கதையும், எழுத்தும் தேடி தரும் வெற்றி!

திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கழித்து  கல்லூரி சென்று இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். "கதை சொல்லலில்'  கவனம் ஈர்த்தவர்.
கதையும், எழுத்தும் தேடி தரும் வெற்றி!

திருமணம் முடிந்து 8 ஆண்டுகள் கழித்து கல்லூரி சென்று இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர். "கதை சொல்லலில்' கவனம் ஈர்த்தவர். விலங்குகள் நலனுக்கான ஸ்கேன் பவுண்டேஷன் இந்திய அமைப்பின் தூதர், பேச்சாளர், எழுத்தாளர், சேரிட்டி ரேடியோவின் பண்பலைத் தொகுப்பாளர், தற்காப்பு கலையில் கைத்தேர்ந்தவர் என்று பன்முக வித்தகியாக இருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சரிதா ஜோ தன் வாழ்க்கைப் பயணம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

கதை சொல்லலில் அடைந்த அனுபவமும் வெற்றியும்?

கதை சொல்லல் வழியே குழந்தைகளோடு தொடர்ந்து நேரிலும் இணையம் வழியாகவும் பயணம் செய்யும் அனுபவத்தில் புதுப்புது கதைகளைத் தேடி வாசிப்பதில் வாசிப்பு விசாலமானது. கதைகள் மட்டும் கூறாமல் புத்தக அறிமுகம், ஆடல் பாடல், புதிர், வேடிக்கை, பாரம்பரிய விளையாட்டுகள் போன்ற பல்வேறு தகவல்களையும் கதை வடிவமாக கொடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னை ஒரு கதை சொல்லியாக மட்டும் பார்க்காமல் சில நேரங்களில் அத்தையாகவும் தோழியாகவும் பார்க்கும் சிறுவர்களின் கள்ளங்கபடம் இல்லாத உலகில் நானும் பயணம் செய்வதில் மகிழ்ச்சி.

பெண்களுக்கு தற்காப்பு கலையின் அவசியம் குறித்து?

16 வயதில் தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட்டும், முதுகலை பட்டமும் பெற்றது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு இன்றுவரை துணிவை தந்து கொண்டிருக்கிறது. பொதுவாக பாலியல் சீண்டல்களும் வன்புணர்வும் புது மனிதர்களிடம் இருந்து வருவதில்லை. நாம் அறிந்த மனிதர்களிடம் இருந்து தான் வருகிறது. தற்காப்புக் கலை பயின்றவர் என்றால் கண்டிப்பாக நிறைய யோசிப்பார்கள். சில டெக்னிக் தடுப்பு முறைகளையும் தற்காப்பு கலை வழியாக கற்று பாதுகாத்துக் கொள்ள முடியும். பெண்களுக்கு தற்காப்புக் கலை மட்டுமல்ல உளவியல் படிப்பும் படிக்க வேண்டும். நம்மை அணுகுபவரின் மனநிலையை அறிந்து கொண்டு அவர்களுடன் நட்புக் கொள்ள இது உதவும்.

எழுத்துலகில் பெண்கள் அடையும் சோதனையும் சாதனையும்?

எழுத்துலகில் பெண்கள் எந்த அளவுக்கு சோதனை அனுபவித்து இருக்கிறார்களோ அந்தளவுக்கு சாதனையும் செய்திருக்கிறார்கள். கோதைநாயகி அம்மா என்ற எழுத்தாளர் வீட்டிற்கு தெரியாமல் எழுதி பதிப்பகங்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். இதன்மூலம் அந்த காலத்தில் பெண்கள் எழுதுவதற்கு எவ்வளவு தடை இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. எழுதுவதற்கு மட்டுமல்ல பெண்கள் புத்தகங்களை வாசிப்பதற்கும் பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் தடை தொடரத்தான் செய்கிறது.

அதன் பிறகு வந்த எழுத்தாளர் சூடாமணி வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு உளவியல் சார்ந்த பல்வேறு கதைகளை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தன்னுடைய கதைகள் வழியாக. இவர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஏராளமான நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

ராஜம் கிருஷ்ணன் தான் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட தளங்களுக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து மனிதர்களின் வாழ்க்கை முறை, இன்ப துன்பங்கள், வாழ்வாதாரம் பற்றிய கதைகளை எழுதியது அன்றைய நாட்களில் சர்ச்சைக்குரியதாக இருந்தது.

முக்கியமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் அம்பை. இவருடைய "அம்மா ஒரு கொலை செய்தாள்' கதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பெண்களின் மனநிலையை, குழந்தைகளின் மனநிலையை இதைவிட விளக்கி கூறி விட முடியுமா?

இன்று எவ்வளவோ பெண் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சோதனைகளை கடந்து சாதனைகள் செய்கிறார்கள். குடும்பம், குழந்தை, வேலை என பல்வேறு பொறுப்புகளுக்கிடையே எழுத வரும் பெண்களை சிறந்த படைப்பாளியாக போற்றாவிட்டாலும் பராவயில்லை இனியாவது தூற்றாமலிருக்கட்டும்.

வானொலி பணி குறித்து?

பிடித்ததை செய்யும் போது மனம் பரவசமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். அந்த வகையில் பண்பலை தொகுப்பாளராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்தக் கனவு சேரிட்டி ரேடியோ வழியாக தீர்ந்தது. இந்தப் பயணத்தில் பல்வேறு ஆளுமைகளுடன் நேர்காணலுக்காக உரையாடியிருக்கிறேன். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டதும் ஏராளம்.

தன்னம்பிக்கை பேச்சு மூலமாக பெண்களுக்கு சொல்ல நினைப்பது?

திருமணம் முடிந்த பின் பெரும்பாலான பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை குடும்பம், குழந்தைகள், வேலை என்று சுருக்கிக் கொள்கிறார்கள். இலக்குகளை விட்டுவிட்டு தேவையில்லாத தொலைக்காட்சி தொடர்களிலும் பல்வேறு சமூக வலைத்தளங்கனிலும் நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலிருந்து வெளிவந்து ஒவ்வொரு பெண்ணும் தன் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். சுயமரியாதையோடு சொந்தக்காலில் நிற்கும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருவுடன் கதையாடல் நிகழ்ச்சி பற்றி?

நான் தேடிப்பார்த்த வரையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான கதை சொல்லல் இந்திய அளவில் தொடர் நிகழ்வாக நடந்தது இல்லை என்று நினைக்கிறேன். இதுவே முதல் முறையாக நடக்கிறது . இந்தக் கருவுடன் கதையாடல் தொடங்குவதற்கான காரணம் திருமணம் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பின்பு கருவுற்றிருந்த என்னுடைய சகோதரி அந்த நேரத்தில் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளான போது அதில் இருந்து வெளியே வர என்ன செய்யலாம் என்று பல ஆலோசனைகளுக்கு மத்தியில் கதைகள் வழியாகத்தான் அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வந்தார். கருவுற்றிருக்கும் பெண் தன் குழந்தை வருங்காலத்தில் மிகச் சிறந்த ஆளுமையாக வரவேண்டும் என்று எண்ணுவார். பிறந்த பின்பு ஒரு குழந்தையை ஆளுமையாக்க முடியுமா? அப்படியென்றால் வயிற்றுக்குள் இருக்கும் போதே மகிழ்வான நல்ல விஷயங்களை தன்னுடைய தாய் மூலமாக அக்குழந்தை கேட்கும் பொழுது தனக்கான சூழலை உருவாக்கிக் கொள்கிறது. இதைத்தான் கருவுடன் கதையாடல் என்ற தலைப்பில் தொடங்கியிருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com