கதை சொல்லும் குறள் - 49:  காலம் வரும் !

வானவராயன் முன்னேறத் துடிக்கும் இளைஞன். சென்னை டெய்லரிங் இன்ஸ்டிடியூட்டில் படித்தவன். தைப்பதற்கு முன் அளவு எடுத்து, துணிகளை வெட்டித் தருவதில் வல்லவன்.
கதை சொல்லும் குறள் - 49:  காலம் வரும் !

வானவராயன் முன்னேறத் துடிக்கும் இளைஞன். சென்னை டெய்லரிங் இன்ஸ்டிடியூட்டில் படித்தவன். தைப்பதற்கு முன் அளவு எடுத்து, துணிகளை வெட்டித் தருவதில் வல்லவன். ஒரே நாளில் கோட், சூட் தைக்கும்  பிரபல  ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோட், சூட்களுக்கான துணிகளை வெட்டித் தைத்துக் கொடுப்பதற்காகச் செல்லுவான்.

வானவராயன், கைப்பட்டால் கச்சிதமாக வாடிக்கையாளர்கள் உடம்பில் சிக்கென்று ஆடைகள் அமர்ந்து விடும். ஆண்கள், தங்கள் திருமண நிகழ்வுகளுக்கும், வேறு விசேஷங்களுக்கும் ஆடைகளைத் தைக்க வேண்டும் என்றால், அந்தக் கடையில் வானவராயன் வேலை பார்க்கிறான் என்றால் மறு பேச்சு பேசாமல், அளவு கொடுக்க வந்துவிடுவார்கள்.

தீபாவளி சீசன் முடிந்த பிறகு கிடைத்த பணம், கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிக் கொண்டே வந்தது. அடுத்து மார்கழி மாதம் கழிந்து தை பிறக்கும் பொழுது மீண்டும் கல்யாண சீசன் தொடங்கி விடும். துணிகள் தைக்க ஆர்டர்கள் வரத் தொடங்கிவிடும்.

ஜூன் மாதம் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கும் பொழுது, மகன்களுக்கு பீஸ் கட்ட, யூனிபார்ம், புத்தகங்கள் வாங்க என்று விழிகள் பிதுங்கிவிடும்.

இரண்டு மகன்களும் கான்வென்டில் படிப்பதினால், வருடா வருடம் படிப்புக்கே நான்கு லட்சங்களை எடுத்து வைக்க வேண்டியிருந்தது.

ஒரு வழியாக, தை மாசம் பிறந்ததும், தையல் வேலை வேகம் பிடித்தது. கொஞ்சம் கையில் பணம் சேர்ந்தது, வானவராயனுக்கும் சொந்தமாகத் தொழில் ஒன்றை ஆரம்பிக்க ஆசைதான், தக்கக் காலத்திற்காகக் காத்திருந்தான்.

2020 மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்தே, தொலைக்காட்சிப் பெட்டியிலும், தினசரித் தாள்களிலும் கரோனாவைப் பற்றியே செய்திகள் வரத் தொடங்கின. திடீரென்று ஒருநாள் பொதுமுடக்கத்தை நாடு முழுவதிலும் அறிவித்தனர். இதனால் இந்தியாவுக்குள் ஊடுருவி இருக்கும் கரோனா தொற்றுக் கிருமிகளை மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்றனர்.

அவ்வளவுதான், ஹோட்டல்கள், மால்கள், ஜிம், அழகு நிலையங்கள், அலுவலகங்கள் என்று எல்லாம் முடங்கிப் போயின. பெரிய பெரிய நிறுவனங்களுக்கே இந்தக் கதி என்றால், சிறு தொழில்களின் நிலைமையைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை.

எல்லாத் துணிக்கடைகளும்  மூடுவிழாவை அரங்கேற்றின. வானவராயனுக்குச் சுத்தமாக, வேலை என்பது இல்லாமல் போனது. ஜனங்கள் வயிற்றுப் பாட்டிற்கே வழி தெரியாமல் திண்டாடிய பொழுது, துணிகளைத் தைக்கக் கொடுப்பார்களா என்ன?

வானவராயனின் கைகளில் இருந்த சேமிப்பு கரைய ஆரம்பித்தது. உட்கார்ந்து தின்றால் பெருஞ்செல்வமும் காலியாகிவிடும் என்றால், வானவராயன் போன்ற நடுத்த மக்களின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா?

""என்னங்க'', என்றாள் பூரணி.

