கதை சொல்லும் குறள் - 48: வலிமையின்  அளவு!

அமிர்தபவனின், தி.நகர் கிளையில் அன்று கூட்டம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
கதை சொல்லும் குறள் - 48: வலிமையின்  அளவு!

அமிர்தபவனின், தி.நகர் கிளையில் அன்று கூட்டம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.  இந்த இடத்தில் அதிக வியாபாரம் என்பதால் பகல் உணவு நேரத்தில் அமிர்தபவனின் முதலாளி பொன்னரசன் அங்கே ஆஜராகிவிடுவார். சமைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளைச் சுவை பார்ப்பார். வாடிக்கையாளர்கள் நன்றாகக் கவனிக்கப்படுகிறார்களா என்று பார்ப்பார். சமயத்தில் கல்லாவிலும் உட்காருவார்.

முதலாளி பொன்னரசன், பேருக்கு ஏற்றாற்போல, பொன்னிறத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தான். நல்ல உயரம், ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்டு திரைப்பட ஹீரோக்களையும் மிஞ்சிய அழகுடன் இருந்தான்.

பொன்னரசனுக்கு, கூடப்பிறந்த அக்காக்கள் மூன்று பேர், அவர்களைக் கட்டிக் கொடுத்து, பொன்னரசனைக் கேட்டரிங் படிப்பைப் படிக்க வைப்பதற்குள், அவனுடைய பெற்றோர் மூச்சுத் திணறிப் போயினர்.

படிப்பு முடிந்து வந்த பொன்னரசன், கையில் இருந்த கொஞ்ச ரொக்கத்தை வெச்சி, பாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்தான்.

பொன்னரசனின் சமையல் கலை, அவனுக்குக் கை கொடுத்தது. இதோ இந்தப் பத்து வருடங்களில் இப்படிப்பட்ட ஹிமாலய வளர்ச்சியை அவனே எதிர்பார்க்கவில்லை.

பொன்னரசன் நன்றாகத் தொழிலில் முன்னுக்கு வந்தபிறகு அவனுக்குப் பல பணக்கார வீட்டு ஜனங்கள் பெண் கொடுக்க முன் வந்தாலும், தன்னோடு கேட்டரிங் படித்த மஞ்சுளாவையே மணந்து கொண்டான். சாதாரண நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மஞ்சுளா குணத்திலும், அழகிலும் பொன்னரசனுக்குச் சரியான ஜோடியாகவே திகழ்ந்தாள். ஆஸ்திக்கு ஒரு பையன், ஆசைக்கு ஒரு பெண் என்ற நிறைவான குடும்பம்.

வாழ்க்கை ஒரே நேர்க்கோட்டில் யாருக்கும் செல்வதில்லை தானே! போன வருடம் பொங்கல் தினத்தன்று தன் குடும்பத்தோடு திரைப்பட இயக்குநர் ஒருவர், அமிர்தபவனில் சாப்பிட வந்தார். அந்தச் சமயத்தில் பொன்னரசன் அந்தக் கிளையில் இருந்ததால், அவரோடு நேர்முகமாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

""வணக்கம் சார், நான் உங்கள் தீவிர ரசிகன்'' என்றான் பொன்னரசன்.

""அப்படியா தம்பி, ரொம்ப சந்தோஷம், ரொம்ப நாளா குடும்பத்தோட அமிர்தபவனில் வந்து சாப்பிடனும் என்று என் மனைவி ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாள். அந்த நல்ல வாய்ப்பு இன்றுதான் நிறைவேறியது''.

""என் பாக்கியம் சார், என்னுடைய நீண்ட நாள் ஆசை, உங்களை நேரில் பார்க்கணும், உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கணும் என்று நினைப்பேன்''.

""அட, அதை இன்று நிறைவேற்றி விட்டால் போச்சு''.

பொன்னரசனும், இயக்குநரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை பேஸ்புக்கில் போட்ட மறுநாளே லைக்ஸ் பல லட்சங்களைத் தாண்டியது.

பொன்னரசன்,  இயக்குநரின் சாப்பாட்டிற்கான பில்லுக்குப் பணத்தைக் கொடுக்க விடவில்லை.

""தம்பி, நீங்க செய்யறது ரொம்ப அநியாயம், மொத்தம் இருபதுபேர் சாப்பிட வந்திருக்கோம், பணத்தை வாங்கலைன்னா எப்படி-?''

