பார்வையற்றவர்களும் கால்பந்து விளையாடலாம்!

பார்வையற்றவர்களும் கால்பந்து விளையாடலாம்!

தேசிய அளவில் பெண்கள்  பார்வையற்றோருக்கான  கால்பந்தாட்ட விளையாட்டு  சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட், மான்ட்ஃபோர்ட் பள்ளியில்   அக்டோபர்  27  - 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

தேசிய அளவில் பெண்கள் பார்வையற்றோருக்கான கால்பந்தாட்ட விளையாட்டு சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட், மான்ட்ஃபோர்ட் பள்ளியில் அக்டோபர் 27 - 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பெண்களுக்கான விளையாட்டும், மற்ற மூன்று நாள்கள் ஆண்களுக்கான விளையாட்டும் நடைபெறுகிறது. இதில் முதன்முறையாக தமிழ்நாட்டின் சார்பில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு பார்வையற்றோர் கால்பந்தாட்ட கழகம் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

இதுகுறித்து தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் செயலாளர் சந்திரசேகர் நம்மோடு பகிர்ந்து கொண்டவை:

""பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் என்பதே தமிழ்நாட்டிற்கு புதிதான ஒன்றுதான். கடந்த 2018 முதல் ஆண்கள் பார்வையற்றோருக்கான கால்பந்தாட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், பார்வையற்றோருக்கு தேவையான நல உதவிகளை செய்து தருவது எங்கள் சங்கத்தின் பணியாகும்.

கால்பந்தாட்டப் பயிற்சியாளரான செபஸ்ட்டின் பிரான்ஸிஸ் என்பவர், ஒருமுறை வெளியூர் மேட்ச் ஒன்றிற்கு சென்றிருந்தபோதுதான், அங்கே பார்வையற்றோர் கால்பந்தாட்டம் விளையாடுவதை பார்த்துவிட்டு, எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்து கொண்டு வந்தார்.

இங்கு வந்தபிறகு, பார்வையற்றோருக்கான கால்பந்தாட்ட பயிற்சி குறித்து அறிவித்திருந்தார். அதை அறிந்து லயோலா கல்லூரி மாணவர் பாரதிராஜா என்பவர் இதில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

அவர் மூலமாகவே, பார்வையற்ற மற்ற பலரையும் திரட்டி ஒரு அணியாக உருவாக்கி பயிற்சியளிக்க தொடங்கினார் செபஸ்டின். அந்த சமயத்தில் கேரளாவில் ஒரு டோர்னமெண்ட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நமது போட்டியாளர் நன்றாக விளையாடினார்கள். அதன்மூலம் அவர்களுக்குள் நம்பிக்கையும், ஆர்வமும் ஏற்பட்டது.

அதன்பிறகு தொடங்கப்பட்டதுதான், தமிழ்நாடு பார்வையற்றோர் கால்பந்தாட்ட கழகம். தற்போது 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த கழகத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பார்வையற்ற பெண்களுக்கும் கால்பந்தாட்ட பயிற்சியளிக்கலாமே என்ற எண்ணம் வந்தது. பெண்கள் பலரும் ஆர்வமுடன் வந்தனர். ஒரு டீமில் 6 பெண்கள், 1 கோல் கீப்பர் இருப்பர். அதில் கோல் கீப்பர் பார்வையுள்ளவராக இருப்பார். தற்போது 6 பெண்கள் அணி இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக பெண்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது முதன்முறையாக தமிழ்நாடு சார்பில், தேசிய அளவில் இவர்கள், விளையாடப் போகிறார்கள். தமிழ்நாடு, பாண்டிச்சேரி என இரண்டு டீமாக பிரிந்து விளையாடுகிறார்கள்.

பார்வையற்றவர்கள் எப்படி கால்பந்து விளையாட முடியும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். பார்வையற்றவர்களுக்காக பிரத்யேகமாக இந்த கால்பந்து தயாரிக்கப்பட்டுள்ளது. பந்தின் உள்ளே சலங்கைகள் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால், பந்து எந்த திசையில் உருண்டு வருகிறது என்பதை அது எழுப்பும் ஒலியை வைத்து அறிந்து விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் பார்வையற்றவர்களைப் பொருத்தவரை, ஆண் - பெண் என்ற வித்தியாசம் பெரிதாக தெரியவில்லை.

எந்த ஒரு விளையாட்டுக்கும், போட்டியாளர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்துவோம். ஆனால், இவர்களது விளையாட்டில் அமைதியான சூழல்தான் மிகவும் முக்கியம். அப்போதுதான் அவர்களுக்கு சத்தம் எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பொதுவாக பார்வையற்றவர்களுக்கு உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் குறைவு. இதனால்தான் நிறைய பார்வையற்ற குழந்தைகள் உடல் பருத்து காணப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த விளையாட்டு என்பது மிகவும் பயனுள்ளதாகவும் தன்னம்பிக்கை அளிப்பதாகவும் நிச்சயம் இருக்கும். அதுபோன்று, பார்வையற்றோரும் நமது சமுதாயத்தில் ஓர் அங்கம். அவர்களாலும் நம்மால் செய்ய முடிந்ததை செய்ய முடியும் என்பதை அங்கீகரிக்கும் நோக்கமே இந்த கால்பந்தாட்ட விளையாட்டு'' என்றார்.

போட்டியாளர்களில் ஒருவரான ஆர். விஜயலட்சுமி, நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""எனக்கு 90 சதவீதம் பார்வை கோளாறு உள்ளது. பத்து சதவீதம்தான் பார்வை தெரியும். பி.ஏ. வரலாறு, இரண்டாம் ஆண்டு ராணி மேரி கல்லூரியில் படித்து வருகிறேன். என் கல்லூரி தோழி ஒருத்தி மூலமாகதான் பார்வையற்றோருக்கான என்று கால்பந்தாட்டம் இருக்கிறது என்று கேள்விபட்டு இந்த டீமுக்குள் வந்தேன். கடந்த ஓராண்டாக பயிற்சி பெற்று வருகிறேன்.

விளையாட்டைப் பற்றி தெரிந்தபோது, இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்தாலும், நம்மால் முடியுமா? என்ற தயக்கமும் இருந்தது. இருந்தாலும், போய்தான் பார்ப்போமே என்று சென்றேன். அங்கே நிறைய பெண்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போதே நானும் விளையாட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது.

ஆனால், எங்கள் கோச் பயிற்சி அளிக்க ஆர்வம் அதிகமானது. இப்போது, நார்மலானவர்களை விட நாங்கள் பெஸ்ட் என்று காண்பிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

முன்பெல்லாம் எந்த விஷயமாக இருந்தாலும் எனக்கு பார்வை குறைபாடு உள்ளதால், என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணம் அதிகமாக இருக்கும். கால்பந்து விளையாட ஆரம்பித்தவுடன், எனக்கான தேவைகளை தனியாக நானே செய்து கொள்ள முடியும் என்ற தைரியம் ஏற்பட்டுள்ளது.

பார்வையற்றவர்களையும் முன்னேற்ற வேண்டும் என்று நினைத்து, எங்களைப் போன்றோருக்கு கால்பந்தாட்ட பயிற்சி அளிக்க முன் வந்த கோச் செபஸ்ட்டின் சார் எங்களுக்குக் கிடைத்ததை வரமாக நினைக்கிறோம்.

தற்போது தேசிய அளவிலான டோர்னமெண்ட்டில் விளையாடப் போகிறோம். இந்த டீமில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூரு, புணே, புதுச்சேரி ஆகிய மூன்று டீமுடன் தற்போது மோதப் போகிறோம். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com