் சிறப்பு பயிற்சி பெறும் பவானி தேவி, கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை தவற விட்டது குறிப்பிடத்தக்கது. வகுப்புகளை தவிர்க்க வாள்வீச்சை தேர்வு செய்தேன்.

இதுகுறித்து பவானி தேவி கூறியுள்ளதாவது:

பள்ளியில் பயிலும் போது வகுப்புகளைத் தவிர்க்கலாம் என்பதற்காக நான் ஃபென்சிங் விளையாட்டில் சேர்ந்தேன். முதலில் எனக்கு 6 விளையாட்டுகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டது. அனைத்திலும் பிறர் சேர்ந்து விட்டதால், ஃபென்சிங்கில் சேர்ந்தேன். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியே எனக்கு இதில் உத்வேகத்தை தந்தது.

அதிக விலை உயர்ந்த உபகரணங்கள், செலவு போன்றவற்றால், இந்த விளையாட்டில் இருந்தே விலகி விடலாம் என கருதினேன். கோ ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் உதவித் தொகை கிடைக்காவிட்டால், வீட்டுக்கே திரும்பி விடலாம் எனக் கருதினேன்.

மறக்க முடியாத அனுபவம்: கடந்த 2017-இல் ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை சாப்ரே பிரிவு போட்டியில் தங்கம் வென்றது மறக்க முடியாத அனுபவமாகும்.

எனது வாழ்க்கையில் இத்தகைய சிறப்பான இடத்தை பெற ஊக்கம் தந்தவர் தாய் ரமணி.  ஒரே நாளில் வெற்றி கிடைத்து விடாது. நாளும் ஆடும் விளையாட்டில் ஈடுபாடு கொண்டு, தொடர்ந்து கடினமாக பாடுபட வேண்டும்.

தங்கப் பதக்கம் இலக்கு: ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வதே எனது அடுத்த இலக்காகும் என்ற பவானி தேவி, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் பெற்றவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com