கலைவாணருடன் வாழ்ந்த நாள்களை மறக்க முடியவில்லை!

1933-ஆம் ஆண்டிலிருந்து 28 ஆண்டுகள் கலையுலகுடன் தொடர்பு கொண்டு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை டி.ஏ.மதுரம். மறைந்த கலைவாணரின் நினைவுகளில் ஒன்றி வாழ்ந்த டி.ஏ.மதுரம் கலைவாணர் 
கலைவாணருடன் வாழ்ந்த நாள்களை மறக்க முடியவில்லை!

1933-ஆம் ஆண்டிலிருந்து 28 ஆண்டுகள் கலையுலகுடன் தொடர்பு கொண்டு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகை டி.ஏ.மதுரம். மறைந்த கலைவாணரின் நினைவுகளில் ஒன்றி வாழ்ந்த டி.ஏ.மதுரம் கலைவாணர் பற்றி கூறியிருப்பதாவது:

கலைவாணர் என்.எஸ்.கே எல்லாக் கட்சிக்கும் பொதுவாக இருந்தார். எனினும் தி.மு.கவிடம் அவருக்கு அதிகமான பற்றுதல் இருந்தது.

கம்யூனிஸ்ட் மேடையிலும் தி.மு.க. கருத்துகளை எடுத்துக் கூற அஞ்சியதில்லை. காங்கிரஸ் மேடைகளில் பெரியார் புகழை எடுத்துக்கூறத் தயங்கியதில்லை.

எம்.ஜி.ஆரைப் போன்ற நல்ல உள்ளத்தை - மிகப் பெரிய இதயம் படைத்த மனிதரை உலகில் எங்கும் பார்த்ததில்லை என்பார்.

கலைவாணர் மகளுக்கு எம்.ஜி.ஆர் நடத்தி வைத்த திருமணத்தை எங்கள் குடும்பம் என்றும் மறக்காது. நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது.

கலைவாணரின் தத்துவம் துன்பமான நேரத்தில் சிரிக்கும் தன்மை உடையவர் கலைவாணர். இறந்தவர்களைப் பார்த்து அழுவதைக் கூட அவர் விரும்புவதில்லை. அழுதால், "இன்று இறந்த பிணத்தைப் பார்த்து நாளை சாகும் பிணம் அழுகிறது' என்பார்.

"இருந்தார்கள், இறந்து விட்டார்கள், அவர்களுடைய நல்ல செயல்களுக்கு மரியாதை செய்வோம்' இதுதான் அவருடைய கருத்து. அவருடைய தந்தை இறந்த பொழுது ஒரு நிமிடநேரம் கண் கலங்கியவர் பிறகு பேசாமல் இருந்துவிட்டார்.

துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதது அவருக்குப் பிடிக்கவில்லை.

"என் தந்தைக்கு வயதாகிவிட்டது. நான் நல்ல நிலையில் இருக்கிறேன். இப்படி இருக்கும்பொழுது இறந்ததிற்காக ஏன் அழ வேண்டும்? எல்லோரும் என்னைக் கட்டிப் பிடித்து அழுவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது'' என்றார் கலைவாணர். அதற்கு நான், ""சிரித்து விடாதீர் அய்யா'' என்று கேட்டுக் கொண்டேன்.

அப்பொழுது துக்கம் விசாரிக்க வந்த தமிழறிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அங்கிருந்த எல்லோரும் அதிசயிக்கும்படி துக்கம் விசாரித்தார். கவிமணி துக்கம் விசாரிக்கும்பொழுது சொல்லியது இதுதான்: ""கிருஷ்ணா ரொம்ப சந்தோஷம்''.

எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.. சாவு வீட்டில் " சந்தோஷம்' என்று சொன்னால் எப்படி இருக்கும்?

கவிமணி தொடர்ந்து சொன்னார், "" உன் தந்தையின் ஸ்தானத்தை இன்றிலிருந்து எடுத்துக் கொண்டாய், ரொம்ப சந்தோஷம்''. இது கலைவாணர் மனநிலையைப் பிரதிபலித்தது.

எல்லாக் கட்சித் தலைவர்களிடமும் கலைவாணர் மதிப்பும் தொடர்பும் வைத்திருந்தார். என்றாலும் அண்ணாவிடம் அவர் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் தான் அதிகம்.

அவர் சொன்னது நடக்கிறது.

""இப்படி செலவு செய்தால் என்ன பயன்? குழந்தைகளுக்குச் சொத்துச் சேர்க்க வேண்டாமா?'' என்று கலைவாணரிடம் கேட்டேன்.

""உனக்கு உன் அப்பா என்ன சேர்த்து வைத்தார்? எனக்கு என் அப்பா என்ன சேர்த்து வைத்தார். குழந்தைகளை நல்லாப் படிக்கவை. அவனவன் படித்து விட்டால் உழைத்துச் சாப்பிடுவான். அப்பொழுதுதான் ஒழுங்காக இருப்பான்'' என்றார்.

அவர் சொல்லியபடிதான் இன்று நடந்தது. மறக்க முடியாத நிகழ்ச்சி கலைவாணருடன் வாழ்ந்தபோது "கண்ணகி' படம் தயாராகிக் கொண்டிருந்தது. கெல்லிஸில் உள்ள ஒரு வீட்டில் ஜூபிடர் எஸ்.கே.முகைதீன், கலைவாணர், டி.ஏ.மதுரம், ஆழ்வார் குப்புசாமி மற்றும் கம்பெனி நடிகர்கள் தங்கியிருந்தனர். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்து இரவு எல்லாரும் படுக்கைக்குச் சென்றுவிட்டார்கள்.

உலகப் பெரும் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சென்னையில் குண்டு போடப்படும் என்ற பயங்கரச் செய்தி நிலவியதால் எல்லோரும் இரவில் விரைவில் தூங்கிவிடுவார்கள்.

ஒருநாள் இரவு 12 மணி.

திடீரென நான் கண்விழித்தேன்.

கலைவாணர் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

""இந்த நேரத்தில் ஏன் இங்கு வந்தே'' கலைவாணர் கேட்டார்.

நான் டார்ச்சு லைட்டை அடித்துப் பார்த்தேன். அங்கே கலைவாணருடன் ஒரு பையன் நின்று கொண்டிருந்தான்.

""யார் இந்தப் பையன்?'' என்று கேட்டேன்.

""நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பையன். என்னைப் பார்க்க வந்திருக்கிறான். வாசல் கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் எல்லோரையும் எழுப்ப வேண்டுமே என்று எண்ணி என்னைப் பார்க்கும் ஆசையில் பின்பக்கமாக படியேறி மாடிக்கு வந்துவிட்டான்'' என்றார் கலைவாணர்.

அந்தப் பையனைப் பார்த்துக் கூறினேன், ""ஏன் தம்பி, இப்படிச் செய்யலாமா? ராத்திரி நேரத்தில் இப்படி பின்பக்கமாக வருவதைப் போலீஸ் பார்த்துவிட்டால் உன்னைத் திருடன் என்று பிடித்துக் கொண்டிருப்பார்களே''

அதைச் செய்யத்தான் வந்திருக்கிறான் என்று மிகச் சாதாரணமாக சொன்னார் கலைவாணர்.

பிறகு அந்தப் பையனிடம் 100 ரூபாய் கொடுத்து அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com