கொலு: எம்.எஸ். வாழ்க்கை!

நவராத்திரி சீசனில் ஒரு சிலர், தங்கள்வீட்டு கொலுவில் புதுமையாக ஏதாவது செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுவது வழக்கம்.
கொலு: எம்.எஸ். வாழ்க்கை!

நவராத்திரி சீசனில் ஒரு சிலர், தங்கள்வீட்டு கொலுவில் புதுமையாக ஏதாவது செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெறுவது வழக்கம். அவற்றில் வெகு சில ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதும் உண்டு. அந்த வகையில் இந்த வருடம்  சன்டிவி செய்தி வாசிப்பாளரான ரத்னா வீட்டு கொலு பல தரப்பினரது பாராட்டுகளையும் பெற்றது.

அப்படி  ரத்னா வீட்டின் கொலுவில் சிறப்பு என்ன? பாரத ரத்னா விருது பெற்ற எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு  அவர் வீட்டு நவராத்திரி கொலுவில் இடம் பெற்றிருக்கிறது. இதைப் பற்றி அவரே சொல்கிறார்:

உங்கள் வீட்டு கொலு பற்றி?

பல  ஆண்டுகளாக எங்கள் வீட்டில் நவராத்திரி கொலு வைத்து வருகிறோம். என்றாலும், கடந்த பத்து, பன்னிரெண்டு வருடங்களாக வழக்கமான கொலுப் படிகளில் வைக்கும் பொம்மைகள் தவிர ஒரு ஸ்பெஷல் தீம் யோசித்து, அதற்குத் தக்கவகையில் கொலு வைப்பதையும் செய்து வருகிறேன். திருவண்ணாமலை, சபரிமலை, கிராமத்து கோயில் திருவிழா, திருமணம் போன்ற தீம்கள் என்று கடந்த வருடங்களில் கொலுவில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில் இந்த வருடத்தின் தீம் எம்.எஸ். அம்மாவின் வாழ்க்கை. 

திருமதி எம்.எஸ். அவர்களின் வாழ்க்கையை வைத்து கொலு வைக்கும் ஐடியா எப்படி வந்தது?

இந்த வருடம் புதுமையாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, பல ஐடியாக்கள் தோன்றினாலும், இது மிக நன்றாகவும், கிரியேட்டிவ்வாகவும் இருக்கும் என்பதால் இதையே கொலுவில் இடம்பெறச் செய்யலாம் என முடிவு
செய்தேன்.

அதற்காக என்ன முன் பணிகள் தேவையாக இருந்தன?

சுமார் இரண்டு மாத காலம் இதற்காக உழைக்க வேண்டி இருந்தது. முதலில் அவரது வாழ்க்கை கதையை படித்து அவர் வாழ்க்கையில் இடம்பெற்ற பதினெட்டு மிகவும் முக்கியமான தருணங்களை, சம்பவங்களை பட்டியல் போட்டுக் கொண்டேன். 

ஆனால், பதினெட்டு விஷயங்களை கொலுவில் இடம்பெறச் செய்ய வேண்டுமானால்,  அதற்கு நிறைய இடம் தேவைப்படம். பார்க்கிறவர்களும் பொறுமையாக பார்த்து ரசிப்பார்களா என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அவற்றிலிருந்து பதினோரு மிக முக்கியமான கட்டங்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன். தெர்மோகோல் கலைஞர்களைக் கொண்டு அவற்றுக்கு வடிவம் கொடுத்தேன். எங்கள் வீட்டின் சாப்பாட்டு மேஜையை ஒரு அறையின் மையத்தில் வைத்து, அதன் மேல் பதினொரு விஷயங்களையும் இடம்பெறச் செய்தேன்.

நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்கள் என்னென்ன?

மதுரையில் எம்.எஸ், அவர்கள் பிறந்த வீடு, சிறுமியாக, அவர் கும்பகோணம் மகாமகத்தின்போது செய்த முதல் மேடைக் கச்சேரி,  சென்னை மியூசிக் அகாதமி கச்சேரி, திருநீர்மலை கோயிலில் நடந்த சதாசிவம்- எம்.எஸ்.  திருமணம், ஐ.நா. சபை மற்றும் லண்டன் கச்சேரிகள், அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "மீரா' திரைப்பட வெளியீடு, அவர்கள் வசித்த கீழ்ப்பாக்கம் கல்கி கார்டன், கடைசியாக காற்றில் கலந்த எம்.எஸ். என மொத்த 11 தருணங்கள் கொலுவில் இடம்பெற்றன.

அவற்றுக்கு  செயல்வடிவம் கொடுத்த அனுபவம் பற்றி?

ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான எம்.எஸ். அம்மா பாடிய பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தந்த தருணங்களில் ஓரிரு நிமிடங்களுக்கு ஒலிக்கும்படிச் செய்திருந்தோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், எம்.எஸ். அம்மாவின் மதுரை வீடு, கல்கி தோட்டம் போன்றவற்றின் புகைப்படங்களை வைத்து தெர்மோகோலில் மாடல்கள் உருவாக்கியது இனிய அனுபவம். 

மியூசிக் அகாதெமி, ஐ.நா. மற்றும் லண்டன் கச்சேரிகளின் போது எடுக்கப்பட்ட ஒரிஜினல் புகைப்படங்களின் அடிப்படையில் உருவாக்கிய கட் அவுட்களை வைத்தோம். திருநீர்மலை கோயிலின் மாடல், கோயிலில் இருந்து அவர்கள் திருமணம் முடிந்து மாலையும், கழுத்துமாக இறங்கிவருவது போன்ற கட் அவுட் இன்னொரு முக்கியமான அம்சம். 

கொலுவில் பெருமளவில் பார்வையாளர்களைக் கவர்ந்த அம்சம் எது?

கடைசியாக எம்.எஸ். அவர்களின் மறைவைக் குறிக்கும் கட்டத்தை எப்படி காட்சிப்படுத்துவது என்பதுதான் பெரிய சவாலாக இருந்தது.

கடைசியில் அவரை ஓர் தெய்வீகப் பிறவி என்பதன் குறியீடாக, அவர் பாடுகிற போஸில் ஒரு கட் அவுட். அது, அப்படியே மேலெழுந்து விண்ணுக்குச் செல்வதாகவும்,  அங்கே தேவர்கள் அவருக்கு ஆசி வழங்குவதாகவும் அமைத்தோம். அதை  பலரும் வெகுவாகப் பாராட்டினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com