பெண்களுக்கான சட்ட உரிமைகள்

விவாகரத்து - பராமரிப்புத் தொகை(ஜீவனாம்சம்) - தத்தெடுப்பு திருமண பந்தமென்பது தம்பதிகள் உயிருடன் உள்ள வரை மட்டுமல்லாது அவர்களின் சந்ததிகள் இருக்கும் வரை தொடரும் நிகழ்வாகும்.
பெண்களுக்கான சட்ட உரிமைகள்

(சென்றவார தொடர்ச்சி)

விவாகரத்து - பராமரிப்புத் தொகை(ஜீவனாம்சம்) - தத்தெடுப்பு திருமண பந்தமென்பது தம்பதிகள் உயிருடன் உள்ள வரை மட்டுமல்லாது அவர்களின் சந்ததிகள் இருக்கும் வரை தொடரும் நிகழ்வாகும். ஆனால், சில சமயங்களில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தம்பதிகள் ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் போகிறது. அப்போது தம்பதியினர், சட்டப்படி விவாகரத்து பெற்று, பிரிந்து வாழலாம். விவாகரத்து கோருவதற்கான காரணங்கள் அவரவர் சார்ந்த மதச்சட்டங்களின்படி மாறுபடும். அவை பின்வருமாறு:

இந்து திருமணச் சட்டத்தில் விவாகரத்து கோருவதற்கான காரணங்கள்:

ஊர் பஞ்சாயத்து முடிவு செய்யும் விவாகரத்து, சட்டபூர்வமாகச் செல்லாது.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, மனைவியிடம் கணவன் வரதட்சனை கேட்டால் அதையே காரணமாகக் கொண்டு விவாகரத்து கோரலாம்.

குழந்தை இல்லாதது, விவாகரத்துக் கோருவதற்கு ஒரு காரணமாகாது.

திருமணத்திற்குப் பிறகு கணவன் அல்லது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருத்தல். திருமணத்திற்குப் பிறகு கணவனை மனைவியோ, அல்லது மனைவியை கணவனோ கொடுமைப்படுத்துதல்.

கணவனோ அல்லது மனைவியோ குணப்படுத்த முடியாத அளவு மன நோயாளியாகவோ அல்லது தொழுநோயாளியாகவோ இருத்தல். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மனைவியைக் கணவன் கைவிட்டுவிட்டால்.

7 ஆண்டுகள் வரை கணவனோ அல்லது மனைவியோ எங்கு போனார் என்று தெரியாமல் இருந்தால்.

கணவன் பாலியல் குற்றவாளியாக (கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருந்தால்) இருத்தல்.

மனைவி உயிருடன் இருக்கும்போது கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வது அல்லது துணையாக வைத்துக் கொள்வது போன்றவை.

இவை போன்ற காரணங்களுக்காக ரத்து கோரலாம்.

பராமரிப்பு தொகை ( ஜீவனாம்சம்)

பெற்றோர் குழந்தைகளிடமிருந்தும், குழந்தைகள் பெற்றோரிடமிருந்தும், மனைவி கணவனிடமிருந்தும் தங்கள் பராமரிப்புக்காக ஜீவனாம்சம் பெறும் உரிமை உண்டு. அவர்களின் மதங்களின் அடிப்டையிலான சட்டங்கள் மூலமாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125-இன் கீழும் பெறலாம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். புறக்கணிக்கப்பட்டவர்கள், சீக்கிரமாக ஜீவனாம்சம் பெறுவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் மாதம் ரு.500க்குக் குறையாமல் ஜீவனாம்சம் பெற முடியும். மனு செய்பவர் வாழும் இடத்திற்கு அருகில் உள்ள குற்றவியல் நடுவர் முன்பு வழக்குத் தொடர்ந்து ஜீவனாம்சம் பெறலாம். இப்பிரிவின்படி, வேலை செய்யும் மணமான பெண்ணிடமிருந்தும் பெற்றோர் ஜீவனாம்சம் பெறலாம்.

தத்தெடுத்தல்:

இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956.

இந்துக்களைத் தவிர, குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை சட்டப்படி வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை, இச்சட்டப்படி கீழ்க்கண்ட முறைகளில் இந்துக்கள் தத்தெடுக்கலாம்.

தத்தெடுப்பவர், 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்,. மனைவியோ அல்லது கணவனோ புத்திசுவாதீனம் இல்லாமல் இருந்தால், அவரின் சம்மதம் தத்தெடுப்பிற்குத் தேவைப்படாது.