""ஐயோ சார், நீங்க வேறே. இன்றைக்கும் மனசு சோர்வா இருந்தா, உங்களுடைய வெற்றிப்படமான, "மனதின் சுவடுகள்' என்ற படத்தைப் போட்டுப் பார்த்தால் என் மனசே லேசாசிவிடும். அந்தப் படத்தை அவ்வளவு அற்புதமா இயக்கி இருக்கறீங்க. பாடல் காட்சிகளும், அவை படமாக்கப்பட்ட விதமும், அதற்கு நீங்க தேர்ந்தெடுத்த லொக்கேஷன்களும் அப்பப்பா!''

""தம்பி, நன்றிங்க. உங்க பேரைச் சொல்லலையே''.

""என் பெயர் பொன்னரசன் சார்''. 

""அப்படியா பெயருக்கு ஏற்ற நிறம், அழகு. உங்களைப் பார்த்தாலே ஒரு ஹீரோ போலத்தான் இருக்கறீங்க. கூடிய சீக்கிரம் உங்களைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை நான் இயக்குவேன். அப்ப வரட்டுமா தம்பி'' என்று  இயக்குநர் விடை பெற்றுக் கொண்டார்.

அவ்வளவுதான், சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற கதையாகிப் போனது.

பொன்னரசனுக்குத் தான் அழகன் என்பது தெரியும், ஆனால் பிரபல இயக்குநரே தன்னை வைத்துப் படம் எடுக்கும் அளவுக்கு, தன்னுடைய உருவம் இருக்கிறது என்பது புரிந்த உடனேயே அவனுடைய நடை, உடை, பாவனைகள் மட்டும் அல்ல குணமும் மாறத் தொடங்கியது.

கைத்தறி வேஷ்டியிலும், சட்டையிலும் புறத் தூய்மையோடும், அகத்தூய்மையோடும் வலம் வந்தவன், இன்று மார்டன் டிரஸ்ஸில் உலா வருகிறான். பியூட்டி பார்லருக்குச் சென்று தன்னை மேலும் அழகு படுத்திக் கொண்டான். இயக்குநருக்கும் தனக்குமான நட்பைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தான்.

பொன்னரசன் காத்துக் கொண்டிருந்த அந்த நன்னாளும் ஒருவழியாக வந்து சேர்ந்தது.  இயக்குநர், பொன்னரசனைத் தன் அலுவலகத்திற்கு அன்று அழைத்திருந்தார்.

வெகுவான எதிர்பார்ப்போடு பொன்னரசன் விரைந்து சென்றான்.

""வாங்க பொன்னரசன் உட்காருங்கள்'' என்றார் இயக்குநர். பிறகு தொடர்ந்தார். ""உங்களை சினிமா உலகத்திற்கு அறிமுகப்படுத்த ஒரு அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கிறது''.
""அப்படியா சார். மிகவும் மகிழ்ச்சி. குட்டுப்பட்டாலும், மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பார்கள், எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கிறது''.

""கைவசம் ஒரு அருமையான கதை இருக்கிறது. இதைப் படமாக எடுத்தால் கட்டாயம் வெள்ளி விழாவைக் கண்டுவிடும். பெரிய ஹீரோக்கள் எல்லாம் என் டைரக்ஷனில் நடிக்க கியூவில் நிற்கறாங்க. ஆனால் நான் உங்களைத்தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப் போகிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் நீங்கள்தான்''.

ஒரு கணம் ஸ்தம்பித்துப் போய்விட்டான் பொன்னரசன். என்னது நான் தயாரிப்பாளரா? ஐயோ ஏகப்பட்ட பணம் வேண்டுமே. என்னால் முடியுமா? என்ற எச்சரிக்கை உணர்வு எழுந்தது.

""என்ன பொன்னரசன்? முகமே மாறிவிட்டது. இது கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம்தான், ஆனால் போட்ட பணத்தை நூறு மடங்கா வாரிடலாம்''.

""சரி சார், இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள்'' என்று கூறிவிட்டு, மெதுவாக நழுவினான் பொன்னரசன்.