மோட்டுவளையைப் பார்த்தபடி படுத்திருந்த வானவராயன் ""என்ன?'' என்றான்.
""வீட்டுலே ஒரு குந்துமணி அரிசிக் கூட இல்லைங்க. நீங்க போன மாசம் வாங்கிப் போட்ட அரிசி மூட்டை இன்று வரை கைக் கொடுத்தது' நாளை அதுவுமில்லை'.

""சை, எப்பப் பார்த்தாலும் இல்லை இல்லைன்னு, தேய்ந்துப் போன ரிகார்டர் மாதிரி புலம்பு. போ, ரேஷன் கடையிலே அரசாங்கம் இனாமாப் மளிகைப் பொருட்களைக் கொடுக்கறாங்கல்ல அதை வாங்கியாந்து சமையல் செய்''.

கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி பூரணி நின்றிருந்தாள்.

""மகாராணி ரேஷன் கடைக்குப் போகமாட்டாங்க, சரி பையைக் கொடு நான் போறேன்''.

வானவராயன் தெருவில் இறங்கி நடந்தான். சிறிது தொலைவுதான் சென்றிருப்பான். பிட்டத்தில் பலமாக அடி ஒன்று விழ, ""ஐயோ'' என்று கத்திக் கொண்டே திரும்பினான். மேலும் பட படவென்று முதுகிலும் காலிலும் அடிகள் விழுந்தன.

""அறிவு கெட்ட முண்டமே, மாஸ்க்கு கூடப் போடாமல் வெளியிலே வரியா. உங்களைப் போன்ற சாவு கிராக்கிங்களாலேதான், கரோனா பயங்கரமாப் பரவுது. நாங்க இந்த வேகாத வெயில்லே வெந்து, வியாதி பரவாமல் இருக்கப் போராடறோம், துரை ஊர்வலம் வராரு, போடு இருபது தோப்புக்கரணம்'' என்று போலீஸ் ஒருவர் மிரட்ட, வானவராயன் மேலும் அடிகள் விழாமல் இருக்கத் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தான்.

வீட்டுக்குப் பெரும் சோகத்துடன் வானவராயன் திரும்பி வந்தான். பூரணியிடமும், மகன்களிடத்திலும் தான் அடி வாங்கியதைச் சொல்லவில்லை. போலீஸ்காரர் சொன்னதிலும் நியாயம் இருக்கத்தானே செய்தது.

ஒரு மாஸ்கின் விலை நூறு ரூபாய் என்றனர். ஐயோ குடும்பத்தில் உள்ள நான்கு பேர்களுக்கும் சேர்த்து வாங்கினால் நானூறு ரூபாய்-! அந்தப் பணம் இருந்தால் ஒரு வாரம் சாப்பாட்டுச் செலவுக்கு ஆகுமே என்று எண்ணினான்.

பிறகு வீட்டில் இருந்த சிறிது பழசான துணிகளைக் கொண்டு, மாஸ்டர் தையல்காரனான வானவராயன் தன் குடும்பத்தின் தேவைக்கான மாஸ்க்குகளைத் தயாரித்தான்.

கச்சிதமாக, நேர்த்தியாக அவனால் மாஸ்க்குகளைத் தயாரிக்க முடிந்தது. வேலை எதுவும் இல்லாமல் சோர்ந்துப் போயிருந்த வானவராயனுக்கு மின்னலென ஒரு ஐடியா தோன்றியது, அதைச் செயலாற்றத் தொடங்கினான்.

தன் வீட்டின் பின் பக்கத்தில் இரண்டு தையல் மிஷின்களை வாடகைக்கு வாங்கிப் போட்டான். தன்னோடு கடைகளில் தைக்கும் தொழிலைச் செய்து வந்த இரண்டு பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். தனக்குத் தெரிந்த துணிக்கடை முதலாளிகளிடம் துணிகளை வாங்கி, மாஸ்க்குகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டான்.

காலம் வாய்ப்பாக அமைந்ததும் கொக்குப் போல பொறுமையாக இருந்த அவன் சடக்கென்று கொத்தி எடுத்துவிட்டான், சொந்தத் தொழிலைத் தொடங்கி, நல்ல லாபம் பார்க்கிறான். கரோனாவோடு, வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள், அப்படியென்றால் மாஸ்க்கோடு வாழ வேண்டும். இனி வானவராயன் முதலாளிதான்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து; மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

(குறள்: 490)

பொருள்: காலம் கைகூடும் வரையில் கொக்குப் போல பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com