ஆனால், நல்ல மன நிலையில் கணவனோ, மனைவியோ இருந்தால், இருவரின் மனப்பூர்வமான சம்மதம் தத்தெடுப்பிற்கு மிகவும் அவசியம்.

சொத்துரிமை:

உயில் எழுதாமல் ஒருவர் தன் சொத்துக்களை விட்டுவிட்டு இறந்து போனால் அவரது சொத்துக்களைப் பிரிக்க உதவுவது சொத்துரிமைச் சட்டங்கள், இதுவும் அவர்கள் சார்ந்த மதங்களின் அடிப்படையிலேயே பொருந்தும்.

இந்துக்களுக்கு இந்து வாரிசுரிமைச்சட்டம் பொருந்தும். அவர்கள், சொத்துக்களை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர்.

1. சுய சம்பாத்தியச் சொத்து
2. பரம்பரை சொத்து

சுய சம்பாத்தியச் சொத்து:

இறந்து போனவருடைய ஆண் வாரிசுகளுக்கு ஈடாக மனைவி, மகள் போன்றவர்களுக்கும் சொத்தில் சமப்பங்கு உண்டு.

திருமணமான ஒரு ஆண் இறந்து போனால், அவருடைய தாய், மனைவி, குழந்தைகள் அனைவருக்கும் அவரது சொத்தில் சமப்பங்கு உண்டு.

கிறிஸ்தவர்களுக்கும், சிறப்புத் திருமணச் சட்டபடி திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், இந்து வாரிசு உரிமைச்சட்டம் பொருந்தும்.

முஸ்லிம் பெண்களுக்கு அவர்களது மதச் சட்டம் தான் பொருந்தும்.

ஓர் இந்து அல்லது கிறிஸ்தவர், தன்னுடைய சுய சம்பாத்தியம் முழுவதையும் தனக்கு விருப்பமுள்ளவர் பெயரில் உயில் மூலம் எழுதி வைக்கலாம். ஆனால், ஒரு முஸ்லிம், தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே மகனுக்கும், எட்டில் ஒரு பங்கினை மனைவிக்கும், ஒரு பங்கு மட்டுமே மகளுக்கும் உயில் மூலம் தர இயலும்.

பரம்பரைச் சொத்து:

பரம்பரைச் சொத்து, இந்துக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கிறிஸ்துவ, இஸ்லாமிய சட்டங்கள் பரம்பரைச் சொத்தினை அங்கீகரிப்பதில்லை.

இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி. பரம்பரைச் சொத்தில், கொள்ளுபேரன், பேரன், தந்தை, தாத்தா ஆகிய ஆண் வழியாக வரும் ஆண்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை உண்டு.

பெண்களுக்கும் பெண் வழியாக வரும் ஆண்களுக்கும் பரம்பரைச் சொத்தில் உரிமை கிடையாது.

விதவைகளுக்கும், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் பூர்வீக வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு.

பரம்பரைச் சொத்தில் பங்கு பெறும் ஆண்களில் எவரேனும் இறந்து போனால், சொத்தில் அவரது பங்கு அவரது வாரிசுகளிடையே ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இந்த வாரிசுகளில் எவரேனும் ஏற்கெனவே இறந்து போயிருந்தால், அவருக்குக் கிடைக்க வேண்டிய பங்கு, அடுத்துள்ள அவரது வாரிசுகளிடையே ஆண், பெண் பாகுபாடின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

குடும்பத்தில் ஆண் வாரிசுகள் மட்டும் சொத்தைப் பகிர்ந்து கொண்டால், பாதிக்கப்பட்ட பெண் வாரிசுகள், நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துத் தங்கள் பங்கினைப் பெறலாம்.

1989-ஆம் ஆண்டில், தமிழக அரசு சொத்துரிமைச் சட்டப்படி, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு.

ஆனால், 1989-ஆம் ஆண்டிற்கு முன்பு பாகப்பிரிவினை செய்யப்பட்ட பரம்பரைச் சொத்துக்களில், பெண்கள் பங்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு செய்ய முடியாது.
இந்திய தண்டனைச் சட்டம் 1860, ஆண், பெண் ஆகியோரின் உடைமை அல்லது சொத்து ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

அடுத்த இதழில்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com