கதை சொல்லும் குறள் - 53: அன்பு குறையாத உறவுகள்!

கந்தண்ணா என்றால் எங்கள் சொந்த பந்தங்கள் நடுவே ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.
கதை சொல்லும் குறள் - 53: அன்பு குறையாத உறவுகள்!


கந்தண்ணா என்றால் எங்கள் சொந்த பந்தங்கள் நடுவே ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.

கந்தசாமி என்பதுதான் அவரின் இயற்பெயர். என் தந்தை மணிஒளியின் அப்பாவின், சகோதரனின் மகன் கந்தசாமி.

என் தந்தை மணிஒளிக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. என் தந்தை மூத்தவர், சித்தப்பா முறை, அதனால் கந்தசாமி என் தந்தையை அப்பா என்றுதான் அந்தக்கால வழக்கப்படி மரியாதையாகக் கூப்பிடுவார்.

சிறுவயதில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடியிருக்கிறார்கள். 

என் தாத்தாவின் மறைவுக்குப்பின் எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் என் தந்தையைத்தான் கந்தசாமி அண்ணன் நாடுவார்.

கந்தசாமியின் தோற்றம் பார்ப்போரைக் கொஞ்சம் பயம் கொள்ளச் செய்யும். முறுக்கிய மீசை, நடுத்தர உயரம்,  சற்றே பருமனான உருவம், முட்டை கண்கள், விழித்துப் பார்த்தால் யாரையும் ஒரு தடவை கிலி கொள்ளச் செய்யும். ஆனால் இந்த முரட்டுத்தனமான உருவத்துக்குள்ளே, பஞ்சு போன்ற அன்பான, பாசமான மனதைக் கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

இப்படி எல்லோரையும் ஒரு பார்வையில் நடுங்க வைத்த என் கந்த அண்ணா, பெட்டிப் பாம்பாய் என் தந்தை மணிஒளியிடம் அடங்கி விடுவார்.

என் அப்பா மணிஒளி சிறுவனாக இருந்த பொழுது, என் தாத்தாவும், அவருடைய சகோதரரின் குடும்பமும் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்திருக்கிறார்கள், கூட்டாகத் தொழிலும் செய்திருக்கிறார்கள்.

வடலூரில், வள்ளலாரின் அணையா அடுப்புப்போல, எந்நேரமும் அடுப்பு என் தாத்தாவின் வீட்டில் எரிந்துக் கொண்டிருக்கும் என்று சொல்லுவார்கள். குடும்பத்து உறுப்பினர்கள் என்றில்லாது வந்துபோகும் விருந்தினர் கூட்டத்திற்கும் குறைவிருக்காதாம்.

சென்னைப் பட்டினத்தைச் சுற்றிப் பார்க்க, நோய் நொடி வந்தால் பட்டினத்தில் வைத்தியம் பார்க்க என்று எப்பொழுதும் சொந்த பந்தங்கள் வந்து கொண்டே இருப்பார்களாம். விருந்தோம்பலை உயிராக எண்ணிச் சுற்றங்களைப் போற்றி வாழ்ந்த காலம் அது. பிள்ளைகள் எல்லோரும் திருமண வயதை நெருங்க ஆரம்பித்தபொழுது தொழில்களும் வேறுபட, பிறகு கந்தண்ணனின் அப்பா, வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்து இருக்கிறார்.

கந்தண்ணனின் வீடும் எங்கள் வீடும் பத்து நிமிட நடையில் அடைந்து விடுவதாக இருந்தது.

என் தந்தை மணிஒளிக்கு நானும், என் அண்ணனுமாக இரண்டு பிள்ளைகள். கந்தண்ணனுக்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என்று நான்கு பிள்ளைகள்.
தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், திருவிழாக்கள், கல்யாணம், துக்க நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் சொந்த பந்தங்களுடன் கூடிவிடுவோம்.

என் கந்தண்ணனுக்கு தன் சித்தப்பா பிள்ளைகளான எங்கள் மீது மிகுந்த பாசம்.
ஆனால் சிறு வயது தொடங்கியே ஏனோ எனக்கு கந்தண்ணனைப் பார்த்தால் பயம் கலந்த பாசமே இருந்தது.

""காந்தி, இங்கே வா'' என்று என் பெயரைச் சொல்லி அவர் கூப்பிட்டால் நான் என் அம்மாவின் முதுகுக்குப் பின்னால் சென்று ஒளிந்துக் கொள்வேன்.

""தொத்தா, அவளை இப்படி என்கிட்ட அனுப்பு'' என்பார்.

முதலியார் சமூகத்தில் சித்தப்பா மனைவியை இப்படித்தான் அழைப்பார்கள்.
""அதற்கு என் அம்மா, உன் மீசையைப் பார்த்துத்தான் பயப்படறா'' என்று சொன்னால் கட கடவென்று சிரிப்பார்.

