ஒரே சமூகம், கூட்டுத் தொழில்!

மதுரை சின்ன சொக்கிக் குளம் பகுதியில் உள்ள  "சீஸ் கார்னர்' என்ற  இடத்தில் பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக   இணைந்து  பெண்களுக்காக "யாதும்' என்ற  சந்தை ஒன்றை தொடங்கியுள்ளனர்.  
ஒரே சமூகம், கூட்டுத் தொழில்!


மதுரை சின்ன சொக்கிக் குளம் பகுதியில் உள்ள "சீஸ் கார்னர்' என்ற இடத்தில் பெண்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து பெண்களுக்காக "யாதும்' என்ற சந்தை ஒன்றை தொடங்கியுள்ளனர். முழுக்க முழுக்க பெண்களே இணைந்து பெண்களால் நடத்தப்படும் இந்த சந்தை குழுவின் பின்னணியில் மொத்தம் 8 பெண்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான கௌரி ஸ்ரீ நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""மதுரை எனது சொந்த ஊர். துணிப்பை தயாரிப்பு எங்களுடைய தொழில். சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக அரசு, பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்தபோது, எங்களுக்கு துணிப்பையின் வியாபாரம் சூடு பிடித்தது. மக்களிடம் இருந்து நிறைய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, எங்களது முகநூல் பக்கத்தின் மூலம் நிறைய நட்பு வட்டம் உருவாகிவந்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து தொழில்களும் முடங்கிப்போனதில் பெரும்பாலானோர் வேலையிழந்து அவரவர் சொந்த ஊர்களுக்கே திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதுபோன்று முகநூல் தோழிகளான சென்னையில் இருந்த காமினி, உஷா, மீரா மூவரும் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்திருந்தனர். அதேப்போன்று, திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இன்னொரு தோழியான இசை அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார்.

எனவே, அனைவரும் மதுரைக்கு வந்து விடுங்கள், ஒன்று சேர்ந்து ஏதாவது தொழில் தொடங்குவோம் என்றேன். அவர்களுக்கும் அது பிடித்திருக்கவே, அனைவரும் அவர்களது குடும்பத்துடன் மதுரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

இப்போது நாங்கள் அனைவரும் ஒரே பகுதியில் ஒரே சமூகமாக மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

எனது வார்த்தையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஊரை காலி செய்து கொண்டு வருவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. நம்பி வந்தவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது.

அதேசமயம், இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள். காமினி சமையல் கலையிலும் கிராப்ட் பொருள்கள் தயாரிப்பில் திறமை மிக்கவர். உஷா குழந்தைகளுக்கான லைப் ஸ்கீல் பயிற்றுநராக இருக்கிறார். கோர் - இல் பணியாற்றியவர். இதுவரை 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பழக்க வழக்கங்களை மாற்றி நல்வழிபடுத்தியிருக்கிறார்.

எனவே, ஒவ்வொருவரின் திறமையை வெளிப்படுத்தும் வகையிலும், அதே சமயம் சுற்று சூழல் பாதிக்காத வகையில் மக்களுக்கு ரசாயன கலப்பில்லாத பொருள்களை கொண்டு சேர்க்கவும் முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் "யாதும்' சந்தை. எங்களுடன், கோவில்பட்டியில் பேக்கரி தொழில் நடத்தி வரும் சரண்யா, திருச்சியை சேர்ந்த செங்கா, மதுரையை சேர்ந்த சத்யாவும் இணைந்தனர்.

இந்த சந்தையைப் பொருத்தவரை மளிகைப் பொருள்கள்தான் பிரதானமாக இருக்கும்.

இதற்காக பாரம்பரிய முறையில் விவசாயம் செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து, பயிறு வகைகள், எண்ணெய் வகைகள், அரிசி வகைகள், காய்கறிகள் என கொண்டு வந்தோம். இதில் பொருள்களை வாங்க வரும் மக்கள், நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்தே பொருள்களை வாங்குவதால், குறைவான விலையில், தரமான பொருள்கள் அவர்களுக்கு கிடைக்கின்றது.

பிப்ரவரி 21-இல் முதல் சந்தையை நடத்தினோம். அடுத்து மார்ச் -21-இல் இரண்டாவது சந்தையை நடத்தினோம்.

இந்த 2-ஆவது சந்தையில், வெளியூர்களிலிருந்தும் எங்களுடன் பலர் கலந்து கொண்டனர். உதாரணமாக, பெங்களூரில் வசிக்கும் மகேஷ் என்பவர் சுற்றுசூழல் பாதிக்காத வகையில், குறைந்த செலவில் "ஈகோ பில்டிங்' கட்டடங்களை கட்டித் தருகிறார். பின்னர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தும்பி அமைப்பினர், ஈரோட்டில் ஆர்கானிக் வேட்டியும், சேலையும் நெசவு செய்யும் நூற்பு குழுவினர், பிறந்த குழந்தைகளுக்கான ஆர்கானிக் துணி வகைகள் தயாரிக்கும் அம்பரம் அமைப்பினர், வறுமைக்கோட்டில் இருக்கும் பெண்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கித் தரும் டெடி அமைப்பினர் (இவர்கள் இதுவரை 400-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளனர்) இப்படி பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த சந்தையில் கிச்சன் கார்டனிங் குறித்த விழிப்புணர்வு, இயற்கை சாயம் பூசப்படும் துணிப்பையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு, குழந்தை பருவத்திலேயே தொழில்கள் குறித்து புரிதல் ஏற்படுத்தும் வகையில், குழந்தை தொழில் முனைவோர்களை அறிமுகப்படுத்தினோம். இந்தக் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உதவியுடன் தாங்கள் தயாரித்த பொருள்களை அவர்களே விற்பனை செய்ய வழி வகுத்துக் கொடுத்தோம். இதில் பீட்ரூட் ஜாம், பழத்தில் தயாரிக்கப்பட்ட ஜாம், அரைத்த மருதாணி இலைகளின் கூழ் , பீநட் பட்டர் ஜாம், போன்ற பொருள்களை இவர்கள் சந்தைப்படுத்தினார்கள்.

இதில் எங்களுக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது என்று சொல்ல முடியாது. அதே சமயம், முழுக்க முழுக்க மனநிறைவை கொடுத்திருக்கிறது.

அடுத்த சந்தையில் குழந்தைகளுக்கான பழங்கால விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். ஒரே சமூகம், கூட்டுத் தொழில் இதுதான் எங்களது தாரக மந்திரம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com