உணர்வுகளின் வெளிப்பாடே ஓவியம்!

"ஒருவர் தனது மன உணர்வுகளை எழுத்துக்களின் மூலமாக வெளிபப்டுத்தினால் அவர் கவிஞர். அதேபோல, மன உணர்வுகளைத் தூரிகையால் வெளிப்படுத்தினால் அவர் ஓவியர்.
உணர்வுகளின் வெளிப்பாடே ஓவியம்!

"ஒருவர் தனது மன உணர்வுகளை எழுத்துக்களின் மூலமாக வெளிபப்டுத்தினால் அவர் கவிஞர். அதேபோல, மன உணர்வுகளைத் தூரிகையால் வெளிப்படுத்தினால் அவர் ஓவியர். நான் இரண்டாவது ரகம்" என்கிறார் கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜிதா கார்த்திகேயன்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது கோவையில். தனியாகவும், பிற ஓவியர்களோடு இணைந்தும் ஓவியக் கண்காட்சிகள் நடத்தி இருக்கிறார். கார்பரேட் நிறுவனங்களுக்காக ஓவியக் கண்காட்சிகளை நடத்திக் கொடுத்திருக்கிறார். தற்போது பள்ளி மாணவர்களுக்கு கலை வரலாறு, கலை ரசனை மேம்பாடு குறித்து வகுப்புகள் எடுத்து வருகிறார். ஜிதா கார்த்திகேயனுடன் ஓர் பேட்டி:

நீங்கள் ஓவியரானது எப்படி?

கேரளாவில் இருந்து எங்கள் குடும்பம் கோவைக்கு இடம் பெயர்ந்து விட்டாலும், எங்களுக்கு கேரளா வயநாடு பகுதியில் எஸ்டேட்கள் இருக்கின்றன. என் அப்பாவுக்கு ஓவியத்தில் ஆர்வம் அதிகம். வயநாடு செல்கிற சமயங்களில், எஸ்டேட்டில் இருக்கும்போது ஓய்வு நேரத்தில் இயற்கையை ரசித்து, அவற்றை ஓவியங்களாகத் தீட்டுவது அவரது பழக்கம். பல சமயங்களில் அவர் வயநாட்டில் இருந்து திரும்பி வரும்போது தான் வரைந்த இயற்கைக் காட்சி ஓவியங்களை கையோடு எடுத்துக் கொண்டு வருவார். அந்த ஓவியங்கள் எங்கள் வீட்டு சுவர்களை அலங்கரிக்கும். அவற்றைப் பார்த்து வளர்ந்த எனக்கு இயற்கையாகவே ஓவிய ஈடுபாடு ஏற்பட்டது.

அது மட்டுமில்லாமல், நான் இயற்கையில் அதிர்ந்து பேசாத, அமைதியான டைப். எனவே, சிறு வயது முதலே, நான் எனக் குள்ளே ஏற்படும் உணர்வுகளை நோட்டுப் புத்தகத்தில் படங்களாக வரைவேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வாட்டர் கலர், ஆயில் பெயின்டிங் போன்றவற்றை நானாகவே முயற்சித்தேன். ரவிவர்மா போன்ற இந்திய ஓவியர்களின் ஓவியங்களை ஆர்வத்துடன் கவனிப்பேன். பெங்களூரில் நடந்த ஓர் ஓவியப் போட்டிக்கு நான் மூன்று ஓவியங்களை அனுப்பி வைத்தேன். அவற்றில் ஒன்றுக்கு பரிசு கிடைத்தது. இவைதான் என்னை பிற்காலத்தில் ஒரு ஓவியராக பரிணாம வளர்ச்சி அடையச் செய்தன.

சமூக பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையில் உங்கள் ஓவியங்கள் இருக்கின்றனவே...

நான் முன்னே குறிப்பிட்டது போல, நான் எனது மன உனர்வுகளை தூரிகையின் மூலமாக வெளிப்படுத்துகிறேன். என்னைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை, நான் ஒரு பார்வையாளராக சமூகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறேன். அந்த அக்கறை என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கங்களை நான் தூரிகையின் மூலமாக ஓவியங்களாக வெளிப்படுத்துகிறேன். ஓவியங்கள் பொதுவான காட்சிப் பொருளாக இருப்பதைவிட, சமூக அக்கறையை வெளிப்படுத்துவ து சிறப்பு என்று நான் நினைக்கிறேன்.