கந்தசாமிக்கு, ஏராளமான நண்பர்கள் உண்டு. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை பார்த்தவர். கை நிறையச் சம்பளம், சொந்த பிஸினஸ் என்று பணத்திற்குக் குறைவில்லை. அதனால் நண்பர்களுக்கும் அளவில்லை. அசைவப் பிரியர், தன் நண்பர்களோடு சென்னை காஸ்மாபாலிடன் கிளப்பில் பொழுதைக் கழிப்பவர். தன் வீட்டிலும் அடிக்கடி விருந்து கொடுத்து மகிழ்வார்.
கந்தண்ணனின் மீது ஏதாவது புகார் சொல்லணும் என்றால், அவரின் தாயார் என் அப்பாவிடம்தான் வந்து சொல்லுவார்.

தொலைபேசியில் என் தந்தை மணிஒளி அழைத்தால் போதும் அன்று மதியமே எங்கள் வீட்டில் கந்தசாமி அண்ணா ஆஜராகிவிடுவார்.

மூடிய அறைக்குள் என் தந்தை திட்ட, எதிர்த்து கந்தண்ணா ஒரு பதில் சொல்ல வேண்டுமே...

""சரிப்பா, சரிப்பா'' என்ற குரல்தான் கேட்கும்.

எனக்கு அப்பொழுது பதினேழு வயது முடிந்து பதினெட்டு நடந்துக் கொண்டிருந்தது. ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பைப் படித்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் நியூ காலேஜில் கடைசி ஆண்டுப் படிப்பில் இருந்தான்.

எங்கள் வாழ்க்கையில் சூறாவளி வீசியது. குருவிக்கூடாக இருந்த குடும்பம் சிதறியது. ஆமாம் நாற்பத்து நான்கு வயது, எங்களைப் பற்றிய எதிர்காலக் கனவுகள் பலவற்றைத் தன் மனதில் சுமந்துக் கொண்டிருந்த என் தந்தை மணிஒளி, மூளைக்காய்ச்சலில் இறைவன் அடியை அடைந்தார்.

இன்று இருப்பார் நாளை இல்லை என்ற பெருமை படைத்தது இந்த உலகு என்பதை ஏட்டில் படித்த பொழுது மனதை நொறுக்கவில்லை. ஆனால் அது எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தபொழுது, சிதைந்து கிடந்தோம்.

கந்தசாமி அண்ணன் அன்று மாலைதான் விமானம் மூலம் மும்பாய்க்குச் சென்று இருக்கிறார். ஆனால் அவருடைய மனது நிலைக்கொள்ளாமல் அலைந்திருக்கிறது, மறு விமானம் பிடித்துச் சென்னையை அவர் அடைந்த பொழுது இரவு மணி பதினொன்று, அந்தச் சமயத்தில்தான் என் தந்தையின் உயிர் பிரிந்தது.

என் தந்தை இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டவுடனே, கதறி அடித்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தவரின் காரில்தான் என் தந்தையின் பூத உடல் எங்கள் இல்லத்தை வந்து அடைந்தது.

எங்கள் இல்லம் தூண்களை உடைய கூடத்தைக் கொண்டது. என் தந்தையின் உடல் கூடத்தில் கிடத்தப்பட்டது. நாங்கள் எல்லோரும் கூக்குரல் இட்டு அழுது கொண்டிருந்தோம். எங்கப்பாவுக்குச் சாகிற வயதா, என் அன்னைக்கு முப்பத்து ஒன்பது வயதுதான் ஆகியிருந்தது.

என் கந்தண்ணன் கூடத்துத் தூணில் தன் தலையை "மடால் மடால்' என்று மோதி அழுதுக் கொண்டிருந்தார். அந்தச் செயலை மேலும் செய்யவிடாமல் பலர் அவரைத் தடுத்தனர்.

"அப்பா என்னை விட்டுட்டுப் போயிட்டியே'' என்று கதறினார்.