வீடு வந்து சேர்ந்த பொன்னரசன், தன் மனைவி மஞ்சுளாவிடம் விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

முதலில் மகிழ்ந்தாலும், பிறகு மஞ்சுளா சொன்னாள், ""ஏங்க நமக்கு இதெல்லாம் தேவைதானா? பத்து வருஷங்களாகப் பாடுபட்டு நம் தொழிலை இவ்வளவு மேன்மைப்படுத்தியிருக்கிறோம். சினிமாவிலே ஆசைக்கு வேணும்னா நடிக்கலாம். ஆனால் தயாரிப்பிலே இறங்கறது எல்லாம் வேண்டாங்க'' என்றாள்.

பொன்னரசனின் பெற்றோரும் இதற்குச் சம்மதம் அளிக்கவில்லை.

""டேய் பொன்னா, நமக்கு ஏன்டா வேண்டாத வேலை. சினிமா சிலரை வானளவு உயர்த்தும், பலரை அதல பாதாளத்தில் வீழ்த்திவிடும். புகழுக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு, சினிமா என்கின்ற மாய வலையில் மாட்டிச் சீரழிந்தவர்கள் எண்ணிக்கையில் அடங்க மாட்டார்கள். நான் சொல்வதைக் கேள். இந்த வீண் ஆசையை விட்டு ஒழி. ஹோட்டல் தொழிலில் கவனத்தைச் செலுத்து, அது உன்னை மேன்மேலும் உயர்த்தும்'' என்றார் அவனின் அப்பா.

ஆனால் பொன்னரசனின் மனம் பேயாட்டம் போட்டது. அதற்கு உடுக்கை அடித்து, தூபம் போட்டார் இயக்குநர். பிறகு என்ன? யார் சொல்லுக்கும், அறிவுரைக்கும் செவி சாய்க்காமல் பொன்னரசன் சினிமா என்கின்ற மாய வளையத்துக்குள் நுழைந்தான்.

ஒரு நல்ல நாளில் படப்பிடிப்பு தொடங்கியது. முகத்தில் ஒப்பனையோடு, கதாநாயகி ஹம்சாவுடன் டூயட் பாடும் பொழுது, பொன்னரசனுக்கு வானத்தில், சிறகுகள் விரித்து பறப்பது போல இருந்தது. "மாயக்குதிரை' என்று பெயரிடப்பட்ட அந்தப் படம் பாதியளவுக் கூட முடியவில்லை, அதற்குள் பொன்னரசனின் சேமிப்பு அவ்வளவும் கரைந்துப் போனது. முதலில் லட்சங்களில் தொடங்கியது, பிறகு பல கோடிகளை விழுங்கத் தொடங்கியது.

பொன்னரசனின் உணவகங்கள் எல்லாம் வாடகைக் கட்டடங்களிலேயே இயங்கிக் கொண்டிருந்தன. அவ்வளவுக்கும் வாடகை கொடுக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு ஊதியம் தரவேண்டும், மளிகை சாமான்கள் வாங்க வேண்டும், மின்சாரம், பெட்ரோல், டெலிபோன் என்று மாதம் தொடங்கினால் பணத்தை எடுத்து வைக்க வேண்டும், இது தவிர குடும்பச் செலவு.

பொன்னரசன் நிலைகுலைந்துப் போனான். கடனுக்கு, வட்டி கட்டியே மாளவில்லை. பெண்டாட்டியின் நகைகள், ஊரில் வாங்கிப் போட்டிருந்த நிலபுலன்களை விற்றுக் கடன்களை அடைத்துவிட்டு நிமிர்ந்த பொழுது, பொன்னரசன் தொழிலதிபர் என்கின்ற நிலையிலிருந்து சறுக்கி நடுத்தெருவுக்கு வந்துவிட்டான்.

இன்று சொந்த ஊர் விருதுநகரில் அதே பஸ் ஸ்டாண்டில் டீக்கடை  வைத்துப் பிழைக்கிறான். மஞ்சுளாவும், அவள் மாமியாரும் பஜ்ஜி, வடை சுட்டு அடுக்க, மாமனார் கல்லாவில் உட்கார்ந்திருக்கிறார். கையில் மீண்டும் காசு சேர்ந்தால் பொன்னரசன் தலைதூக்கக் காத்திருக்கிறான்.

ஆனால் எதிர்காலத்திலும் தன்னுடைய வலிமையின் அளவை அறியாமல் அகலக்கால் வைத்து வீழமாட்டான் என்று நம்புவோமாக.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

(குறள் எண்: 473) 

பொருள் :

தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com