தேங்காய் பட்டணம் முதல் ஐஏஎஸ் வரை.. !

தேங்காய் பட்டணம் முதல் ஐஏஎஸ் வரை.. !

இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் அகில இந்திய தர வரிசையில் 63-ஆம் இடம் பெற்றிருக்கும் தீனா தஸ்தகீருக்கு தமிழ் நாட்டின் தேங்காய்ப்பட்டணம்தான் பூர்வீகம். தேங்காய்ப்பட்டணம் என்றால் உடனே நினைவுக்கு வருவது நாவல் ஆசிரியர் தோப்பில் முகம்மது மீரான் தான். ஆம், தோப்பில் முகம்மது மீரானின் பேத்திதான் தீனா தஸ்தகீர். தீனா தஸ்தகீரைத் தொடர்பு கொண்டோம்:

""எங்கள் குடும்ப வேர் எல்லாமே கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் தாலாட்டும் தேங்காய்ப்பட்டணம்தான். தாத்தா ஹஸன் கண்ணு நாகர்கோவில் இந்து கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். தாத்தாவின் தம்பியும் எனது சின்ன தாத்தாவும்தான் தேங்காய்ப்பட்டணத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்த தோப்பில் முகம்மது மீரான். விடுமுறைக்கு செளதியிலிருந்து வரும்போது தேங்காய்ப்பட்டணம் போக மறக்கமாட்டோம்.

அப்பா முகம்மது தஸ்தகீர் செளதி அரேபியாவில் பெட்ரோலியம் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி விஞ்ஞானியாக இருபது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதனால் எனது தொடக்கக் கல்வி முதல் பிளஸ் டூ வரை செளதியில் உள்ள சர்வதேச இந்தியன் பள்ளியில்தான் படித்தேன். படிக்கும்போது அதிக மதிப்பெண்கள் எடுத்ததற்காக பதக்கங்களும் பெற்றுள்ளேன். பொறியியல் படிப்பை தேங்காய்ப்பட்டணத்திற்கு அருகில் பெரிய நகரமான திருவனந்தபுரத்தில் பெண்களுக்கான பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தேன்.

நான் கல்லூரியில் படிக்க அப்பா திருவனந்தபுரத்தில் வீட்டைக் கட்டினார். எங்கள் வீடு கேரள முதல்வரின் வீட்டிற்கு வெகு அருகில் உள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் உண்டு. படிக்கும் போதே பிரபல கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று நான் கனவு கண்டு வந்ததால் வேலையில் சேரவில்லை.

பொறியியல் பட்டப்படிப்பு முடித்ததும், ஐஏஎஸ் தேர்வினை எழுதத் தொடங்கினேன். முதல் முயற்சியில் தேர்வு பெற்றாலும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படவில்லை. இரண்டாவது முயற்சியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் தேர்வாகவில்லை. மூன்றாவது முயற்சியில்தான் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். நேர்முகத் தேர்வில் ஐந்து பேர்கள் அடங்கிய குழுவினர் கேள்விகள் கேட்டார்கள். நான் ஐஏஎஸ் தேர்வுக்காக விருப்பப் பாடமாக புவியியலை தேர்ந்தெடுத்தேன். இந்தப் பாடத்திற்காக டில்லியில் ஒரு பயிற்சி நிலையத்தில் ஆன்லைன்னில் பயிற்சி பெற்றேன். இதர பாடங்களுக்கு திருவனந்தபுரத்தில் பயிற்சியில் சேர்ந்திருந்தேன்.

நேர்முகத் தேர்வுக்கு முன், நமது படிப்பு, ஐஏஎஸ் தேர்வுக்காக எடுத்த விருப்பப் பாடம், பொழுதுபோக்கு குறித்த தகவல்களை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் நேர்முகத் தேர்வு நடந்தது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது கைக் கடிகாரம் கட்டிக் கொள்ளக் கூடாது. அதனால் நேர்முகத் தேர்வு 20 முதல் 25 நிமிடங்கள் நடந்திருக்கும் என்று குத்து மதிப்பாகச் சொல்கிறேன். நேர்முகத் தேர்வுக் குழுவின் தலைவர் ஒரு பெண்தான்.

எனது ஐஏஎஸ் கனவு நனவாக நான், தம்பி அம்மா செளதியிலிருந்து திருவனந்தபுரம் வந்துவிட்டோம். தம்பி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக சிங்கப்பூர் செல்கிறார். தம்பிக்கு ஐஏஎஸ்ஸில் நாட்டம் இல்லை. முறையான சரியான திட்டமிடல், கடுமையான உழைப்பு இருந்தால் ஐஏஎஸ் அதிகாரியாகலாம். நானும், அப்பா, அம்மா தம்பி ஒரு குழுவாக ஒரே மனதுடன் ஐஏஎஸ் லட்சியத்துடன் செயல்பட்டோம். அதன் பலன் கிடைத்துள்ளது '' என்கிறார் 26 வயதாகும் தீனா தஸ்தகிர்.

- பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com