அத்தகைய அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்ட சமயத்தில் அங்கே பணிபுரிந்த பலபெண் தொழிலாளர்களை நான் கூர்ந்து கவனித்தேன். அவர்களின் உடல் உழைப்பில் பெரிய கட்டடம் உருவானதும், அவர்கள் வேறு இடத்தில் இன்னொரு கட்டிடத்தை உருவாக்க புறப்பட்டுவிடுகிறார்கள். அங்கே கட்டட வேலை முடிந்தவுடன் வேறு ஒரு இடம். இப்படி முகமில்லாத அந்த பெண்தொழிலாளர்களின் வாழ்க்கை என் மனதை அழுத்தியது. பெண் கட்டடத் தொழிலாளர்களை ஓவியமாக வரைந்தேன்.

அதே போல என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு விஷயம் சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள். ஒரு பல அடுக்கு அலுவலகக் கட்டட வளாகத்தின் தரைத் தளத்தில் கழிவு நீர் அடைத்துக் கொள்ள, அதை உள்ளே இறங்கி சுத்தம் செய்தார் ஒரு தொழிலாளி. அந்த நவீன தொழில்நுட்ப அலுவலகங்களுக்கு நேர் எதிரானது அங்கே நடந்த விஷயம்.. ஒரு வசதியான வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக பணியில் அமர்த்தப்பட்ட சிறுமி எனது கவனத்தை ஈர்த்தாள். இதுபோன்ற, என் மனதில் தாக்கம் ஏற்படுத்தியவையும், அந்த உணர்வுகளுமே என்னிடமிருந்து ஓவியங்களாக வெளிப்பட்டன.

பெண்களுக்கு இழைக்கபப்டும் பாலியல் ரீதியான வன்முறையை மையமாக வைத்து நான் வரைந்த ஓவியம் ஒன்று புதுச்சேரியில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. முதல்நாளே, அந்த ஓவியத்தை வாங்க ஒருவர் விரும்பியதால், நானும் அவருக்கு விற்பதற்கு சம்மதித்துவிட்டேன். அடுத்த நாள் கண்காட்சிக்கு வந்த ஒரு ஐரோப்பியப் பெண்மணி தனக்கு அந்த ஓவியம் வேண்டும் என்று கேட்க, நான் "அது ஏற்கெனவே விற்பனையாகிவிட்டது!" என்றேன். ஆனால் அவர் விடவில்லை. அந்த ஓவியத்தை எப்படியும் தனக்கு வேண்டும்" என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார். நான் குழம்பிவிட்டேன். அவர், "நானும் அப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண். அதனால்தான் இந்த ஓவியத்தை கட்டாயம் வாங்க விரும்புகிறேன்" என்று வெளிப்படையாகச் சொன்னபோது, நான் அதிர்ச்சிக்குள்ளானேன். ஏற்கனவேவிற்க ஒப்புதல் அளித்தவரிடம் மீண்டும் பேசி, அவரது சம்மதம் பெற்று, ஐரோப்பியப் பெண்மணியிடம் அவர் விரும்பிய ஓவியத்தைக் கொடுத்தேன். அவர் உணர்ச்சி பொங்க நன்றி கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை பற்றி ஆய்வு செய்து ஓவியம் வரைந்திருக்கிறீர்களே?

"குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் தாய்மார்களே தங்கள் குழந்தையை அது பெண் என்பதால் கொல்லும் கொடூரம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. தருமபுரி மாவட்டத்தின் சில கிராமங்களுக்குச் சென்று அந்தப் பிர்ச்னை பற்றி பலரிடமும் பேசி, நிறைய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். அது பற்றி நிறைய யோசித்தேன். அதன் தாக்கத்தை ஓவியங்களாக்கினேன். அது ஒரு முக்கியமான, என்றென்றுன் மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

இந்திய ஓவியங்களுக்கும், ஐரோப்பிய ஓவியங்களுக்கும் என்ன வித்தியாசம்?

நம் நாட்டில் ஓவியம் உட்பட எந்தக் கலையின் வரலாறும் ஆவணபப்டுத்தப்படவில்லை. ஆனால், ஐரோப்பாவில் "ஆர்ட் ஹிஸ்டரி" பற்றி ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. ஓவியங்களைப் பொறுத்தவரை, நம் நாட்டு ஓவியர்களின் ஓவியங்களில் தெளிவான கம்யூனிகேஷன் இருக்கும்; அவைகளைப் பார்க்கிறபோதே ஒரு துளியாவது இந்திய கலாசாரத் தன்மை கண்ணில் படும். ஐரோப்பிய ஓவியங்களில் அப்படி இருக்காது. மேலும் பெரும்பாலானவை "அப்ஸ்டிராக்ட்" ரகத்தைச் சேர்ந்தவை. எனவே, அந்த ஓவியங்களை வைத்து, ஒவியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்க முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com