முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
புதிய தீம் மினி கொலுப்படி!
By - ஸ்ரீதேவி | Published On : 13th October 2021 12:00 AM | Last Updated : 15th October 2021 09:21 PM | அ+அ அ- |

சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களின் நவராத்திரி மற்றும் தீபாவளி - 2021 சிறப்பு விற்பனைக் கண்காட்சி சமீபத்தில் தொடங்கியுள்ளது.
அக்டோபர் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் 55 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, அதில், சுமார் 122 மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இக்கண்காட்சியில் ஓர் அரங்கு அமைத்திருக்கும் கடலூரைச் சேர்ந்த ஷகிலா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""நான் கடலூர் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக சென்னையில் இந்த மகளிர் வளாகத்தில் நடைபெறும் நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சியில் கலந்து கொண்டு பொம்மைகளை விற்பனை செய்கிறேன்.
நாங்கள் மண் பொம்மைகள், பேப்பர் கூழ் பொம்மைகள் போன்று பல்வேறுவிதமான பொம்மைகளை தயார் செய்து 500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரையில் விற்பனை செய்கிறோம்.
அதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரிக்காக புதுப்புது தீம்களில் பொம்மைகள் செய்வோம். அந்தவகையில் இந்த ஆண்டு 5 படிகளும், 23 பொம்மைகளும் கொண்ட மினி கொலுப்படி செய்திருக்கிறோம். இது புத்தம் புதிய தீம். வேறுயெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொதுமுடக்கத்தால் முடங்கிவிட்டதால், ஏற்கெனவே உற்பத்தி செய்த பொம்மைகளே தேங்கிகிடப்பதால், அவைகளை விற்பதே எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
ஆண்டுதோறும் அதிகளவில் விற்பனை ஆகும் பொம்மைகள் என்றால் அது அஷ்டலஷ்மி செட், கார்த்திகைப் பெண்கள், தசாவதாரம், கல்யாண செட் போன்றவைதான்'' என்கிறார்.