காளான் வளர்ப்பில் பெண்கள்!

 குடகு மாவட்டம் செய்யன்டனே கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா அச்சய்யா(35) வுக்கு சிறுவயது முதலே சுயமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும்
காளான் வளர்ப்பில் பெண்கள்!

 குடகு மாவட்டம் செய்யன்டனே கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா அச்சய்யா(35) வுக்கு சிறுவயது முதலே சுயமாக ஒரு தொழிலை செய்ய வேண்டும். மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. பட்டப் படிப்பை முடித்த கையோடு திருமணமாகி குடும்பத்தையும், வீட்டு வேலைகளையும் கவனித்து வந்த அம்பிகா, பத்தாண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய ஆர்வத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன்பு வானொலி நிகழ்ச்சியொன்றில் காளான் வளர்ப்பு பற்றியும் எப்படி லாபமடைவது என்பது குறித்தும் இலவசமாக பயிற்சியளிக்கும் தகவலை கேட்க நேர்ந்தது.
 விசாரித்ததில் இவர் வசித்து வந்த இடத்திலிருந்து 60.கி.மீ. தொலைவில் கோணி கொப்பா என்ற ஊரிலுள்ள கிருஷி விக்யானா கேந்திராவில் (கே.வி.கே) தேசிய திறமை வளர்ச்சிக் கழக திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பற்றி இலவசமாக பயிற்சியளிப்பதை கேட்டறிந்தார். முதலில் ஒரு நாள் பயிற்சியாக இருக்குமென்று நினைத்த அம்பிகாவுக்கு 25 நாள் பயிற்சி என்றவுடன் தயக்கம் ஏற்பட்டது. தினமும் சென்று வர முடியுமா? என்ற கவலைதான். ஆனால் கே.வி.கே விஞ்ஞானி டாக்டர் சோமசேகர் கொடுத்த நம்பிக்கையால் அங்கு சேர்ந்த அம்பிகா, ஆய்ஸ்டர் காளான் வளர்ப்பு பயிற்சியில் முழுமையாக கற்றறிந்து சான்றிதழ் பெற்றார்.
 காளான் வளர்ப்புக்கு அப்படியென்ன முக்கியத்துவம் ? காளான் தானே என்று குறைத்து மதிப்பிட வேண்டாம். காளான் வளர்ப்புக்கு தேசிய அளவில் இந்திய விவசாய திறமை கவுன்சில் ஆதரவளிப்பதோடு, சுய தொழில் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஊக்கமும் அளித்து வருகிறது.
 காளானில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான புரதசத்து, புரோட்டின், வைட்டமின்கள், நார்சத்து மற்றும் குறைவான கலோரியும் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் காளான்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. காளானை பயன்படுத்தி ருசியான உணவை தயாரிக்க நிறைய சமையல் குறிப்புகளும் அதிகரித்துள்ளன.
 இந்த காளான் வளர்ப்பு பயிற்சியில் தேர்ச்சிப் பெற்ற அம்பிகாவின் திறமையை கண்டறிந்த கே.வி.கே. நிர்வாகம் அவருக்கு தங்கள் பரிசோதனை கூடத்திலேயே ஆய்வாளர் பணியை அளித்தது. தற்போது ஆய்ஸ்டர் காளான் மட்டுமின்றி கூடவே பல்வேறு காளான்கள் வளர்ப்பு பற்றியும் ஆய்வு செய்து வருகிறார். சொந்தமாக காளான் வளர்ப்பு மையமொன்றையும் நிர்வகித்து வரும் அம்பிகா. விரைவில் பெரிய அளவில் வங்கி கடனுதவி பெற்று விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
 தன்னைப் போலவே சுய தொழிலில் ஆர்வமுள்ள பெண்களுக்கு கிருஷி விக்யானா கேந்திராவின் தேசிய திறமை வளர்ச்சி கழகம் நடத்தும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அறிவுரை வழங்குவதோடு பயிற்சியும் அளித்து வருகிறார். இதனால் மகளிர் கூட்டுறவு சங்கம், சுய தொழில் மகளிர் மையங்களைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி குடும்பப் பெண்களும் இவரிடம் பயிற்சிப் பெற்று காளான் வளர்ப்பில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதோடு, தொழில் முனைவோராகவும் விளங்குகின்றார். இவர்களுக்குத் தேவையான கடனுதவிப் பெற்று தருவதோடு, காளான்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் கே.வி.கே அமைப்புக்கும் இடையே பாலம் போல் செயல்பட்டு வரும் அம்பிகா அச்சய்யாவால் குடகு மாவட்டத்தில் நிறைய குடும்பப் பெண்கள் காளான் வளர்ப்பு மூலம் லாபமடைவதோடு, தொழில் முனைவோராகவும் முன்னேறியுள்ளனர்.
 - பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com