சின்னத்திரை மின்னல்கள்
By ஸ்ரீ | Published On : 17th November 2021 06:00 AM | Last Updated : 17th November 2021 06:00 AM | அ+அ அ- |

:
வெள்ளித்திரை டூ சின்னதிரை!
தமிழ்த் திரையுலகில் "அருவி' படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் அதிதி பாலன். "அருவி' படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டதால், தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார்.
அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்திற்கு பின்பு வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாத அதிதி, தற்போது ஜெயா தொலைக்காட்சியின் "தக திமி தக ஜனு' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக களமிறங்கியிருக்கிறார்.
அதிதி ஏற்கெனவே சிறந்த பரதநாட்டிய கலைஞராக இருப்பதால், இந்நிகழ்ச்சியைப் புதுப் பொலிவுடன் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில், ஏற்கெனவே, "தக திமி தா' என்ற பெயரில் ஒளிப்பரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியை தற்போது "தக திமி தக ஜனு' என்று பெயர் மாற்றி புது வடிவில் கொண்டு வந்துள்ளார். ஞாயிறு தோறும் காலை 9.30மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
நிழல் நிஜமானது!
புது நிகழ்ச்சிகள், புது தொடர்கள் என புதுப்பொலிவுடன் தற்போது மாற்றம் பெற்று வருகிறது ராஜ் தொலைக்காட்சி. அந்த வகையில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "நீ வருவாய் என' தொடர் மற்ற தொலைக்காட்சிகளின் பிரபல தொடர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.
இத்தொடரில் ஜோடியாக நடித்து வரும் வினோத் குமார், யாழினி இருவரும் காதலித்து வருவதாக சமீபத்தில் சின்னத்திரை வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த வாரம் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இதன் மூலம் ரீல் ஜோடியாகி ரியல் ஜோடியான சின்னத்திரை பிரபலங்களின் வரிசையில் இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். இந்த புதுமணத் தம்பதிகளுக்கு நண்பர்களும், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.