கதைகள்  மூலம்  சமூக  சிந்தனைகள்!

கற்பனையில் உருவாக்கப்படும் கதைகள் மூலமாக குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நல்ல வலுவான சமூக சிந்தனைகளை அறிவுறுத்த முடியும் என்ற நோக்கத்தில் கதை சொல்வதற்காகவே "ஸ்டோரி புர்'
கதைகள்  மூலம்  சமூக  சிந்தனைகள்!

கற்பனையில் உருவாக்கப்படும் கதைகள் மூலமாக குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நல்ல வலுவான சமூக சிந்தனைகளை அறிவுறுத்த முடியும் என்ற நோக்கத்தில் கதை சொல்வதற்காகவே "ஸ்டோரி புர்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார் ப்ரியா முத்துகுமார். ஏற்கெனவே நர்சரி குழந்தைகளின் ஆசிரியையாகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்த அனுபவம் இவரை கதை சொல்லியாக உருவாக்கியுள்ளது.

ஏழாண்டுகளுக்கு முன் குழந்தைகள் மற்றும் பெரியோர்களிடம் கதைகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று ப்ரியா முயற்சித்தபோது, பள்ளி நிர்வாகங்கள் ஆதரவளிக்க முன்வரவில்லை. 2013- ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தன் வீட்டு மாடியில் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்த ப்ரியா தீர்மானித்தார். தன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து கதை சொல்லத் தொடங்கினார் பாராட்டுகள் குவிந்தன.

ஸ்டோரிபுர் உருவாயிற்று. அதற்கான சின்னத்தை இவரது மகள் வடிவமைக்க, இவரது கணவர் போஸ்டர்களை உருவாக்கினார். நிகழ்ச்சிகள் நடப்பது குறித்து தகவல் அறிந்து குழந்தைகளோடு பெரியவர்களும் வரத்தொடங்கினர்.

இத்தகவலை அறிந்த மூதாட்டி ஒருவர், தான் நடத்திவந்த சிறிய புத்தக கடையில் நிகழ்ச்சியை நடத்துமாறு அழைப்பு விடுத்தார். கதை சொல்லும் நிகழ்ச்சி நாளடைவில் பிரபலமடையவே, பெங்களூருவில் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் பிரியாவுக்கு கதை சொல்லும் வாய்ப்புகள் அதிகரித்தன. சமூக சிந்தனையுடன் கூடிய கதைகளை ப்ரியா எப்படி உருவாக்குகிறார்?

""நம் இந்தியாவில் உள்ள இயற்கை வளங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவை மூலம் நம் வாழ்வாதரத்திற்கு கிடைக்கும் நன்மைகள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அவைகளை கேட்பவர் மனதில் பதியும்படி கதைகளை உருவாக்கத் தொடங்கினேன். பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், பொது நிகழ்ச்சிகளின் போது பெரியவர்களுக்கும் சுவாரசியமான முறையில் தகவல்களைச் சேர்த்து கதை சொல்லும்போது நல்ல வரவேற்பு கிடைத்தது.

கதை சொல்லும்போது கூடவே சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட சில சமூக ஆர்வலர்கள் பற்றியும் நான் குறிப்பிடுவதுண்டு. உதாரணமாக 40 ஆண்டுகளாக தினமும் ஒரு மரக்கன்றை நட்டு, ஒரு காட்டையே உருவாக்கியுள்ள ஜாதவ் பயெங்.

2015-ஆம் ஆண்டு தனிமனிதனாக மும்பை கடற்கரையை சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்ற அப்ராஸ்ஷா.

இமயமலையில் ஏறி சாதனை படைத்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால். கங்கை நதியில் 55 டன் கழிவுப் பொருள்களை அகற்றியது மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சாலமர திம்மக்கா, நெடுஞ்சாலை இருபுறங்களிலும் 385-க்கும் மேற்பட்ட ஆலம் கன்றுகளை நட்டது போன்ற சாதனைகளையும் கதையுடன் சேர்த்து சொல்வேன்.

குஜராத் மாநிலத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியில் கதை சொல்வதை ஒரு பாடமாகவே வைத்துள்ளனர். அங்கு கதை சொல்ல சென்றபோது, ஃபேஷன் தொடர்பான தகவல்களைச் சேகரித்து கதைசொல்லுவது எனக்குள் புது அனுபவமாக இருந்தது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தயாரிக்கப்படும் பாரம்பரிய துணி வகைகள், நெசவாளர்களின் வாழ்க்கை பற்றி கூறியபோது பெரும் பாராட்டினைப் பெற்றேன். வீணாகும் துணிகளை இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்படுத்துவது குறித்து கதை மூலம் விளக்கம் கொடுத்தது நல்ல வரவேற்பை அளித்தது.

ஆனால், பொதுமுடக்கத்தின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை, தொழில்கள் பாதித்ததுபோல் என்னுடைய ஸ்டோரி புர் அமைப்பும் பாதிக்கப்பட்டது. நேரடியாக சென்று கதை சொல்ல வாய்ப்புகள் குறைந்தன. உடனடியாக யூடியூப் மூலம் கதை சொல்லும் நிகழ்ச்சியைத் துவங்கினேன். இந்நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் உதவி செய்ய என்னுடைய மகளும் உடனிருப்பதால் புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறேன். சமூக சிந்தனைகளை கதை சொல்வதன் மூலமாகவும் மக்களிடம் கொண்டு செல்வது மனதுக்கு நிறைவைத் தருகிறது'' என்கிறார் ப்ரியா முத்துகுமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com