என் அம்மா என் அப்பாவின் உடல் மீது விழுந்து அழுதுக் கொண்டிருந்தாள்.
நான் என் அப்பா உடலைப் பார்த்து அழுதுக் கொண்டே சொன்னேன்.
""அப்பா, எனக்கு மிகச் சிறந்த முறையில் திருமணத்தை நடத்திப் பார்ப்பேன் என்பீர்களே, இப்பொழுது யார் இருக்கிறார்கள் அப்படிச் செய்ய'' என்றேன்.
அவ்வளவுதான், புலியெனப் பாய்ந்து வந்தார் என் கந்தண்ணா.
""தங்கச்சி, ஏம்மா இப்படிச் சொல்றே, 
நான் இருக்கேன் உன் கல்யாணத்தை நடத்த, இது சத்தியம்'' என்றார்.
மூன்று மாதங்கள் என் கந்தண்ணனின் குடும்பம் எங்களோடே வாழ்ந்தது, எங்களுக்கு ஆறுதல் கூறியது. தன் காரில் என் கந்தண்ணன் என்னை ராணிமேரி கல்லூரிக்கு அழைத்துச் சென்று விடுவார்.
எங்கள் குடும்பத்தின் பாதுகாவலராக தன்னை ஆக்கிக் கொண்டார். பொருளாதார நிலையில் நாங்கள் மேன்மைப்பட்டு இருந்தோம், ஆனால் இளம் கைம்பெண்,  கல்லூரிப் படிப்பில் இருக்கும் அவளுடைய இரண்டு பிள்ளைகள், அவர்களின் எதிர்காலம்?
ஆசிரியர் படிப்பில் முதுகலைப் பட்டத்தை முடித்து, நான் திருமணத்திற்குத் தயாராகி நின்றேன். என் கந்தண்ணாவின் மூத்த மகளும் திருமண வயதை அடைந்து நின்றாள்.
இருவருக்குமே வரன்கள் வர ஆரம்பித்தன.
என் கந்தண்ணன் திருமணத் தரகர்களிடம் முடிவாகச் சொல்லிவிட்டார். முதலில் என் தங்கையின் திருமணம், பின்புதான் என் மகளுக்கு என்று!
வரும் வரன்களை என் தாய் ஆராய்ந்து, அலசுவார். தந்தையில்லாத பெண் பிறகு கஷ்டப்படக்கூடாது என்று மிகவும் மெனக்கெடுவார்.
கந்தண்ணன் சொன்னார், ""தொத்தா, காந்திக்குத் தகுந்த மாப்பிள்ளையை நீ தேர்ந்தெடு. கல்யாணத்தை நான் முன் நின்று நடத்துகிறேன்''.

எனக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் மறைந்துபோன என் தந்தையின் ஆசைப்படி ஆசிரியர் படிப்பைப் படித்தேன். ஆனால் எனக்கு ஒரு மருத்துவரே கணவராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். என் ஆசைப்படியே என் அன்னை முடிவில் ஒரு மருத்துவரையே எனக்குத் துணையாகத் தேர்ந்தெடுத்தார். தன் வருங்கால மாப்பிள்ளையைப் பற்றி ஆராய்ந்து அறிந்து, அவரின் குணநலன்களைப் பற்றிக்  கந்தண்ணாவிடம் என் தாயார் கூற,  அவரும் மாப்பிள்ளையின் பெற்றோரைச் சந்தித்து, என்னையும், மாப்பிள்ளையையும் சந்திக்க வைத்து எங்களின் சம்மதத்தைப் பெற்ற பிறகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

நிச்சயதார்த்தம் கந்தண்ணனின் வீட்டில் நடந்தது. திருமணம் தடபுடலாக மூன்று நாள் வைபவமாக என் தாய் நடத்த, கந்தண்ணன் முன்நின்று, எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார்.

ஊரே போற்றுகிறார்போல எங்கள் திருமணம் நடந்தது. என் தந்தையின் பூத உடலின் மீது செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினார்.

நான் மாமியார் வீட்டுக்குச் செல்லும் முன், என் கணவரிடம் என் அருமை கந்தண்ணன் சொன்னார்,

""மாப்பிள்ளை, என் சித்தப்பாவின் செல்ல மகள் இவள், என் அருமைத் தங்கை, இவளைக் கண்கலங்காமல் பார்த்துக்குங்க''.

என் கந்தண்ணா என் கல்யாணத்திற்குப் பிறகு தான் தன் மூத்த மகளுக்குத் திருமணத்தை நடத்தி முடித்தார். என் திருமணத்தை விட அது விமர்சையாக நடத்தக் கூடாது என்று சொன்னாராம். என் அண்ணனின் திருமணத்தையும் நடத்தினார்.

இன்று என் கந்தண்ணன் உயிரோடு இல்லை, ஆனால் அவர் நினைவுகள், அவருடைய பாசம், நேசம் தன் சித்தப்பா மீதும் அவரின் குழந்தைகள் மீதும் தன் உயிர் உள்ளவரை காட்டிய அன்பு, இன்றளவும் நினைத்து நினைத்து அவரைத் தெய்வமாக என் நெஞ்சில் பூஜிக்கிறேன்.

எந்த நிலையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால், அவரைவிட பாக்கியசாலி யாரும் இல்லை. இந்த விதத்தில் நானும் பாக்கியசாலியே!

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

(குறள் எண்: 522)

பொருள் :

எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால், அது அவருக்கு ஆக்கமும் வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com