எனக்கு பயமில்லை!

குழந்தைகளின் எதிர்காலம், கணவர் விட்டுச்சென்ற பணியை கைவிட்டால் வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியில்லாத நிலை என வாழ்க்கைச் சூழலால் ராமநாதபுரம் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் பணிபுரிகிறார்
எனக்கு பயமில்லை!

குழந்தைகளின் எதிர்காலம், கணவர் விட்டுச்சென்ற பணியை கைவிட்டால் வயிற்றுப்பாட்டுக்கு வேறு வழியில்லாத நிலை என வாழ்க்கைச் சூழலால் ராமநாதபுரம் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடையில் பணிபுரிகிறார் ஐம்பத்தைந்து வயதான ஜோதி. எடுத்துக்கொண்ட வேலையை சுத்தமாக செய்துவரும் ஜோதி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆயிரம் சடலங்களுக்கும் அதிகமாக எரியூட்டியுள்ளார்.

""சொந்த ஊர் கீழக்கரை. அப்பா கூலித்தொழிலாளி. 4 சகோதரர்கள், ஒரு சகோதரி இருந்த நிலையில், சிறுவயதிலேயே அம்மாவை இழந்துவிட்டேன். அப்பா செல்லமாக  வளர்த்தாலும் பள்ளிக்கு ஐந்தாம் வகுப்பு வரையே படித்தேன்.

ராமநாதபுரத்தில் கூலி வேலை செய்து வந்த ஜெகநாதனை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.  அவர், அவ்வப்போது சடலங்களை ஏற்றும் வாகனத்தில் சென்று வருவார். அதன்பின் ராமநாதபுரம் நகராட்சி இடுகாட்டில் பணிபுரியத் தொடங்கினார்.

எங்களுக்கு பிரகாஷ், தனுசு, திரிஷா என மூன்று குழந்தைகள் பிறந்தனர். கஷ்டத்திலும் குழந்தைகளை படிக்க வைத்தோம்.  அவருக்கு நான் அவ்வப்போது சாப்பாடு கொண்டு செல்வேன். அப்போது சடலங்கள் எரிந்த நிலையில், தூரத்திலிருந்து பார்ப்பதற்கே பயமாக இருக்கும்.

எனது பயத்தைப் போக்கும் வகையில் சடலம் எரியும் தகன மேடைக்கு அருகே எனது கணவர் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்வார். பயந்தபடி அங்கு செல்வேன்.

இந்தநிலையில், கணவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். கணவரின் வருவாயை நம்பி மட்டுமே அன்றாட சாப்பாட்டையும், குழந்தைகளின் கல்விச் செலவையும் நம்பிய எனக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. என்ன செய்வது...யாரிடம் போய் வேலை கேட்பது என திக்குத்தெரியாத நிலையில், துணிந்து ஒரு முடிவெடுத்தேன். கணவர் சடலம் எரியூட்டும் பணியில் இருந்த தொண்டு நிறுவன உரிமையாளரிடம் குடும்ப வறுமையை கூறி வேலை கேட்டேன்.

கணவர் செய்த வேலையை முடிந்த மட்டும் நான் செய்வதாக உறுதியளித்தேன். அரைகுறை மனதோடு சம்மதித்தனர்.  கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் சடலம் எரியூட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்பத்தில் அச்சமும், அழுகையுமாக இருந்த நான் இப்போது ஆக்கபூர்வமாக எரியூட்டும் பணியில் உள்ளேன்.

சடலங்களை எரியூட்டுவதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது. சடலம் கொண்டு வருவோர் அவ்வப்போது தரும் பணமும் உதவியாக உள்ளது. மூத்த மகன் பள்ளிப்படிப்போடு நிறுத்திவிட்டான். மகள் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இளையமகன் பள்ளியில் படிக்கிறான்.

கரோனா காலத்தில் விடிய விடிய சடலங்களை எரிக்கும் நிலை ஏற்பட்டது. மகனை துணைக்கு அழைத்துக் கொண்டு பணியில் ஈடுபட்டேன். ஆயிரக்கணக்கான சடலங்களை எரியூட்டினாலும், நான் 3 சடலங்களை எரியூட்டும் போது அழுதுவிட்டேன்.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களது சடலத்தை நான் எரித்தபோது அழுது கொண்டே எரித்தேன். கர்ப்பிணி இறந்த நிலையில், குழந்தையை தனியாக நானே எடுத்து எரித்தபோதும் மனது வலித்து அழுதுவிட்டேன்.

சடலங்களை எரித்தபோது கூட பயமில்லை. ஆனால், இரவில் சில சமூக விரோதிகள் போதையில் வந்து செல்வதைத்தான் என்னால் பயத்தோடு பார்க்கமுடிகிறது. பேய், பிசாசு என திரைப்படங்களில் வரும் காட்சிகள் சடலங்களை எரிக்கும் போது ஆரம்பத்தில் எனது மனதில் வந்து சென்றது. ஆனால், குழந்தைகளை வளர்க்கும் தாய்மை உணர்வு அந்தப் பயத்தையெல்லாம் போக்கிவிட்டது'' என்று யதார்த்தோடு சிரித்துக் கொண்டே  தத்துவத்தை உதிர்க்கிறார் ஜோதி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com